For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போபர்ஸ்...25 வருடத்திற்குப் புதிய புயலைக் கிளப்பிய லின்டர்ஸ்டிரோம்

By Mathi
Google Oneindia Tamil News

Quattrochi Sten Lindstrom and Rajiv Gandhi
ஸ்டாக்ஹோம்: இந்தியாவை உலுக்கிய போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் அம்பலத்துக்கு வந்து 25 ஆண்டுகளாகிவிட்டன. 1987ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் புயல் இந்தியாவை உலுக்கி வருகிறது. இந்த ஊழலின் ஆவணங்களை இந்து பத்திரிகை பக்கம் பக்கமாக வெளியிட்டது. இந்து நாளேட்டுக்கு இந்த ஆவணங்களைக் கொடுத்தவர் சுவீடன் காவல்துறை தலைவராக இருந்த லின்டர்ஸ்டிரோம்.

இந்து பத்திரிகையின் செய்தியாளர் சித்ரா சுப்பிரமணியம் மூலமாக போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் அம்பலத்துக்கு வந்தது. அதே சித்ரா சுப்பிரமணியம் 25 ஆண்டுகள் கழித்து சுவீடனின் காவல்துறை தலைவராக இருந்து போபர்ஸ் ஆவணங்களை கசியவிட்ட லின்டர்ஸ்டிரோமை சந்தித்து ஒரு இணையத்தளத்துக்காக பேட்டி எடுத்துள்ளார்.

அந்தப் பேட்டியின் முக்கிய பகுதிகள்:

கேள்வி: இத்தனை ஆண்டு காலத்துக்குப் பிறகு உங்களை நீங்கள் ஏன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிவு செய்தீர்கள்?

பதில்: சர்வதேச அளவில் ஊழல் என்பது அதிகரித்து விட்டது. ஒவ்வொரு நிறுவனமுமே தங்களது பொருட்களை விற்பனை செய்வதற்கு ஊழலைத்தான் கையாள்கின்றனர். ஊழலுக்கு எதிரான சர்வதேச அளவிலான போராட்டத்தில் நானும் எனது பங்களிப்பை செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன். அதையே நான் இப்பொழுது பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்..

கேள்வி:
உங்களைப் பற்றி அறிமுகம் செய்துகொள்ளுங்கள்...

பதில்: நாங்கள் சமூக ஜனநாயக மரபுகளிலிருந்து பிறந்தவர்கள். சுவீடன் நாட்டவர்களைப் பொறுத்தவரையில் மிகவும் கடின உழைப்பாளிகள். அனைவருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும் என்று கருதுகிறவர்கள். சர்வதேச தரத்திற்கு அமையவே எமது அரசியல் அமைப்புகள்.. சமூக அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உலகின் பல துறைகளில் சுவீடன் நாட்டவர் முன்னணியில் இருக்கின்றனர்.

போபர்ஸ் நிறுவனமும்கூட நல்ல நிறுவனம்தான். அவர்களது தயாரிப்பு தளவாடங்களும் திறன்வாய்ந்தவைதான். எதிர்பாராதவிதமாக தங்களது தளவாடங்களை விற்க லஞ்சம் மற்றும் ஊழல் என சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

என்னுடைய நீண்ட காவல்துறை பணி அனுபவத்தில் இதுபோன்ற பல வழக்குகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் போபர்ஸ் வழக்கு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் போபர்ஸ் ஊழலானது சுவீடனின் அனைத்து சட்ட விதிகளையுமே மீறும் வகையில் அரசியல் செல்வாக்கு இதில் சம்பந்தப்படுத்தப்பட்டிருந்தது. ஊழல் என்பது எங்கோ ஆப்பிரிக்காவில் தென் அமெரிக்காவில் அல்லது ஆசியாவில்தான் நடைபெறுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த சுவீடன் நாட்டினருக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருந்தது போபர்ஸ் ஊழல் அமைந்தது.

