For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்ப் புத்தாண்டு: கருணாநிதி கொண்டு வந்த சட்டத்தை மக்கள் ஏற்கவில்லை- ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டு என கருணாநிதி அறிவித்து சட்டம் இயற்றியது முறையற்ற, மரபு மீறிய, மக்கள் மனதை புண்படுத்துகின்ற செயல் என்பதையும் கருணாநிதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்தச் சட்டத்தை நான் ரத்து செய்தேனே தவிர எதையும் மக்கள் மீது திணிக்கவில்லை. கருணாநிதி கொண்டு வந்த சட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் தொடர்ந்து சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சட்டசபையில் இன்று அவர் கூறுகையில், சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டு, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கான காரணங்கள் எவை என நான் எடுத்துக் கூறியது மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதைக் கண்டு, பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, வீண் விதண்டா வாதங்களை தனது கட்டுரையில் எடுத்து வைத்துள்ளார்.

சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளதை நான் சுட்டிக் காட்டியதற்கு, இது என்ன ஆதாரமா? என்று வினவியிருக்கிறார் கருணாநிதி. நான் மதுரை ஆதீனம் என்பவரின் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னது ஆதாரம் இல்லையென்றால், பெயர் குறிப்பிடப்படாமல், ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும், ஒப்புக்கொண்டுள்ள உண்மை என்று கூறி, ஒரு சட்டத்தை கருணாநிதி இயற்றியது ஆதாரத்தின் அடிப்படையிலா?.

திமுக ஆட்சியில் சென்னையிலும், கோவையிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடு, தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அல்லவா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கருணாநிதி. 1968ம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது, உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இது தமிழ் மொழியை பரப்புவதற்கு என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனால், 2010ம் ஆண்டு, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மாநாடு உலகத் தமிழ் மாநாடுகளின் வரிசையில் இடம் பெறாத, கருணாநிதியின் சுய விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட, தன்னல தம்பட்ட மாநாடு.

கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுகவைச் சேர்ந்த “தலைசிறந்த” தமிழ் அறிஞர்கள் முன்வரிசையில் அமர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். உண்மையான தமிழ் அறிஞர்கள் பின் வரிசைக்குத் தள்ளப்பட்டனர்.

கருணாநிதி தன்னுடைய கட்டுரையிலே, சித்திரையில் தொடங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும், நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும் என்று நான் கூறியதை சுட்டிக்காட்டி, சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே என்று கேட்டிருக்கிறார்.

சித்திரை மாதம் பௌர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருகிறது என்றும்; கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கார்த்திகை நட்சத்திரம் வருகிறது என்பதை கருணாநிதியே ஒப்புக் கொண்டுவிட்டதால், பிற மாதங்களை இங்கே விளக்கிக் கூற விரும்புகிறேன்.

வைகாசி மாதம் பௌர்ணமியன்று விசாகம் நட்சத்திரம் வருகிறது. ஆனி மாதம் பௌர்ணமியன்று, அனுஷம் நட்சத்திரம் வருகிறது. அதாவது, அனுஷம் நட்சத்திரம் மருவி, ஆனி என்றழைக்கப்படுகிறது. ஆடி மாதம் பௌர்ணமியன்று பூராடம் நட்சத்திரம் வருகிறது. பூராடம் - பூராடி என திரிந்து, ஆடி மாதம் என்றழைக்கப்படுகிறது.

ஆவணி மாதம் பௌர்ணமியன்று திருவோணம் நட்சத்திரம் வருகிறது. அதாவது திருவோணம் அல்லது சிரவணம் நட்சத்திரம், சிராவணியாக திரிந்து, ஆவணி மாதம் என அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் பௌர்ணமி தினத்தன்று பூரட்டாதி நட்சத்திரம் வருகிறது. பூரட்டாதி நட்சத்திரம் திரிந்து, புரட்டாசி என்றழைக்கப்படுகிறது.

ஐப்பசி மாதம், அஸ்வினி நட்சத்திரம் வருகிறது. அஸ்வினி நட்சத்திரம், ஆஸ்விஜம் என்றழைக்கப்படுகிறது. அது திரிந்து ஐப்பசி என்றழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில், மிருகசீர்ஷம் நட்சத்திரம் வருகிறது. மிருகசீர்ஷம் நட்சத்திரம், மார்கசீர்ஷம் என்றும் அழைக்கப்படுகிறது. இது திரிந்து மார்கழி என்றழைக்கப்படுகிறது. தை மாதம் பௌர்ணமி அன்று, பூசம் நட்சத்திரம் வருகிறது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயரும் உண்டு. இதுவே தை ஆனது.

