For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நித்திரையில் இருக்கும் தமிழா!, சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா?''-கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: தமிழ் உணர்வுகளை அதிமுக அரசு மதிக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

முரசொலியில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், "சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினமாகும்'' என்றும் அந்த நாளை மிகமிகக் கோலாகலமாக விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்றும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்றும்;

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஏப்ரல் 13ம் தேதியன்று இதற்காக நடத்தப் போகும் விழாவில் முதல்வரே பங்கேற்று விருதுகளை வழங்கப் போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

23-1-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் கவர்னர் தனது உரையிலே செய்த அறிவிப்பில், "மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட புலவர் பெரு மக்கள், 1921-ம் ஆண்டு சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி, தமிழர்களுக்கென்று ஒரு "தனி ஆண்டு'' தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே "தமிழ்ஆண்டு'' எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவெடுத்தார்கள்.

எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி- தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர்'' அறிவித்தார்.

ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, "தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மனஉணர்வை புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது'' என்றார்.

திமுக ஆட்சியில் கவர்னர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று 2008ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்ப்புத்தாண்டு சட்டமுன் வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன்.

1-2-2008 அன்று இந்த சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் என். நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் வை.சிவபுண்ணியமும், மதிமுக சார்பில் அப்போது அங்கேயிருந்த மு.கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வமும் அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி அது நிறைவேறியது.

இப்படியெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப்பட்ட ஒரு முடிவு நடைமுறைப்படுத்தப்பட திமுக ஆட்சியிலே சட்டமாகக் கொண்டு வரப்பட்டு 2008-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. அதிமுக ஆட்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவினால் கொண்டு வரப்பட்ட அந்த மசோதாவை அவையிலே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்தன என்ற தகவலை செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்து அதுபற்றி கருத்துக் கேட்டபோது, அவர்களின் தமிழ் உணர்வுக்குத் தலைவணங்குகிறேன் என்று அப்போதே பதில் கூறினேன்.

இன்னும் சொல்ல வேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே, "நித்திரையில் இருக்கும் தமிழா!, சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு, அண்டிப் பிழைக்கவந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள் தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!''-என்று பாடியதையும் நினைவு கூற விரும்புகிறேன்.

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் செய்த தவறின் காரணமாக எப்படியெல்லாம் தமிழுக்கும், தமிழகத்துக்கும் கேடுகள் நேர்ந்து வருகின்றன என்பதைக் காணும்போது நெஞ்சம் விம்முகிறது.

மறைமலை அடிகள், பாரதிதாசன் போன்ற புலவர்களின் கொள்கைகளையும், தமிழர் உணர்வுகளையும் தமிழக அரசு காலில் போட்டு மிதிக்குமே தவிர மதிக்காது என்பதற்கு இப்போது எடுத்துள்ள இந்த நிலைதான் உதாரணம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK President M Karunanidhi today criticised ADMK government for reversing his government's decision to celebrate Tamil New Year on the first day of "Thai" in January instead of "Chithirai" in April. "By reversing DMK government's decision, ADMK government has ignored Aryans and their passion towards Tamil, includingthe interests of famous Tamil scholars like Maraimalai Adigal, V Kalyanasundaram and poet Bharatidasan", Karunanidhi wrote in his party organ Murasoli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X