For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்களுக்குச் சுண்ணாம்பு, பலுசிஸ்தானியர்களுக்கு வெண்ணெய்-அமெரிக்காவின் கபட நாடகம்!

By Mathi
Google Oneindia Tamil News

Balochistan Map
இஸ்லாமாபாத்: பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு பிரிந்து போய் தனிநாடு அமைத்துக் கொள்ளக் கூடிய "சுயநிர்ணய உரிமை" என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தால் அலறிப் போய் கிடக்கிறது பாகிஸ்தான்.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு அதன் இரட்டை வேடத்தையும், கபட நாடகத்தையும் அம்பலப்படுத்துவதாக உள்ளது. ஈழத் தமிழர்களின் தனி நாடு கோரிக்கையை ஏற்காத அமெரிக்கா இப்போது சுயநல நோக்குடன் பலுசிஸ்தான் தனி நாடாகலாமே என்று சப்பை கட்டுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்காக பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை இருமுறை அழைத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு அனைத்து ஊடகங்களும் இத்தகைய தீர்மானங்களின் பின்னணியில் இந்தியா இருப்பதாகக் குற்றம்சாட்டி, அப்படியானால் இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் தனிநாடு அமைக்கும் சுயநிர்ணய உரிமை இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றன.

பலுசிஸ்தான் விவகாரம் என்ன?

ஈரான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளைக் கொண்டது பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக இருக்கும் பலுசிஸ்தான்.

பலுசிஸ்தானியர்கள் பழங்குடி இன மக்கள். இவர்களது நலன்களை நீண்டகாலமாகவே பாகிஸ்தான் அரசுகள் புறக்கணித்து வருகின்றன என்பது குற்றச்சாட்டு.

இதனால் தங்களது மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி ஆயுதப் போராட்டத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் பலுசிஸ்தானியர்கள்.

பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அனைத்துவித மூர்க்கத்தனமான இனப்படுகொலைகளையும் பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.

அண்மையில் பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம், தமிழினப் படுகொலை நிகழ்த்தியதுபோல் நாங்கள் பலுசிஸ்தான் இனப் படுகொலை நடத்த வகுப்பு எடுக்குமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பலுசிஸ்தானின் முக்கியத்துவம்

பலுசிஸ்தான் ஒரு தனி மாகாணம் மட்டுமல்ல. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பூகோளப் பிரதேசமும் கூட.

பலுசிஸ்தான் மாகாணத்தின் கவ்தார் துறைமுகம் மிக முக்கியமான ஒன்று. இந்த அரபிக் கடல் துறைமுகம் இப்போது சீனாவின் வசம் உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இந்த துறைமுகத்தில் இறக்கி வைத்து இங்கிருந்து எல்லை மாகாணங்களுக்கு ரயில் மூலம் கொண்டு செல்வதன் மூலம் ஆதாயம் அடையலாம் என்று கணக்குப் போட்டது சீனா.

ஏனெனில் அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் மட்டுமின்றி மலாக்கா ஜலசந்தியைத் தாண்டி தங்கள் நாட்டுக்கு கொண்டுபோய் அங்கிருந்து மீண்டும் எல்லை மாகாணங்களுக்கு கச்சா எண்ணெய் அனுப்புவதற்கு பெரும் பொருட்செலவை செய்து வந்தது சீனா.

இந்த செலவுக்குப் பேசாமல் பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை தூர்வாரி சீரமைத்து விரிவாக்கி ஒரு ரயில் பாதையையும் போட்டுவிட்டாலே பாதி பணம் மிச்சம் என்று கணக்குப் போட்டு வெற்றியும் பெற்றுவிட்டது சீனா.

துறைமுகப் பணிகளை சீனா மேற்கொண்டபோதும் ரயில் பாதை பணிகளின் போதும் பலுசிஸ்தானியர்கள் சும்மா இருக்கவில்லை. இத்தகைய பணிகளில் பலுசிஸ்தானியர்களுக்கு முன்னுரிமை கோரினர். சீனாவும் பாகிஸ்தானும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.சீன நாட்டவரையே பயன்படுத்திக் கொண்டனர்.

இதனால் அவ்வப்போது சீனப் பொறியாளர்களை பலுசிஸ்தான் ஆயுதக் குழு கடத்திச் செல்வது வாடிக்கையாகிப் போனது.

அமெரிக்காவின் தலையீடு

அரபிக் கடலின் 'இங்கிட்டு' கவ்தார் 'அங்கிட்டு' சவூதி அரேபியா, அப்பால ஈரான், இப்பால ஆப்கானிஸ்தான்.. சீனா என ஒட்டுமொத்த எதிரிகள் கூடி கும்மியடிக்கும் இடமாக பலுசிஸ்தான் இருக்கிறதே என்ற கவலை அமெரிக்காவுக்கு.

ஈராக்கில் தொடங்கி ஆப்கானிஸ்தான் வரைக்கும் வந்து பாகிஸ்தானில் பின்லேடனை சாய்ச்சு எல்லாம் செஞ்சாச்சு..ஈரான்தான் பாக்கி... இஸ்ரேலைவிட்டு அடிச்சா சேதாரம் ரொம்ப அதிகம்... நாமளே அடிக்கலாம்.. எப்படி அடிக்கலாம்? என்ற யோசனைகளுக்கான விடைதான் அமெரிக்காவின் தற்போதைய தீர்மானம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாகிஸ்தானை துண்டாடிட்டு பலுசிஸ்தானை தனிநாடாக்க அனுமதித்தால் சீனாவுக்கும் நெருக்கடி,பாகிஸ்தானுக்கும் ஆப்பு. பலுசிஸ்தானில் ஊடுருவிவிட்டால் மத்திய கிழக்கு நாட்டிலும் கால்வெச்சமாதிரி, தெற்காசியாவிலும் கால்வெச்ச மாதிரி என்கிறது அமெரிக்க கணக்கு.

