• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாருக்கும் பயன்தராத மக்கள் விரோத பட்ஜெட்! - ஜெயலலிதா

By Shankar
|

Jayalalitha
சென்னை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், யாருக்கும் எந்த நன்மையையும் தராத மக்கள் விரோத பட்ஜெட் என முதல்வர் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

"நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகள் ஏதுமில்லை. இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் இருக்கிறது. முதலீடுகள் மிகவும் நலிவடைந்துள்ளன. பணவீக்க விகிதம் உயர்வது, இந்திய ரூபாயின் மதிப்பு வலுவிழந்து இருப்பது ஆகியன வெல்ல முடியாத பிரச்னைகளாக உள்ளன.

இந்தச் சூழ்நிலையில், விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைக்கவும், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், சாமானிய மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்தவும் துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், அதுபோன்ற எந்தத் தீவிரமான முயற்சியும் பட்ஜெட் அறிவிப்பில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

வருமான வரி விலக்கு உச்ச வரம்பை அதிகரித்திருக்கலாம்

நடுத்தர மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் வாங்கும் திறன் கணிசமான அளவில் குறைந்திருக்கும் நிலையில், இவ்வாறு வருமான வரி விலக்கு உச்சவரம்பை சிறிதளவு அதிகரித்திருப்பது நடுத்தர மக்களுக்கு எந்தவகையிலும் உதவாது.

2010-11-ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை 5.9 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதைக் குறைப்பதற்கும் உறுதியான நடவடிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

பணவீக்கத்தைக் குறைப்பது, பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை குறைப்பதன் வாயிலாகவே சாத்தியம் என தனது பட்ஜெட்டில் கூறி சாமானிய மக்களை அவமதித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு மசோதாவைத் தவிர்த்து பிற துறைகளுக்கான மானியங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு இருக்குமென பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழக அரசு தனது எதிர்ப்பினை ஏற்கெனவே பதிவு செய்துள்ளது. இந்த மசோதா, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தைச் சீர்குலைக்கும் என வலியுறுத்தியுள்ளது.

உரங்களுக்கான மானியத்தை நேரடியாக சில்லறை விற்பனையாளர்களுக்கு வழங்கும் திட்டம் விவசாயிகளுக்கு தீங்கிழைக்கும். தனியார் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளும் பட்ஜெட்டில் இல்லாதபோது, நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியை அடைவது கடினமாகும்.

தனியார் பங்களிப்பு

தனி நபர்களின் சேமிப்பானது நிலத்திலும், தங்கத்திலுமே முதலீடு செய்யப்படுகிறது. 12-வது திட்டத்துக்கு ஒரு டிரில்லியன் அளவுக்கு அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கு அவசியமான மின்னுற்பத்தித் துறைக்கு பெருமளவிலான முதலீடு அவசியமாகிறது. அதுபோன்றே சாலைகள், பாலங்கள், பாசன வசதிகள் முதலியவற்றுக்கும் பெருமளவில் முதலீடு தேவைப்படுகிறது.

இந்த அடிப்படை வசதித் திட்டங்களுக்கு அரசு மட்டுமே முதலீடு அளிக்க முடியாது. எனவே பெருமளவு தனியார் மற்றும் அரசு பங்களிப்பு வகையிலான திட்டங்கள் தேவைப்படுகிறது. 12-வது ஐந்தாண்டு திட்டத்துக்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவையென நிதியமைச்சர் மதிப்பீடு செய்துள்ளார்.

ஆனால், அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் தனியார் முதலீடு மற்றும் பொது-தனியார் பங்களிப்பு போன்றவற்றுக்கு முன்னோடியான கொள்கைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

வேளாண்மைத் துறையைப் பொறுத்த வரையில், 4 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கு சுமார் 18 சதவீதம் அளவுக்கு நிதியை ஒதுக்கீடு செய்திருப்பது போதுமானது அல்ல. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகையை ரூ.200 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தியிருப்பது மிகவும் சொற்பம். தமிழகத்தில் மாநில அரசு மாதத்துக்கு ரூ.1,000 ஓய்வூதியம் அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் பெரிதும் பேசப்பட்ட ராஜீவ் வீட்டு வசதித் திட்டமும், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்பகுதி புதுப்பிக்கும் திட்டமும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தேசிய நடுநிலைக் கல்வியின் கீழ் நாடு முழுமைக்குமான ஒதுக்கீடு ரூ.3,124 கோடி மட்டுமே என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகத்துக்கு நெருக்கடி

பட்ஜெட் திருத்த மதிப்பீட்டில் வரி மதிப்பீட்டுத் திருத்தம் இறங்குமுகமாக இருக்கையில், நடப்பு நிதியாண்டுக்கான தமிழ்நாட்டு நிதி ஆதாரங்களில் ரூ.400 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு மாநிலத்தின் நலத் திட்டங்களில் அதிகளவுக்கு நெருக்கடியை விளைவிக்கும்.

அடிப்படை கட்டமைப்பு வசதித் திட்டங்களை செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை மாநிலங்கள் பெருக்கிக் கொள்ள எந்தவொரு அறிவிப்பும் வழங்கப்படவில்லை. மத்திய அரசுத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கான கடனுதவியை பெருக்கிக் கொள்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்றே மாநில அரசின் திட்டங்களுக்கும் உதவி அளிக்கும் வகையில் கடன் நிதிகளை ஏற்படுத்திக் கொள்ள வழிவகைகளை உருவாக்கி இருக்க வேண்டும்.

மக்கள் விரோத பட்ஜெட்

நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் அமையவில்லை. யாருக்கும் எந்த விதத்திலும் பயன் தராத வகையில் உபயோகமற்ற பட்ஜெட்டாகும். மக்கள் விரோத பட்ஜெட் இது."

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chief Minister Jayalithaa slammed Budget 2012-13 as 'anti public and useless'. She told that the budget hasn't any scope for private investors!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more