For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலாம் அல்லது மன்மோகன் அல்லது சோம்நாத் தான் ஜனாதிபதியாக வேண்டும்-முலாயம், மம்தா அதிரடி!

By Chakra
Google Oneindia Tamil News

abdul kalam, Manmohan singh and Somnath chatterjee
டெல்லி: ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் அப்துல் கலாமை நிறுத்த வேண்டும் அல்லது பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதியாக்க வேண்டும், அதுவும் இல்லாவிட்டால் மூத்த இடதுசாரித் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்த வேண்டும் என்று சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவும், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். அப்போது காங்கிரஸ் சார்பில் இரு பெயர்கள் முன் வைக்கப்பட்டன. முதல் சாய்சாக பிரணாப் முகர்ஜி பெயரையும், இரண்டாவது சாய்சாக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பெயரையும் சோனியா முன் வைத்தார்.

பிரணாபை ஏற்க விருப்பமில்லாவிட்டால், அன்சாரியை மம்தா ஏற்றுக் கொள்வார் என்று சோனியா நினைத்திருந்தார். ஆனால், அவருக்கு எந்த பதிலையும் தராத மம்தா பானர்ஜி அங்கிருந்து கிளம்பி சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் இல்லத்துக்கு வந்தார்.

அங்கு இருவரும் 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினர். இதையடுத்து இருவரும் சேர்ந்து நிருபர்களை சந்தித்தனர். அவர்கள் கூறுகையில், நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் நாங்கள் சொல்லும் 3 பேரில் ஒருவர் தான் ஜனாதிபதியாக வேண்டும். எங்களது முதல் சாய்ஸ் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான்.

அவரை காங்கிரசால் ஏற்க முடியாவிட்டால் பிரதமர் மன்மோகன் சிங்கையே ஜனாதிபதியாக்கலாம்.

அதுவும் முடியாவிட்டால் முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை ஜனாதிபதியாக்கலாம். இவர்கள் தான் எங்களது சாய்ஸ். முதல் சாய்ஸ் அப்துல் கலாம் தான் என்றனர்.

இந்த நிருபர்கள் சந்திப்புக்குப் பின் மீண்டும் இருவரும் தொடர்ந்து சந்தித்துப் பேசினர்.

கூட்டணிக் கட்சித் தலைவரான மம்தா மற்றும் தங்களை வெளியில் இருந்து ஆதரிக்கும் முலாயம் சிங்கின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சியால் ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை வெல்ல வைக்க முடியாது என்ற நிலையில், இந்த இருவரும் புதிதாக 3 பெயர்களைக் கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திணற வைத்துள்ளனர்.

அதிலும் சோனியாவுக்கு ஆகாத அப்துல் கலாமை (சோனியா வெளிநாட்டவர் என்பதால் அவரை பிரதமராக கலாம் அனுமதிக்கவில்லை, இதனால் அவர் மீது சோனியாவுக்கு தனிப்பட்ட வெறுப்பு உண்டு) முதல் சாய்சாக அறிவித்திருப்பதன் மூலம் காங்கிரசை அதிர வைத்துள்ளனர்.

அவர்களது இரண்டாவது சாய்ஸ் தான் மிக வேடிக்கையானது. பிரதமராக உள்ள மன்மோகன் சிங்கை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று கூறியிருப்பதன் மூலம் அவர் இனியும் பிரதமராக நீடிப்பதை தாங்கள் விரும்பவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

மூன்றாவது சாய்ஸ் தான் இதில் காங்கிரசும் கொஞ்சமாவது ஏற்கக் கூடிய சோம்நாத் சாட்டர்ஜியாகும். மூத்த இடதுசாரித் தலைவரான இவர் மக்களவை சபாநாயகராக இருந்து அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார்.

ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரகாஷ் காரத்துக்கும் சோம்நாத் சாட்டர்ஜிக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து சாட்டர்ஜியை கட்சியை விட்டே துரத்தினார் காரத். இதனால், அவர் இப்போது மார்க்சிஸ்ட் கட்சியில் இல்லை. இதனால் தான் அவரை மம்தா ஆதரிக்க முன் வந்துள்ளார்.

கலாமை திமுகவும் ஆதரிக்கும்?:

இந் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறி வருகிறார். இப்போது மம்தா, முலாயம் ஆகியோர் இணைந்து கலாமின் பெயரை முன் வைத்துள்ளதால், கருணாநிதியும் அவரை ஆதரிப்பார் என்று தெரிகிறது.

ஆனால், 2ஜி விவகாரத்தில் சிக்கியுள்ளதால் காங்கிரசின் நெருக்குதலுக்குப் பணிந்து அந்தக் கட்சி சொல்லும் எந்த வேட்பாளரையும் ஆதரிக்க வேண்டிய நிலைக்கும் திமுக தள்ளப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை சோம்நாத் சாட்டர்ஜியை ஆதரிக்க மறுக்கலாம். அதே நேரத்தில் காங்கிரஸ், பாஜகவை சாராத நடுநிலையாக உள்ள அப்துல் கலாமை ஆதரிக்க முன் வரலாம்.

முலாயம் சிங் யாதவ் ஒருவர் தான் ஆரம்பத்தில் இருந்தே அப்துல் கலாம் பெயரை கூறி வந்தார்.

அப்துல் கலாமை ஆதரிக்க பாஜகவும் தயாராகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ஜனாதிபதி தேர்தல் காங்கிரஸை மாபெரும் நெருக்கடியில் தள்ளிவிட்டுவிட்டது மட்டும் உண்மை.

English summary
SP chief Mulayam Singh and West Bengal chief minister Mamata Banerjee threw more names for Presidential poll saying they had discussed the names of Prime Minister Manmohan Singh, former President APJ Abdul Kalam and former Speaker Somnath Chatterjee as possible candidates. The President of the country should be chosen unanimously, said Mamata Banerjee at a press conference along with Mulayam Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X