For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத்தீவில் டக்ளஸ் போட்ட திடீர் கூட்டம்- சதி வலையில் சிக்கிய தமிழக மீனவர்கள்

Google Oneindia Tamil News

கச்சத்தீவு: கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மற்றும் மீனவர்கள் தாக்குதல் நடத்துவது அனுமார்வால் போன்று நீண்டு கொண்டே செல்கின்றது.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வருவதாக கூறி ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து செல்வதும், சில நேரங்களில் கண்மூடித்தனமாக மீனவர்களை தாக்குவதுமான நிலை நீடித்து வருகின்றது. இவ்வாறு இலங்கை கடற்படை தாக்குதலில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பல நூறு மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியாகியும் உள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 28 ந் தேதி மீன் பிடிக்க சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேரை போதைப் பொருள் கடத்தியதாக கூறி இலங்கை அரசு வழக்கு தொடர்ந்து, கடந்த 13 வாரங்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 21 ந் தேதி இரவு கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கையை சேர்ந்த ஒரு கும்பல் சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டியது. இதில் 4 மீனவர்களுக்கு பலத்த வெட்டு காயம் ஏற்ப்டது.

இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக மீனவர்கள் பல்வேறு முறை பல்வேறு போராட்டங்களை எழுச்சி மிகு முறையில் உணர்ச்சிகரமாக நடத்தி வருகின்றனர்.

இதை உணர்ந்து முன்னாள் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியும், தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவும், மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளனர். மத்திய அரசு பிரதிநிதிகள் இலங்கை சென்று இது குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தினர். ஆனாலும் ஒரு புண்ணியமும் இல்லை.

இனி வரும் காலத்தில், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடக்காது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதி மொழி அளித்தார். ஆனால் அவர் சொல்லி வாய் மூடுவதற்கு முன்பே தமிழக மீனவர்களைத் தாக்கி இந்தியா மீது தான் வைத்துள்ள 'மரியாதையை' நிரூபித்தது இலங்கை.

இந்த நிலையில் தான், கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா இந்த வருடம் மார்ச் 3 ந்ந தேதி மற்றும், 4 ந் தேதிகளில் நடைபெற்றது.

முதல் நாள் 3 ம் தேதி காலை முதல் மாலை வரை பெரும்பாலான தமிழக கிறிஸ்துவ மக்களும், மீனவர்களும் கச்சத்தீவுக்குள் வந்துவிட்டனர்.

ஒளி விலகி இருள் சூழ்ந்த நேரத்தில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே, தமிழகத்தில் கொலைக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைமவு குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் நடைபெறும் என மைக்கில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து முதலில் எந்தவித அறிப்பும் இல்லாதாதல் குழப்பத்தில் ஆழ்ந்த தமிழக மீனவர்கள் பிறகு ஒரு வழியாக சுதாரித்து கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தயரானார்கள்.

சரி, இப்போது கிடைக்கும் வாயப்பை பயன்படுத்தி நமது குறைகளை எல்லாம் அமைச்சர் முன்பே கொட்டிவிடலாம் என தமிழக மீனவர்கள் கனவு கண்டனர்.

இந்த நிலையில், கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள் பெயர்கள் மைக்கில் அறிவிக்கப்பட்டதும் அனைவரும் அந்தோணியார் கோவில் பின்புறம் சங்கமித்தனர்.

ஒரு புறம் தமிழக மீனவர்களும், மறுபுறம் இலங்கை மீனவர்களும், நடுவில் டக்ளஸ் தேவானந்தாவும், அவர் நேர் எதிரே தமிழக மற்றும் இலங்கை பத்திரிக்கையாளர்களும் கேமரா சூழ அரணாக நின்றனர்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி யாரோ 'ஒருவருக்காக' சில நிமிடம் தாமதம் செய்யப்பட்டது. பின்பு ஒரு வழியாக கூட்டம் ஆரம்பம் ஆனது. முதலில் மைக் பிடித்த டக்ளஸ் தேவானந்தா,

இரு நாட்டு மீனவர்களும் கலந்துரையாடினால் தான் பிரச்சனைகள் தெரிய வரும். அதற்கு தீர்வு காண முடியும். சார்க் மாநாட்டில் இந்திய பிரதமரும், இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கலந்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பின் அடிப்படையில் இந்த கலந்துரையாடல் நடைபெறுகின்றது.