இதர நாட்டு தொழிலதிபர்களை விட, அரசியல்வாதிகளைவிட மதிப்புக்குரியவர்களாக தாங்கள் யாரை நினைத்திருந்தார்களோ அவர்களின் இத்தகைய செயல்பாடு சுவீடன் நாட்டவரை காயப்படுத்தியிருந்தது.

போபர்ஸ் பீரங்கி பேரமானது சுவீடனில் இதுவரை இல்லாத மிகப் பெரிய ஆயுத பேரமாகும். நேர்மையான சுவீடன் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஓரம்கட்டப்பட்டு அனைத்துவிதமான விதிமீறல்களும் இந்த போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் நடைபெற்றது. எங்களது முன்னாள் பிரதமர் ஓல்ப் பால் அமைதி பற்றியும் ஆயுத களைவு பற்றியும் பேசி வருகிறார். ஆனால் இங்கே சட்டவிரோதமாக ஆயுதங்கள விற்பனை செய்து வருகிறோம்.

போபர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த மார்ட்டின் ஆர்ட்போ இந்த ஒப்பந்தத்துக்காக கடுமையாக பாடுபட்டார். போபர்ஸ் பீரங்கி பேர சர்ச்சை வெளியானதுபோது அரசியல்ரீதியாக சிலருக்கு பணம் ரகசியமாக கொடுக்கப்பட்டிருந்தது என்பது எனக்குத் தெரிய வந்தது. அது ஆர்ட்போவுக்கும் தெரியும். ஆனால் என்னிடம் கூறும்போது அப்படி ஒரு பணம் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் தமக்கு ஏற்படவில்லை என்றார்.

கேள்வி: இந்த போபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில் இந்தியாவின் தொடர்பை எப்படி கண்டுபிடித்தீர்கள்?

பதில்: அது ஒரு எதிர்பாராத விபத்து எனலாம். போபர்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள், அலுவலகங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டோம். எனது குழுவில் இருந்தவர்களிடம் என்ன ஆவணம் கிடைத்தாலும் கண்ணில்பட்டதையெல்லாம் எடுங்கள் என்றேன். இந்தியா தொடர்பான பல ஆவணங்கள் சிக்கின. ஆனால் இதற்கு போபர்ஸ் நிறுவனத்தினரால் உரிய பதிலளிக்கவில்லை.

கேள்வி: போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விசாரணையில் இருந்து என்ன மாதிரி பாடம் கற்றுக் கொண்டீர்கள்?

பதில்: இந்த ஊழல் பற்றி நீதியும் நேர்மையுமான விவாதம் நடத்தப்பட வேண்டும் என விரும்பினேன். இந்த சமூகத்தை கண்காணிக்கக் கூடிய ஒரு அங்கம் ஊடகங்கள்தான். இந்தியாவிலிருந்து சுவீடனில் பணியாற்றிய உங்களைப் போல ஊடகவியலாளர்களை எனக்கு நன்றாக தெரியும். என்னுடைய பணிக்காலத்தில் ஏராளமான இந்திய அரசியல்வாதிகள் இங்கு வந்து சென்றுள்ளனர். இந்த பேரத்தில் ராஜீவ் காந்தியின் ஈடுபாடு குறித்தும் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை போபர்ஸ் பீரங்கிகள் தரமானவை. ஆனால் அதைக் கொள்முதல் செய்த விவகாரம்தான் பிரச்சனைக்குரியது.

கேள்வி: போபர்ஸ் பீரங்கி பேரம் பரபரப்பாக பேசப்பட்ட நாட்களில் மக்களின் கருத்து என்னவாக இருந்தது?

பதில்: சுவீடனில் அனைவரும் அதிர்ச்சியடைந்து போனார்கள். ஊழலின் உச்சமாக இந்தியாவுடனான போபர்ஸ் பீரங்கி பேர ஊழலைக் கருதினர். முன்னாள் பிரதமர் பால்முக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எந்த ஆவணமும் இல்லை. ஆனால் அவரது அமைச்சர்கள் சிலருக்கு என்ன நடந்தது என்று தெரியும்.