இந்தியா நிலை

பலுசிஸ்தானின் சுயநிர்ணய உரிமை விவகாரத்தில் இந்தியா மெளனமாகவே இருந்துவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். இந்தியா என்ற நாடே பல தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை கபளீகரம் செய்தே உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் மூச்சேவிட வாய்ப்பில்லை.

இருப்பினும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிக்கல் என்பதால் மெளனமாக சிரித்தாலும் அடிவயிறு கலங்கியேத்தான் கிடக்கும். ஏனெனில் தெற்காசிய பிராந்தியத்தில் 30 ஆண்டுகாலத்துக்கும் மேலாக சுயநிர்ணய உரிமை கோரி போராடிய வெற்றிபெற்ற இயக்கமாக வலம்வந்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாடு அமைத்தால் தமிழ்நாட்டுத் தமிழர்களும் இணைந்து அகன்ற தமிழ்நாட்டை தென்னாசியாவில் உருவாக்கிவிடுவார்கள் என்ற அச்சமே முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று புதைக்க கரம் கொடுத்தது.

இந்த அச்சம்தான் இன்றளவும் தமிழ்நாட்டு விவகாரங்களில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்திய அரசு இருக்கிறது என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

விடுதலைப் புலிகளும் அமெரிக்காவும்

தற்போது பலுசிஸ்தானின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் அமெரிக்கா, இதே உரிமை கோரி ஆயுதம் தரித்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க துணை நின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பலுசிஸ்தானத்தில் எப்படி ஒரு கவ்தாரோ அதுபோலத்தான் தமிழீழத்தின் தலைநகராக கருதப்படும் திருகோணமலை துறைமுகமும்.

திருகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களே தென்னாசியாவையே கையில் வைத்திருப்பவர்கள் என்பது ராஜராஜசோழன் காலத்திலிருந்து தெற்காசிய பிராந்தியம் கண்டுவரும் உண்மை.

திருகோணமலைக்காக 1980களிலேயே அமெரிக்கா முயற்சித்தது. இலங்கையும் இடம் கொடுத்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவின் அனுமதியின்றி எந்த ஒருநாட்டுக்கும் இலங்கை அனுமதி கொடுக்கக் கூடாது என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் எச்சரித்தார்.

1990களுக்குப் பிறகு நிலைமை தலைமைகீழ்.

சுயநிர்ணய உரிமை, தனிநாடு கோரிக்கையை கெட்டவார்த்தையாக நினைத்து சொந்த நாட்டு குடிமக்களின் உறவுகள் என்று கூட பார்க்காமல் தமிழர்களை விரோதிகளாகப் பார்த்து சீனாவுக்கு சிங்களவர்களோடு இணைந்து சிவப்புக் கம்பளம் விரித்தது.

இதில் சீனா,பாகிஸ்தான், இலங்கை, இந்தியா அத்தனை எதிரிகளும் ஓரணியில் வரிந்து கட்டி தமிழினத்தையே நிர்மூலமாக்கிவிட்டனர்.

இறுதி யுத்தகாலத்தில் குறிப்பாக 2002-ல் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான நார்வேயின் தலையீட்டில் உருவான அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு புலிகளுடன் திருகோணமலைக்காகவும் ஆப்கானிஸ்தானின் தலிபான்களுக்கு எதிரான போரில் பங்கேற்கவும் அமெரிக்கா பேரம் பேசியது.

தலிபான் விவகாரத்தை முற்றாக நிராகரித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தமது மாவீரர் நாள் உரையில் பிராந்திய வல்லரசுகள் மற்றும் மேற்குலக நாடுகள் தமிழீழப் பிரதேசத்தின் மீது அக்க்றை கொள்வதற்கான பின்புலமாக அவர்களது நலன்களும் இருக்கின்றன என்பதை பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி வந்தார்.

இந்தியாவின் தலையீட்டால் புலிகளை ஒழிக்க அமெரிக்கா இந்தியாவுக்கு கை கொடுத்தது. இதே அமெரிக்காதான் இப்போது தெற்காசிய நாடுகளுக்கு ஒட்டுமொத்தமாக செக் வைப்பது போல 'சுயநிர்ணய உரிமை" என்ற ஆயுதத்தை முன்வைக்கிறது.

எந்த சுயநிர்ணய உரிமை முழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம் என்று இந்தியா நினைத்ததோ அது இப்போது டெல்லிக்கு ரொம்ப பக்கத்திலேயே கேட்கிறது என்பதுதான் முக்கியம்.

English summary
A resolution has been introduced in the US Congress last week, calling upon Pakistan to recognize the right to self-determination of the Baloch people, whose main territory Balochistan, bordering Iran in the west and Afghanistan in the north, is currently a province in Pakistan. It is the US policy to “oppose aggression and the violation of human rights inherent in the subjugation of national groups as currently being shown in Iran and Pakistan against the aspirations of the Baloch people,” the motion said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X