நான் இலங்கைக்கு அமைச்சராக இருந்தாலும், இரு நாட்டு மீனவர்களுக்கும் நடுவராக இருந்து உங்கள் குறைகளை தீர்க்க முயற்சி செய்வேன். எனவே, நீங்கள் உங்கள் குறைகளை கதைக்கலாம் என பச்சைக்கொடி காட்டினார்.

அடுத்து வந்து விழுந்தது இரு தரப்பிலும் மலை போன்ற குற்றச்சாட்டுக்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கச்சிமடம் பஞ்சாயத்து தலைவர் ஞானசீலன் முதலில் டக்ளஸ் தேவானந்தாவை புகழ்ந்துவிட்டு மீனவர்கள் பிரச்சனையை பேச ஆரம்பித்தார்.

நமக்கு கடல் தான் உலகம். கடல் தான் வாழ்க்கை. இந்த தொழிலை நம்பித்தான் இரு நாட்டு மீனவர்களும் வாழ்ந்து வருகின்றோம். நமது தொப்புள் கொடி உறவாக இது தொடர்ந்து வருகின்றது. இந்த உறவு என்றும் நீடிக்க வேண்டும் என்று பிள்ளாயர் சுழி போட்டு பேச்சை ஆரம்பித்து வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட தமிழக மீனவர் ஒருவர், ஐயா எங்கள் அமைச்சர்களை பார்க்க வேண்டும் என்றால் பல மணி் நேரம் கால் கடுக்க நிற்க வேண்டும். அமைச்சர் சுமார் 10 , 15 கார்கள் புடை சூழ தான் வருவார்கள். அவர்களிடம் இது போன்று அமர்ந்து எல்லாம் பேச முடியாது. ஆனால் உங்கள் அருகில் அமர்ந்து எங்கள் குறைகளை தீர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக நாங்கள் எல்லாம் பெருமைப்படுகின்றோம் என்று புகழாரம் சூட்டவே டக்ளஸுக்கு வெட்கம் வெட்கமாக வந்து நெளிந்தார்.

அடுத்து மைக் பிடித்த இலங்கை வடமராச்சி சமாஜத் தலைவர் அருள்தாஸ், இலங்கையில் தடை செய்யப்பட்ட ரோலர் படகுகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் தமிழகத்தில் மீன் வளம் அழிந்து விட்டது. அது போதாது என்று தற்போது இலங்கை வரை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து, எங்கள் பகுதியில் மீன் பிடிக்கின்றனர். இதனால் எங்கள் பகுதியில் இருந்த மீன் வளம் எல்லாம் அழிந்து விட்டது. எங்களால் நிம்மதியாக மீன்பிடிக்க முடியவில்லை. இதற்கு ஒரு தீர்வு கண்டே ஆகவேண்டும் என எரிமலை போல் வெடித்தார்.

இதற்கு பதில் சொல்லும் விதமாக பேசிய ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சேசுராஜா, ரோலர் படகுகளுக்கு தமிழகத்தில் தடை இல்லை. எங்களுக்கு எல்லை தாண்ட வேண்டிய அவசியம் இல்லை. மீனவர்கள் பிரச்சனை குறித்து நாங்கள் இலங்கைக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினோம். அதே போல நீங்களும் தமிழகத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினீர்கள். ஆனால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. நாம் இப்படியே பேசிக் கொண்ட இருந்தால் பேசிக் கொண்டு தான் இருக்க வேண்டும். இரு நாட்டு அதிகாரிகளும், மக்கள் பிரநிதிகளும் இது போன்ற கூட்டத்தில் வந்து கலந்து கொண்டு முடிவு செய்தால் தான் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் பேசிய இலங்கை காரைநகர் ராஜசந்திரன்,

உங்கள் நாட்டில் மீன் வளத்தை அழித்து போல் எங்கள் நாட்டின் மீன் வளத்தை அழிக்க பார்க்கின்றீர்கள். நாங்கள் அரசு மானியம் பெற்று படகு வாங்கி தொழில் செய்து வருகின்றோம். உங்களால் தான் எங்கள் கடலில் மீன்கள் இல்லை. அதனால் எங்களால் நிம்மதியாக தொழில் செய்யமுடியவில்லை. வங்கியில் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியவில்லை. அதனால் போலீஸ்-ம் , வங்கியும் எங்கள் வீடு தேடி வருகின்றனர். எனவே, நீங்கள் தயவு செய்து இரட்டை மடி வலைகளையும் ரோலர் படகுகளையும் நிறுத்த வேண்டும். குறிப்பாக எங்கள் எல்லைக்குள் வருவதை நிறுத்தியே ஆக வேண்டும் என்று சீறினார்.

அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் பேசுகையில்,

உங்களுக்கு என்று ஒரு அமைச்சர் உள்ளார். அவரிடம் உங்கள் குறைகளை சொல்கின்றீர்கள். எங்களுக்கு மத்தியில் அப்படி எந்த மத்திய அமைச்சரும் இல்லை. மாநிலத்தில் தான் உள்ளனர். அவரிடம் எல்லா விவரங்களையும் கூறிவிட்டோம். முடிவாக ஒன்று எங்களை இலங்கை எல்லை வரை மீன் பிடிக்க அனுமதி வாங்கித்தாருங்கள். இல்லை எனில் எங்கள்பகுதியை இலங்கையுடன் சேர்த்துவிடுங்கள் என்று கூட கூறிவிட்டோம். ஆனால், எந்த முடிவும் எடுக்கமாமல் அரசு மவுனமாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இதை ஆதரித்து மற்றொரு தமிழ் மீனவர் பேசும் போது,

உங்கள் நாட்டை விட இந்தியா பெரிய நாடு. அதனால் எங்களால் அமைச்சர்களை உடனே அனுக முடியவில்லை. அத்தோடு எங்கள் நாட்டில் எந்த தேவைக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. லஞ்சம் கொடுக்கும் அளவு எங்களிடம் பணம் இல்லை. ஆனாலும் எங்களது கோரிக்கைகளை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என்று சொன்னார்.

இலங்கை யாழ் மாவட்ட மீனவர் சம்மேளன தலைவர் தவரெத்தினம் பேசும் போது, நீங்கள் தான் எல்லை தாண்டி வருகின்றீர்கள். தமிழக மீனவர்களை நாங்கள் யாரும் தாக்கியது இல்லை. உங்களை விட நாங்கள் பாவமாக உள்ளோம். எங்களுக்கு கடல் வளம் குறைவு. ஆனால் உங்களுக்கு கடல் வளம் அதிகம். ஆனால் அதை நீங்கள் ரோலர் படகு மூலமும், இரட்டைமடி வலை மூலமும் அழித்துவிட்டீர்கள். இலங்கை கடல் எல்லையிலும் அதே போல பயன்படுத்தி அழித்து வருகின்றீர்கள். எனவே, இனியாவது எங்களை வாழ விடுங்கள் என்று கையெடுத்துக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை சுமத்த அந்த இடத்தில் ஒரு வித பதற்றம் ஏற்பட்டது. அப்போது வியாபாரி ஒருவர் தனது கருத்தைக் கூற, அவருக்கு தமிழக மீனவர்கள் மத்தியிலும், இலங்கை மீனவர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அப்போது எழுந்த தமிழக மீனவர் ஒருவர் டக்ளஸ் தேவானந்தாவிடம்,

இங்கு பரபரப்பு தேவையில்லை. இதே நிலை நீடித்தால் மன வருத்தம் தான் வரும். எனவே, இத்தோடு இந்த கூட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்க இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களின் பரிதாபத்தை கண்டு சிரித்தார்கள்.

தமிழக, இலங்கை மீனவர்கள் சுற்றி இருக்க நடுவில் இருந்த டக்ளஸ், தமிழக மீனவர்களின் பரிதாபத்தை பார்த்தும், உண்மையை ஒப்புக் கொண்டதை பார்த்தும், சாட்சி்க்கு பத்திரியாளர்களை அழைத்து இதற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பதில் இல்லை.அப்போது, இங்கு என்ன நடந்ததோ அதை அப்படியே எழுதிவிடுகின்றோம் என்று நமது செய்தியாளகர் கூற கூட்டத்தில் மீண்டும் இலங்கைத் தரப்பில் சிரிப்பு மழை.

அப்போது குறுக்கிட்ட டக்ளஸின்ன் உதவியாளர் பத்திரிக்கையாளர்கள் வழிகாட்டியாக திகழ வேண்டும். அதனால் உங்கள் கருத்தை சொல்லுங்கள் என எதையோ எதிர்பார்த்து மீண்டும் வலியுறுத்தினார்.