கேள்வி:
இந்த விவகாரத்தில் ராஜீவ் காந்தியின் பெயர் எப்படி வந்தது?

பதில்: ஊழல் பணத்தை ராஜீவ் காந்தி பெற்றார் என்பதற்கு எந்த ஆதாரமும், ஆவணமும் இல்லை. ஆனால் இந்தியாவிலும், ஸ்வீடனிலும் இந்த ஊழலை மூடி மறைக்க நடந்த அத்தனை முயற்சிகளையும் தடுக்காமல் அவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பல இந்திய நிறுவனங்களின் பெயர்கள் மாசுபட்டன, அப்பாவிகள் சிக்கினார்கள். ஆனால் உண்மையான குற்றவாளி தப்பி விட்டார். குவாத்ரோச்சிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவானவை, திட்டவட்டமானவை. போபர்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஊழல் பணமானது ஏஇ சர்வீஸஸ் என்ற நிறுவனத்திற்குப் போய் அங்கிருந்து குவாத்ரோச்சியின் கணக்குக்கு வந்து சேர்ந்தது. ஆனால் இந்தப் பணத்தை தனது கணக்கிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி விட்டார் குவாத்ரோச்சி. இந்திய விசாரணை அமைப்புகளும் குவாத்ரோச்சிக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று கூறி விட்டன. மேலும் ஸ்வீடனிலும் சரி, சுவிட்சர்லாந்திலும் சரி யாருமே குவாத்ரோச்சியை விசாரிக்க விடவே இல்லை.

ஆர்ட்போவின் டைரியில் N (அருண் நேரு), Q (ஒட்டாவியோ குவாத்ரோச்சி) என்ற பெயர்கள் குறிக்கப்பட்டிருந்தது.மேலும் ஏ.சி. சர்வீசஸ் நிறுவனத்துடனும் ஜெனிவாவில் உள்ள காந்தி அறக்கட்டளையுடனும் பேச்சுவார்த்தை நடத்திய விவரமும் அந்த டைரியில் இருந்தது.

கேள்வி: ஏன் போபர்ஸ் ஊழல் தொடர்பான ஆவணங்களை கசிய விட முடிவெடுத்தீர்கள்?

பதில்: நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் இதை தெரிவிக்க எண்ணினேன். இதனால்தான் ஆவணங்களை வெளிப்படுத்தினேன். இது ஜனநாயகத்தின் ஒரு அங்கம்தான். அதிகாரப்பூர்வ வழிகளில் பல தடைகள் வரும்போது, வேறு ஒரு முடிவைத்தானே எடுக்க முடியும். எங்களது நாட்டில், இது சாதாரணம். ஒரு ஊழல் குறித்து யார் வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும். நான் இதுதொடர்பாக பலரைச் சந்தித்தேன். பிறகுதான் இந்துவிடம் கொடுக்க முடிவு செய்தேன்.

எனது அரசோ அல்லது இந்திய அரசோ அல்லது போபர்ஸ் நிறுவனமோ இந்தப் பிரச்சனையை தீவிரமாக எடுத்துக் கொண்டு தவறை சரி செய்ய முயலும் என்று நான் நம்பவில்லை. நம்பிக் கொண்டு காத்திருக்க நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் லின்ட்ஸ்டிரோம்.

English summary
April 2012 marks the 25 anniversary of the Bofors-India media revelations, which began on April 16, 1987 with revelations on Swedish state radio. The Hoot presents an interview with the man who decided to leak over 350-documents to former Indian journalist Chitra Subramaniam-Duella, then with The Hindu and later with The Indian Express and The Statesman. The documents included payment instructions to banks, open and secret contracts, hand written notes, minutes of meetings and an explosive diary. They led to the electoral defeat of an Indian prime minister and blew gaping holes into a Swedish prime minister’s record as a champion of peace and disarmament. Above all, they formed the basis for the first ever transfer of secret bank documents from Switzerland to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X