For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொறியியல் படிப்புக்கு நுழைவு தேர்வு கொண்டு வர கபில்சிபல் திட்டம்: ராமதாஸ் கண்டனம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், பொறியியல் படிப்புகளுக்கும், இளம் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் அடுத்த கல்வி ஆண்டு முதல் தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிரான இந்த பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை கைவிடும்படி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய போதிலும், இந்த முடிவில் உறுதியாக இருக்கும் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல், இதுகுறித்து விவாதிப்பதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை வரும் 5ம் தேதி டெல்லியில் கூட்டியிருக்கிறார்.

அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக மத்திய அரசு கூறிவரும் போதிலும் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு என்பது தொடந்து பகல் கனவாகவே இருந்து வருகிறது.

இந்தியாவில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை சுமார் 15 சதவீதம் என்ற அளவில் இருக்கும் நிலையில் கிராமப்புற, ஏழை மாணவர்களின் உயர்கல்வி விகிதம் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. அதாவது கிராமப்புற, ஏழை மாணவர்களில் 90 சதவீதத்திற்கு அதிகமானவர்களுக்கு உயர்கல்வி கிடைப்பதில்லை.

இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட பிறகும் இப்படி ஒரு அவலநிலை தொடர்வதற்கு நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

கிராமப்புற மாணவர்களுக்கு இப்போதுள்ள உயர் கல்வி வாய்ப்புகளையும் தட்டிப்பறிக்கும் வகையில் பொறியியல் படிப்புகளுக்கும், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு கொண்டுவர கபில் சிபல் திட்டமிட்டிருக்கிறார்.

இத்தகைய பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டால் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்படும். தமிழ்நாட்டில் முன்பு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டதால் கிராமப்புற மாணவர்கள் தொழில் படிப்புகளை படிக்க முடியாத நிலை இருந்தது.

இதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டங்களின் பயனாகவே தமிழகத்தில் நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் பொறியியல் கல்வி பயிலும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை 2005ம் ஆண்டின் அளவான 56.72 சதவீதத்திலிருந்து தற்போது 68.76 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

கிராமப்புற மாணவர்களின் இந்த முன்னேற்றத்தை பறிக்கும் வகையில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்வது சமூக நீதிக்கு எதிரானது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கல்வி பொது பட்டியலில் இருக்கும் நிலையில், உயர் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்வது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயலாகும்.

எனவே வரும் 5ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடும்படி தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

English summary
PMK founder S. Ramadoss has deplored the Centre's move to introduce national-level entrance test for admission to engineering and also arts and science courses, saying it will be detrimental to the interests of poor and rural students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X