அதற்கு பதில் தந்த நமது செய்தியாளர், ஐயா பத்திரிகையாளர்கள் எல்லாம் கண்ணாடி போன்றவர்கள். கண்ணாடி எப்படி உள்ளதை உள்ளபடி காட்டுகின்றதோ அதே போல இங்கு நடந்ததை எல்லாம் எல்லாம் அப்படியே எழுதிவிடுகின்றோம் என கூற, இடை மறித்த டக்ளஸ் நீங்கள் எந்த பத்திரிக்கை நிருபர் என கேள்வி எழுப்பினார். ஐயா நான் ஒன் இந்தியா (தட்ஸ்தமிழ்) செய்தியாளர் என கூறினார்.

முடிவாக மைக் பிடித்த டக்ளஸ், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் சிறையில் உள்ளதாக கூறினீர்கள். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இலங்கை அரசின் சட்ட ரீதியாக தேவையான உதவிகளை செய்ய உரிய ஏற்பாடு செய்யப்படும். உங்கள் மீன்வளத்துறை அமைச்சரின் செல் போன் எண்ணைக் கொடுங்கள். அவரிடம் நான் பேசுகின்றேன். விரைவில் நல்ல தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது இல்லை. சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், இலங்கை அதிபர் ராஜபக்சே அவர்கள் பேசியது போல விரைவில் இரு நாடுகள் இணைந்து கூட்டு ரோந்து அமைக்கப்படும் என்று கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

திட்டமிட்டு தமிழக மீனவர்களை வீழ்த்திய இலங்கை

இந்தப் பேச்சுவார்த்தை கலந்துரையாடலே ஒரு திட்டமிட்ட டிராமா என்று தமிழக மீனவர்கள் தரப்பில் கூறுகிறார்கள்.

இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த அரசு என்ற இளைஞர் கருத்து தெரிவிக்கையில்,

கலந்துரையாடல் கூட்டம் நடப்பதை தமிழக மீனவர்களுக்கு முன் கூட்டியே சொல்ல வேண்டும். அப்படி செய்து இருந்தால் கூட்டத்திற்கு தேவையான கருத்துக்களோடு அவர்கள் தயராக வந்து இருப்பார்கள். அப்படி செய்யாமல் இங்கு வந்த பிறகு கலந்துயாடல் கூட்டம் என தன்னிச்சையாக அறிவித்து, தமிழக மீனவர்கள் வாயில் இருந்தே அவர்கள் கடல் எல்லையை தாண்டுவதாகவும், அவர்கள் இரட்டை மடி வலையை பயன்படுத்துவதாகவும் வாக்குமூலம் வாங்கிக் கொண்டார்கள்.

போதாக்குறைக்கு தமிழக மீனவர்கள் மீது இதுவரை இலங்கை கடற்படை தான் இதுவரை தாக்குதல் நடத்தி வந்தது. தற்போது கூட்டு ரோந்து அமைப்பதன் மூலம் இந்திய கடற்படையும் தன் பங்கிற்கு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும்.

அப்படி செய்தால் நாங்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. இந்திய கடற்படை தான் எல்லை தாண்டி வந்த மீனவர்களை தாக்கினார்கள் என சொல்ல நல்ல வாய்ப்பு அமைந்து விட்டது.

தன் கையை வைத்தே தன் கண்ணை குத்தவைத்துவிட்டார் டக்ளஸ் தேவானந்தா. அவரது வலையில் தமிழக மீனவர்கள் சிக்கிவிட்டார்கள். எப்போது இந்திய அரசு அவர்களை மீட்கப்போகின்றதோ என வேதனைக்குரலில் சோதனைகளை சொல்லி முடித்தார்.

மொத்தத்தில் டக்ளஸை வைத்து இலங்கைத் தரப்பு ஒரு நாடகத்தை நடத்தி முடித்து விட்டது. தமிழக மீனவர்கள்தான் குற்றவாளிகள் என்பது போலவும், அவர்களால்தான் பிரச்சினை என்பது போலவும் இலங்கைத் தரப்பு காட்டியுள்ளது. ஆனால் நமது மீனவர்கள் ஏன் நமது நிலையை தரம் தாழ்த்தி டக்ளஸிடம் போய்ப் பேசி புலம்பினார்கள் என்பதுதான் புரியவில்லை.

கட்டுரை மற்றும் படங்கள்: கே.என்.வடிவேல், செய்தியாளர், தட்ஸ்தமிழ்

English summary
Lankan minister Douglas Devanantha enacted a drama with fishermen of Tamil Nadu and Sri Lanka during their visit to Kachatheevu recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X