For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை சினிமா ஸ்டூடியோ அல்ல: விஜயகாந்த்துக்கு ராமதாஸ் 'அட்வைஸ்'

By Chakra
Google Oneindia Tamil News

Ramdoss
காஞ்சீபுரம்: அரசின் வருவாய்க்காக மது விற்பனையை அதிகரிக்கும் தமிழக அரசின் செயல் கண்களை விற்று சித்திரம் வாங்கும் செயல் ஆகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

காஞ்சீபுரத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் திரைப்படம், மது, இலவசம் ஆகியவற்றின் மூலம் மக்களை மயக்கி அவர்களின் மூளையை மழுங்கடித்து விட்டன. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இருந்து மக்களை மீட்பது எவ்வளவு முக்கியமோ அதை விட இந்த 3 தீமைகளில் இருந்து மக்களை மீட்பது முக்கியமாகும்.

மதுவை ஏழை மக்களுக்கு விற்பனை செய்து அதன் மூலம் அவர்களின் வருவாயையும் வாழ்வாதாரத்தையும் அரசே சுரண்டும் அவலம் தமிழ்நாட்டை தவிர உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை.

ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை இலவசங்களை வழங்கும் ஆட்சியாளர்கள் அதற்கான நிதியை திரட்டுவதற்காக ஏழை மக்களுக்கு மதுவை விற்கிறார்கள். இதுவும் ஒருவகை சுரண்டல்தான்.

மது விற்பனையால் அரசுக்கு நடப்பாண்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது அரசுக்கு கிடைக்கும் கூடுதல் லாபம், பொது மக்களுக்கு ஏற்படும் கூடுதல் நஷ்டம்.

எனவே அரசின் வருவாய்க்காக மது விற்பனையை அதிகரிக்கும் தமிழக அரசின் செயல் கண்களை விற்று சித்திரம் வாங்கும் செயல் ஆகும்.

அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாததால் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். அரசு நினைத்தால் இப்போதும் முழு மது விலக்கை நடைமுறைப்படுத்தலாம்.

வேலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களே மது விற்பனை செய்யும் அவலம் நடைபெறுகிறது. எனது சொந்த ஊரான கீழ்சிவிரியில் தாராளமாக மது விற்பனை நடைபெறுகிறது. இதைத்தடுக்கும்படி காவல்துறையிடம் புகார் மனு அளித்தபோதிலும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்ததால் 3 தலைமுறை இளைஞர்கள் மது என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்தனர். 1971ம் ஆண்டில் கருணாநிதி மதுவிலக்கை தளர்த்தினார். அதன்பிறகுதான் ஏராளமானோர் குடிக்கத் தொடங்கினர். இதனால் இளைஞர்களை குடிப் பழக்கத்திற்கு ஆளாக்கியவர் என்ற தீராப்பழி கருணாநிதி மீது விழுந்தது. அதன்பின் 2003ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அரசே மது விற்பனையை நடத்தும் என்று அறிவித்து செயல்படுத்தியதன் மூலம், முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.

காமராஜர், அண்ணா, சி.சுப்பிரமணியன், கக்கன், ஜீவா போன்றோர் ஆரோக்கியமான விவாதங்கள் நடத்திய தமிழக சட்டமன்றம் கண்ணியம், கட்டுப்பாடு போன்றவை காற்றில் பறக்க விடப்பட்டு, கையை நீட்டியும், ஆக்ரோஷம் காட்டியும் (விஜய்காந்த்) பேசும் நிலை உருவாகி விட்டது. இப்படி நடந்து கொள்ள சட்டசபை சினிமா ஸ்டூடியோ அல்ல என்றார் ராமதாஸ்.

English summary
Assembly is not a cinema studio, PMK founder Dr Ramdoss advised DMDK leader Vijaykanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X