மாசி மாதம் பௌர்ணமியன்று மகம் நட்சத்திரம் வருகிறது. மகம் நட்சத்திரத்தை மாக, அதாவது மாசி, என்றும் அழைப்பார்கள். இதுவே மாசி என்றழைக்கப்படுகிறது. பங்குனி மாதம் பௌர்ணமியன்று உத்திரம் நட்சத்திரம் வருகிறது. இதை உத்திரப் பல்குனி என்றும் அழைப்பார்கள். இதுவே பங்குனி மாதம் என்று அழைக்கப்படுகிறது.

எப்படி சென்னப்பட்டினம் என்பது காலப்போக்கில் சென்னை என்று மருவியதோ, சைலம் என்பது சேலம் என்று எவ்வாறு மருவியதோ; அது போல் தான் இவையும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று மறைமலை அடிகள் கூறவில்லை என்பதை எடுத்துக்காட்ட கருணாநிதியின் கருத்தை ஒட்டிய, சிறுவை நச்சினார்க்கினியன் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி வெளியிடப்பட்ட மலரில், “திருவள்ளுவனார் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்பது எளிதிற் பெறப்படும். கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்” என்று 1935ம் ஆண்டு, சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் தினத்தில் மறைமலையடிகளார் பேசியதாக கூறியிருப்பதை மேற்கோள் காட்டினேனே தவிர, அந்தப் பக்கத்திற்கு முன் பக்கத்தில் சிறுவை நச்சினார்க்கினியன் தெரிவித்துள்ள கருத்தைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை.

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மறைமலை அடிகளார் சொல்லவில்லை என்பதற்காகத்தான் மேற்படி கட்டுரையை நான் மேற்கோள் காட்டினேன்.

“வாழ்வியற் களஞ்சியம்”, என்ற நூலைக் குறிப்பிட்டு, ஆகம விதியின்படி தை முதல் நாள் தான் புத்தாண்டு என்று கூறியிருக்கிறார் கருணாநிதி. “தை பிறந்தால் வழி பிறக்கும்”, என்று தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, “தை பிறந்தால் புத்தாண்டு பிறக்கும்” என்று குறிப்பிடப்படவில்லை.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி என்ற நூலினை மேற்கோள் காட்டி, அந்த நூலில் தமிழாண்டின் தொடக்க மாதம் தை என்று குறிப்பிட்டிருப்பதாக கூறியிருக்கிறார் கருணாநிதி.

அந்த நூலில் 113வது பக்கத்தில் “இச்செய்தி, தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது” என்று இருப்பதை தனக்கு வசதியாக திரு.கருணாநிதி மறைத்துவிட்டார். அந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலியில் தை மாதம் தான் தமிழ் ஆண்டின் தொடக்க மாதம் என்று ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தால் இதனை அடுத்து, தை- ஒரு திங்கள்; The tamil month, January-February என்று ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது?.

தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று அறிவித்து, நடைமுறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்துள்ளது என்று 23.1.2008 அன்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டதாக கருணாநிதி கூறியிருக்கிறார்.

ஆளுநர் உரையில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, கருணாநிதியின் மகள் கனிமொழியால் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் விழாவில் கருணாநிதி, “சங்கமம் போற்றுதும் என்று போற்றிப் பாடி, இது ஆண்டு தோறும் நடக்க வேண்டும்; பொங்கல் திருநாளை நினைவூட்டும் வகையில் தொடர்ந்து நடக்க வேண்டும். தமிழரின் புத்தாண்டு தை முதல் நாள் என்று 500 புலவர்கள் கூடி கண்டுபிடித்து அறிவித்து இருக்கிறார்கள். அதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கும் நாள் விரைவில் வரும்” என்று கூறியுள்ளார். எனவே, சென்னை சங்கமம் விழாவில் தான், இது முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. ஒரு வேளை, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால் தான் ஆண்டுதோறும் சென்னை சங்கமம் விழா நடத்தப்பட்டு, அதற்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும் என்று கருணாநிதி எண்ணினார் போலும்!.

