For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக Vs அதிமுக: தமிழ் படும் பாடு!-இந்த முறை ஏப்ரல் 13ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு!

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: இந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் சித்திரை திங்கள் முதல் நாளான 13.4.2012ம் தேதி அன்று தமிழ்ப் புத்தாண்டு அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படவுள்ளது.

திமுக ஆட்சியில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளான பொங்கல் தினத்துக்கு மாற்றப்பட்டது. இந் நிலையில், அதை மீண்டும் ஏப்ரல் 13ம் தேதிக்கு மாற்றியுள்ளது அதிமுக அரசு.

இதையொட்டி ஏப்ரல் 13ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்று காலை 8.30 மணி அளவில் “துறை தோறும் தமிழ்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும். காலை 9.30 மணிக்கு “முத்திரை பதிக்கும் சித்திரை” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.

10.30 மணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் விஞ்சியிருப்பது அஞ்சாத துணிவே, அளவற்ற அறிவே, நெஞ்சார்ந்த கனிவே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து தமிழுக்கு அரும் பணியாற்றிய அறிஞர்களுக்கு விருதுகள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்தாய் விருது, ஒளவையார் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது ஆகியவற்றை வழங்குவார்.

மேலும் திருக்குறள் ஒப்பித்த மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள், சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கான பரிசுகள் ஆகியவற்றை வழங்கி ஜெயலலிதா விழாப் பேருரை ஆற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கற்குமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஒய்.ஜி. பார்த்தசாரதிக்கு சிறந்த பெண்மணிக்கான ஒளவையார் விருது:

இந்த ஆண்டிற்கான கபிலர் விருது பேராசிரியர் முனைவர் அ.அ. மணவாளனுக்கும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உ.வே.சா. விருது புலவர் செ. இராசுவுக்கும், சிறந்த பெண்மணிக்கான ஒளவையார் விருது ஒய்.ஜி. பார்த்தசாரதிக்கும் வழங்கப்படவுள்ளது.

இந்த விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக 1 லட்சம் ரூபாயும், 8 கிராம் தங்கப் பதக்கம், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.

மதுரை தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த் தாய் விருது:

இந்த ஆண்டிற்கான தமிழ்த் தாய் விருது மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறும் மதுரை தமிழ்ச் சங்கத்திற்கு விருதுத் தொகையாக 5 லட்சம் ரூபாய், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

2010 ஆண்டு வெளிவந்த நூல்களில் 27 நூல்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த நூல்களின் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் 30,000 ரூபாயும், அவற்றை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு நூல் ஒன்றுக்கு 10,000 ரூபாய் வீதமும் பரிசுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

English summary
Seeking to reaffirm her statement that Tamils celebrate their New Year on the first day of Chithirai (mid-April) and not at the birth of Thai (January 13), chief minister J. Jayalalithaa has ordered a grand celebration of the New Year by her government on April 13
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X