For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தயங்கித் தயங்கி ஆதரித்தாலும் மத்திய அரசுக்கு நன்றி- ஜெ.

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: உலகம் முழுவதும் வாழும் உள்ள தமிழர்களின் உணர்வு சம்பந்தப்பட்ட அமெரிக்க தீர்மானம் என்ற முக்கிய பிரச்சினையில் மத்திய அரசாங்கம் தயங்கிய நிலையிலேயே இருந்து வந்தது. குழப்பத்துக்கும், கால தாமதத்துக்கும் மத்தியில் கடைசியாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்திய அரசு வாக்களித்து இருப்பது உற்சாகம் அளிக்கிறது. இந்தப்பிரச்சினையில் தமிழகம் சார்பாக, சட்டமன்ற தீர்மானம் மூலமாகவும், கடிதங்கள் வாயிலாகவும் மத்திய அரசுக்கு தொடர்ந்து நான் நிர்ப்பந்தம் அளித்தது மூலமாகவும், பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தன் மூலமாகவும், எதிர்பார்த்த முடிவு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தற்கு முதல்வர் ஜெயலலிதா நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஐ.நா.மனித உரிமைக்கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்திய அரசாங்கம் வாக்களித்து இருப்பதை நான் வரவேற்கிறேன். உலகம் முழுவதும் வாழும் உள்ள தமிழர்களின் உணர்வு சம்பந்தப்பட்ட இந்த முக்கிய பிரச்சினையில் மத்திய அரசாங்கம் தயங்கிய நிலையிலேயே இருந்து வந்தது.

இலங்கையில், அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்தியவர்களை போர் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், இலங்கை அரசு அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கி, அவர்கள் சிங்களர்களுக்கு சமமாக, கண்ணியமாக வாழ வழிவகை செய்யப்படும் வரை இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிப்பதற்கு மற்ற நாடுகளோடு இணைந்து மத்திய அரசு செயல்படவேண்டும் என்று தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டாலும் கூட, ஐ.நா.மனித உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தால், இந்தப்பிரச்சினையில், இந்தியா தன் நிலைப்பாட்டை கட்டாயம் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த விஷயத்தில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கலாமா? இல்லை எதிராக வாக்களிக்கலாமா? என இந்திய அரசு இருமனப்போக்கிலேயே இருந்துவந்தது. தீர்மானத்தை தோல்வி அடையச்செய்யும் வகையில், இந்தியாவை, சமரசம் செய்யும் முயற்சியில், இலங்கை ஏறத்தாழ வெற்றியும் பெற்றது. இந்தப்பிரச்சினை தொடர்பாக, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நான் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தேன். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்று அந்தக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தில் அளித்த தன்னிலை அறிக்கையில், இந்திய அரசு, இந்தப்பிரச்சினையில் ஒருமித்த கருத்து எட்டும்வகையில், அனைத்துக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், இருநாடுகளுக்கு இடையே மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவிடாமல், இணக்கமான சூழல் உருவாகும் வகையில் முடிவு எடுக்கப்படும்' என்று கூறினார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையின் மீதான விவாதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியபோது, ஐ.நா.மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தில் இறுதி செய்யப்பட்ட வரிகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க விரும்புவதாகவும் இதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் சமமாகவும், மதிப்புடனும் தன்மானத்துடனும் நடத்தப்படும் நமது நோக்கத்தை முன்எடுத்துச்செல்லமுடியும் என்று நம்புவதாகவும் கூறினார்.

இந்தப்பிரச்சினையில், பிரதமர் அளித்த பதிலில் திருப்தி அடையாத அ.தி.மு.க.உறுப்பினர்கள், இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் தெளிவாக தெரிவிக்குமாறு கோரினார்கள்.

இது தொடர்பாக, இந்தியாவின் நிலைப்பாடு இருமனப்போக்கில் உள்ளது என்றும், சந்தேகமாக இருக்கிறது என்று நானும் அறிக்கை வெளியிட்டேன். இதற்கிடையில், இலங்கை வெளியுறவு மந்திரி, இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவை தொடர்புகொண்டதாகவும், அப்போது, தீர்மானம் விஷயத்தில் இந்தியா இன்னும் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், இந்திய அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று, மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்து இருப்பதாக தி.மு.க.தலைவர் கருணாநிதியும் அறிக்கை வெளியிட்டு இருப்பது இந்த பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சியாகும்.

இவ்வளவு குழப்பத்துக்கும், கால தாமதத்துக்கும் மத்தியில் கடைசியாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்திய அரசு வாக்களித்து இருப்பது உற்சாகம் அளிக்கிறது. இந்தப்பிரச்சினையில் தமிழகம் சார்பாக, சட்டமன்ற தீர்மானம் மூலமாகவும், கடிதங்கள் வாயிலாகவும் மத்திய அரசுக்கு தொடர்ந்து நான் நிர்ப்பந்தம் அளித்தது மூலமாகவும், பாராளுமன்றத்தில் அ.தி.மு.க.உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தன் மூலமாகவும், எதிர்பார்த்த முடிவு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு இது முதல்படியாகும். இதற்காக பிரதமருக்கு, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Chief Minister Jayalalitha has welcomed the adoption of US resolution against Sri Lanka and thanked the Indian govt for its support after so many hesitation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X