For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் எஸ்எஸ்எல்சி தேர்வு தொடங்கியது

Google Oneindia Tamil News

SSLC Public Exam
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்புக்கான முதல் பொதுத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் தொடங்கியது.தமிழ் முதல் தாள் தேர்வு இன்று நடைபெற்றது.

கிட்டத்தட்ட 12.5 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் 2011-12 கல்வியாண்டு முதல் மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பாடத் திட்டங்களை ஒழித்து விட்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டமானது பின்னர் வந்த அதிமுக அரசால் கிடப்பில் போட முயற்சிக்கப்பட்டது. இருப்பினும் உச்சநீதிமன்றம் வரை போய் சமச்சீர் கல்வித் திட்டம் தப்பியது.

அந்த வகையில் தற்போது சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், முதலாவது பத்தாம் வகுப்புத் தேர்வு இன்று தொடங்கியது. இந்தத் தேர்வுக்காக 3,033 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 மணிக்குத் தேர்வு தொடங்கியது.

இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வின்போது யாரும் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தேர்வு குறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு (புதிய பாடத்திட்டம்) 4-ந் தேதி, தமிழ் முதல் தாள் பரீட்சையுடன் தொடங்கி, 23-ந் தேதி சமூக அறிவியல் பாடத்துடன் முடிவடைகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10,312 பள்ளிக்கூடங்களில் இருந்து ஏறக்குறைய 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ-மாணவிகள் இந்த தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்துள்ளனர்.இதில், 5 லட்சத்து 45 ஆயிரத்து 707 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 38 ஆயிரத்து 868 பேர் மாணவிகள் ஆவர். புதிய பாடத்திட்டத்தில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்கு 19 ஆயிரத்து 574 பேர் பதிவு செய்துள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வை, 7 லட்சத்து 87 ஆயிரத்து 374 மாணவ-மாணவிகள் தமிழ் வழிக்கல்வியில் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி.பரீட்சைக்காக, சென்னையில் 223 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 596 பள்ளிக்கூடங்களில் இருந்து 58,098 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

புதுச்சேரியில், 260 பள்ளிக்கூடங்களில் இருந்து, 18,116 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 47 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களும், முதல்முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களும், புதிய பாடத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி.பரீட்சை எழுதுவார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி.தேர்வுகளில், ஏப்ரல் 2012-க்கு முந்தைய ஆண்டுகளில் தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவர்கள் அனைவரும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதுவார்கள்.

பழைய பாடத்திட்டத்தில் மொத்தம் 61,497 மாணவ-மாணவிகள் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்துள்ளனர். மெட்ரிக்குலேஷன் பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 04-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முடிவடைகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மெட்ரிக்குலேஷன் தேர்வை, தனித்தேர்வர்களாக தேர்வு எழுத மொத்தம் 3227 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர். ஆங்கிலோ-இந்திய பாடத்திட்ட பொதுத்தேர்வினை தனித்தேர்வர்களாக தேர்வு எழுத மொத்தம் 53 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர். ஓ.எஸ்.எல்.சி. பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்களாக 28 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர்.

தேர்வு மையங்களில் ஒழுங்கீனச் செயல்கள் புரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளிக்கூட நிர்வாகம் முயன்றால், தேர்வு மையத்தை ரத்து செய்து, பள்ளிக்கூட அங்கீகாரத்தை ரத்து செய்திட, பள்ளிக்கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறைக்கைதிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, சிறையிலேயே கடந்த 3 ஆண்டுகளாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, மாநிலம் முழுவதிலும் 52 சிறைக்கைதிகள் எஸ்.எஸ்.எல்..சி.தேர்வை, புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களில் எழுதுகிறார்கள். அதற்காக, சென்னை புழல் மத்திய சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது என்றார் அவர்.

English summary
First SSLC public exam under Samacheer Kalvi scheme begins today in Tamil Nadu and Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X