“தமிழர் திருநாள்” என்னும் தலைப்பில் மு.வ. அவர்களால் 1960ம் ஆண்டு கலைமகள் பொங்கல் மலரில் எழுதப்பட்ட கட்டுரையில், தைத் திருநாளை இயற்கைக்கு நன்றி செலுத்தும் திருவிழா என்று தான் குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர, அதை தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடவில்லை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2008ம் ஆண்டு, ஆளுநர் உரையில், “திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால் தைத் திங்கள் முதல் நாளையே, தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என அறிவித்து, நடைமுறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கருணாநிதி, திருவள்ளுவர் நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று 1963ம் ஆண்டு திமுக சார்பில் கொண்டு வரப்பட்ட தனி நபர் தீர்மானத்தின் மீது இந்த சட்டப் பேரவையில் உரையாற்றிய போது, “மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை தினமாக விட்டு வருகிறோம். ஒரு திங்களில் ஒரு இரண்டாம் சனிக்கிழமையைக் கூட, திருவள்ளுவருடைய நினைவு நாளாகக் கொண்டாட, விடுமுறை தினம் என்று அறிவிக்கலாம். இரண்டாம் சனிக்கிழமையன்று என அமையாது திங்கள் கிழமை அல்லது செவ்வாய்கிழமை என்று வருமானால், அந்த திங்களில் இரண்டாம் சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டுவிட்டு, திருவள்ளுவருடைய நினைவு நாள் என்று குறிக்கப்பட்ட தினம் என்று வருகிறதோ அன்றைக்கு விடுமுறை அளிக்க அரசாங்கம் முன் வரலாம். திருவள்ளுவருடைய தினத்தை நவம்பர் மாதம் கொண்டாடுவது என்றால் நவம்பர் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை விடுவதற்கு பதிலாக, அந்தத் திங்களில் திருவள்ளுவருடைய நினைவு நாளாகக் குறித்த தினத்திற்கு விடுமுறை அளிக்கும்படியாக இந்தத் தீர்மானத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்” என்று பேசியிருக்கிறார்.

ஏன் அப்போது இப்படி பேசினார் கருணாநிதி?. அப்பொழுதே திருவள்ளுவர் தை மாதத்தில் தான் பிறந்தார் என்று கூறி, அந்த நாளை விடுமுறை நாளாக அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கலாமே!.

2008ம் ஆண்டு, சென்னை சங்கமம் விழாவில் உரையாற்றும் போது, தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என விரைவில் அறிவிக்கப்படும் என கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து, 17.1.2008 அன்று, அன்றைய தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவ்வாறு அறிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கருத்துருவில், 2004ம் ஆண்டு அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், சித்திரை முதல் நாளுக்குப் பதிலாக, தைத் திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கக் கருதினால், இப்பொருண்மையைத் தமிழ் வளர்ச்சி மன்றத்தில் வைத்து, ஆய்வு செய்து முடிவு செய்வது ஏற்புடையதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

இவ்வாறான கடிதம், இது ஆய்வு செய்து முடிவு செய்யப்பட வேண்டிய பொருள் என்று அமைந்துவிடும் என்பதால், அரசின் அறிவுரை காரணமாகவோ என்னவோ இந்த வாசகங்கள் அடிக்கப்பட்டு, திருத்திய கடிதம் தான் அரசுக்கு அனுப்பப்பட்டது. முறையாக ஆய்வு எதையும் செய்யாமல் தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக, அந்தச் சட்டத்தை இயற்றினார் கருணாநிதி. ஆனால், அந்தச் சட்டத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் தொடர்ந்து சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் என்பது தான் உண்மை.

தை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டு என கருணாநிதி அறிவித்து சட்டம் இயற்றியது முறையற்ற, மரபு மீறிய, மக்கள் மனதை புண்படுத்துகின்ற செயல் என்பதையும் கருணாநிதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்தச் சட்டத்தை நான் ரத்து செய்தேனே தவிர எதையும் மக்கள் மீது திணிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

English summary
Joining issue with his archrival and DMK president Karunanidhi, Tamil Nadu Chief Minister Jayalalithaa said people have not accepted the change in the date of Tamil New Year to the month of "Thai" from Chittirai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X