For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ் ஈழம்: வட்டுக்கோட்டையை சுட்டிக் காட்டி டி.கே.ரங்கராஜனுக்கு கருணாநிதி 'குட்டு'!

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: "தனித் தமிழ் ஈழம்'' தான் என்பது 1977-ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு. ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை-உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த தலைவர் டி.கே.ரங்கராஜனும் இலங்கையிலே உள்ளவர்கள் தற்போது தமிழ் ஈழத்தை கோரவில்லை என்பதைப்போல சொல்லியிருக்கிறார்கள்.

1987-ல் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா இடையிலான ஒப்பந்த அடிப்படையில் இலங்கை அரசியல் சட்டத்திற்கு 13-வது திருத்தம் என்று ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்தத் திருத்தத்தின் மூலமாகத் தான் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பரவல் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். ஆனால் அந்தத் திருத்தத்தை அரை மனதுடன் ஏற்றுக் கொண்ட இலங்கை அரசு இன்று வரை அதை நிறைவேற்றும் எண்ணம் தனக்கில்லை என்பதை தெளிவாக்கி வருகிறது.

அதனால் தான் இன்றைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே "இலங்கையில் தமிழர்களுக்கு, அவர்களுடைய பாரம்பரியமான நிலப் பகுதிகளை இணைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை உருவாக்குவதும்; இந்தியாவில் உள்ளதைப் போல அந்த மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதும்; சாத்தியம் தானா?'' என்று வினவியிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், சுரேஷ் பிரேமச்சந்திரன், வாக்குறுதிகளை மீறுவதையே இலங்கை அரசு வழக்கமாக கொண்டிருக்கும் வரலாற்றினை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் தோலுரித்துக் காட்டியிருக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பின்பற்றி வரும் தமிழர் விரோத வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் பார்த்தால்; தற்போது சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் அதிபர் ராஜபக்சே அளித்திருக்கும் உறுதிமொழிகள் அனைத்தும் ஏமாற்றும் தந்திரோபாயங்கள் தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்..

டி.கே.ரங்கராஜன் வெளியிட்டுள்ள இன்னொரு தகவல் நமது உள்ளத்தை உலுக்குகிறது. "மட்டக்களப்பு பகுதிகளுக்குச் சென்ற போது எங்களுக்கு வேதனையான நிலை ஏற்பட்டது. உண்மையிலேயே நான் கண்ணீர் விட்டேன். இலங்கை போரில் 35,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாகி உள்ளதைப் பார்த்தோம். இவர்களில் 13 ஆயிரம் விதவைகள் 23 வயதுக்கும் குறைவானவர்கள்'' என்று அவர் சொல்லியிருக்கிறார்.

தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் யாரும் வலியுறுத்தவில்லை என்று சொல்லியிருக்கும் டி.கே. ரங்கராஜன் கவனத்திற்கு ஒரு நிகழ்வினை நினைவூட்ட விரும்புகிறேன். 1977-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு, 1976-ல் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், அனைத்துத் தமிழ் மக்களின் விடுதலைக் கூட்டணி, மலையக மக்களுடைய அமைப்பு என எல்லோரும் ஒன்றிணைந்து "தனித் தமிழ் ஈழம்'' தான் என்ற முடிவினைத் தீர்மானமாக வடித்தெடுத்து; அதனையே முன் வைத்து தேர்தலிலே போட்டியிட்டார்கள். தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர 18 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

"தனித் தமிழ் ஈழம்'' தான் என்பது 1977-ம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு. ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை-உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையை-அடக்குமுறை அடாவடிகளாலோ, அதிகார அத்துமீறல்களாலோ, சர்வாதிகார சதிராட்டங்களாலோ-தீர்த்து விட முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மேலும் தாமதமோ தயக்கமோ இன்றி தீர்வு காணப்பட வேண்டுமென்பது காலத்தின் கட்டளை. அதைக் கால வரையறையின்றி ஒத்தி வைத்து விட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

English summary
DMK president Karunanidhi has slammed CPM MP T.K.Rangarajan for his comments on Tamil Eelam. Rangarajan has said that no Tamil party in Sri Lanka wants separate nation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X