For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது கலவையான பட்ஜெட்! - கருணாநிதி

By Shankar
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: 'வரவேற்கத் தக்கவற்றையும், தவிர்த்திட வேண்டியவற்றையும் கொண்ட கலவையாக இருக்கிறது பொது பட்ஜெட்' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு, 2011-2012-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஒரு சில முக்கியமான மதிப்பீடுகளையும் எதிர்பார்ப்புகளையும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். ஆனால் அவை எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கின்றன என்பதை ஆய்வு செய்து பார்க்கும்போது நமக்கு நெருடல் ஏற்படுகிறது.

உபரி வருவாய் 6,64,457 கோடி ரூபாய் என எதிர்பார்க்கப்பட்டு, 5,50,280 கோடி ரூபாய் என்ற அளவிலேயே நின்று விட்டது. மானியங்கள் 1,43,570 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டதும், 2,43,570 கோடி ரூபாய் என்று அதிகரித்து விட்டது. செலவினங்கள் 3.4 சதவிகிதத்திற்குள் இருக்கும் என கணக்கிடப்பட்டது; 13.4 சதவிகிதம் எனப் பெருமளவுக்கு உயர்ந்து விட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாகுமென எதிர்பார்த்தது, பொய்த்துப் போய் 6.9 சதவிகிதம் என்ற அளவிலேயே நின்று விட்டது.

வேலை வாய்ப்பு

இந்தப் பின்னணியில் 12-3-2012 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் தமது உரையில் இந்தியப் பொருளாதாரம் 8 முதல் 9 சதவிகிதத்தை எட்டி விடும் என்று உறுதி அளித்திருப்பதோடு; மிகப் பெரும் எண்ணிக்கையிலான நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துதல்; வறுமை, பசி, எழுத்தறிவின்மை ஆகியவற்றை தீர்த்து வைத்தல், விரிவான உறுதியான வளர்ச்சியின் மூலம் உற்பத்தித் திறன் சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் பொருளாதாரப் பாதுகாப்பை எட்டுதல், அனைத்துப் பகுதி மக்களுக்கும் எரிசக்தி, மின்சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் போன்ற முக்கியமான சவால்களை வெற்றிகரமாக சந்தித்திட முனைந்திருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2012-2013-ம் ஆண்டுக்கென வெளியிடப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கை; இந்தியக் குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ள சவால்களைச் சந்திப்பதற்கும், நாட்டை அனைத்து முனைகளிலும் உயர்த்தி மேம்பாடு அடையச் செய்வதற்கும் எந்த அளவுக்கு உதவிடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தொழில் வளர்ச்சி

உலகளாவிய பொருளாதார - அரசியல் நிலைமைகளாலும், பிரச்சினைகளாலும் சென்ற ஆண்டு நமது எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போய் விட்டதாகவும்; இந்தியப் பொருளாதாரத்தின் செயல்பாடுகள் ஏமாற்றத்தை அளித்துவிட்டதாகவும், மத்திய நிதியமைச்சர் விளக்கியிருக்கிறார். மேலும் நமது பொருளாதாரம், வேகம் குன்றி நலிந்த நடைபோட்டதற்கு, தொழில் வளர்ச்சி குறைந்து போனதே காரணமாகும் என்றும் நிதியமைச்சர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். எனவே வரும் 2012-2013-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் உள்நாட்டுத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சியிலும், நாட்டின் எதார்த்தமான காரணங்களிலும் பெருமளவுக்கு கவனம் செலுத்தியுள்ளதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2012-ல் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதத்தை எட்டும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறைக்கு, மானியங்களே காரணங்கள் என்பதால், மானியங்களைக் குறைத்திட எண்ணியிருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஏழையெளியோர் வாங்கும் சக்தியைப் பெறுவதற்கு அரசு வழங்கும் மானியங்களே பெரிதும் துணை புரிகின்றன. எனவே மானியங்களைக் குறைப்பது குறித்து தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தே முடிவெடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. எனினும் உணவு மற்றும் உர மானியங்களைக் குறைக்கப் போவதில்லை என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாகவே அமைந்துள்ளது.

மகிழ்ச்சி தருவதாக இல்லை

அதே நேரத்தில் மண்ணெண்ணெய், எரிவாயு ஆகியவற்றுக்கான மானியம் பொதுமக்களுக்கும், உர மானியம் விவசாயிகளுக்கும் நேரடியாகவே வழங்கிட முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். பொதுத் துறையில் அரசின் முதலீட்டை 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்வதின் மூலம் குறைத்துக்கொள்ள எடுத்துள்ள முடிவு மகிழ்ச்சி தருவதாக இல்லை. ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இல்லை.

விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை 18 சதவிகிதம் அதிகரித்திருப்பதும்; வேளாண் கடனுக்கென 5,75,000 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதும்; 3,884 கோடி ரூபாய் அளவுக்கு நெசவாளர் கடனை ரத்து செய்திட முன்வந்திருப்பதும்; ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீட்டினை 18 சதவிகிதம் உயர்த்தியிருப்பதும்; சிறு சேமிப்பை ஊக்கப்படுத்துவதற்காக ராஜிவ் காந்தி பெயரில் பங்குத் திட்டம் ஒன்றைத் தொடங்கிடவிருப்பதும்; சென்ற ஆண்டு புதிதாக போலியோ நோய் இல்லை என்று அறிவித்திருப்பதும்; திரைப்படத் தொழிலுக்கு சேவை வரி இல்லை என்பதும்; சென்னை அருகே தடுப்பூசி தயாரிப்பு மையம் ஒன்று புதிதாக அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதும் வரவேற்கத் தக்க அம்சங்களாக இந்த நிதி நிலை அறிக்கையிலே இடம் பெற்றுள்ளன.

மக்களின் வாழ்க்கை தரம்

வருமான வரி விலக்கு 3 லட்சம் ரூபாய் வருமானம் வரை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே என்று அறிவித்திருப்பது பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். மிதிவண்டி என்பது சாமான்யரின் வாகனம். ஆனால் அதற்கு அடிப்படை சுங்க வரியை 30 சதவிகிதமாக உயர்த்தியிருப்பது சரியான யுக்தியாகத் தோன்றவில்லை.

பொதுவாக விலைவாசியைக் கட்டுக்குள் வைப்பதற்கோ, குறைப்பதற்கோ எந்த முயற்சியும் இல்லை. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத் தக்கவற்றையும், தவிர்த்திட வேண்டியவற்றையும் கொண்ட கலவையாகவே இருக்கிறது. இது, இந்திய நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் சென்று, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திட துணையாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief M Karunanidhi says that the budget 2012-13 is the mixture of avoidable aspects and good things. He criticised the finance minister for not giving any solution to control the prices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X