For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பிரணாப்பை விரும்பவில்லை சோனியா...பிரதீபாவையே மீண்டும் குடியரசுத் தலைவராக்கியிருப்பார்'

Google Oneindia Tamil News

Sonia Gandhi Pratibha Patil and Pranab Mukherjee
டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும், வாய்ப்புகளும் கிடைத்திருந்தால், நிச்சயம் பிரதீபா பாட்டீலைத்தான் மீண்டும் தேர்வு செய்திருப்பார் சோனியா காந்தி என்று கூறியுள்ளார் தொலைக்காட்சி செய்தி ஆய்வாளரும், இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் சீனியர் அசோசியேட் எடிட்டருமான சேகர் ஐயர்.

இதுகுறித்து அவர் ஒரு இணையதள வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்துள்ள பதில் வருமாறு...

குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் எந்தவிதமான தவறுகளையும் செய்யவில்லை. குறிப்பாக சோனியா காந்திக்கோ அல்லது பிரதமர் மன்மோகன் சிங்குக்கோ அவர் அரசியல் சட்ட ரீதியாக எந்தவிதப் பிரச்சினையையும் கொடுக்கவில்லை.

அவரது வெளிநாட்டுப் பயணங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்னவோ உண்மைதான். அதேபோல அவரது புனே வீடும் கூட சர்ச்சையில் சிக்கியது உண்மைதான். இருப்பினும் ஒரு குடியரசுத் தலைவராக அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை.

எனவே சோனியா காந்திக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், முழு சுதந்திரமும் இருந்திருந்தால் நிச்சயம் பிரதீபா பாட்டீலைத்தான் மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்திருப்பார் என்று கூறியுள்ளார் சேகர் ஐயர்.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் மூக்குடைப்பு ஏற்பட்டது உண்மைதானே என்ற கேள்விக்கு மிக மிக சரி. அவர்கள் மிக மோசமான முறையிலும், தவறான முறையிலும் இந்தத் தேர்தலை அணுகியுள்ளனர்.இது நிச்சயம் அவர்களுக்குப் பெரும் அடிதான். குறிப்பாக பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவு. அவர்களது கட்சியினர், தங்களது கட்சித் தலைமை செயல்பட்ட விதம் குறித்து பெரும் அதிருப்தியுடன் உள்ளனர் என்றார் ஐயர்.

பிரணாப் முகர்ஜி குறித்து சொல்லுங்களேன் என்ற கேள்விக்கு, சந்தேகமே இல்லாமல் பிரணாப் முகர்ஜி நல்ல வேட்பாளர்தான். இது நல்லதேர்வுதான். அவருக்கு அரசிலும், அரசியல் சட்டத்திலும் நல்ல அறிவும், அனுபவமும் உண்டு. அவர் மிகச் சிறந்த குடியரசுத் தலைவராக செயல்பட்டு நிச்சயம் வரலாறு படைப்பார். அதேசமயம், பிரணாப் முகர்ஜியால் காங்கிரஸுக்கு பெரிய அளவில் லாபமும் கிடைக்கப் போவதில்லை, அது நிச்சயம் அக்கட்சிக்கு அசவுகரியமான விஷயமும் கூட. காரணம், விதிமுறைகளின்படியே போகக் கூடியவர் பிரணாப் என்பதால்.

நிச்சயம் 2014 லோக்சபா தேர்தல் காங்கிரஸுக்கு மிகப் பெரிய சோதனையாகவே அமையும். சுய சந்தேகத்துடன்தான் அக்கட்சி தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. அக்கட்சிக்கு அதன் மீதே நம்பிக்கை இல்லை என்பதே உண்மை என்றார்.

நிதீஷ் குமார் எடுத்த முடிவு சரியா என்ற கேள்விக்கு, நிதீஷ் குமார், தான் என்ன நினைக்கிறாரோ அதை அடைவதில் தெளிவாக இருக்கிறார். பிரதமர் வேட்பாளர் குறித்து பாஜக தொடர்ந்து அமைதி காப்பதை அவர் விரும்பவில்லை. குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் வருகிறது. அது முடிந்த பிறகு பாஜகவில் மோடி கை ஓங்கும் என்பதை நிதீஷ் குமார் அறிவார்.

மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்காவிட்டாலும் கூட, பீகாரில் மோடியால், ஐக்கிய ஜனதாதளத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் நிதீஷ் குமார் அறிவார். காரணம், வாக்காளர்களில் கணிசமான பேர் மோடிக்கு எதிராகவே உள்ளனர் இதனால்தான் அவர் இந்த முறை பிடிவாதமாக இருந்துள்ளார் என்றார் ஐயர்.

முலாயம் சிங் யாதவ் குறித்த கேள்விக்கு, அவர் ஒரு புத்திசாலியான அரசியல்வாதி. தனக்கு என்ன தேவையோ அதை கடுமையாக போராடி கேட்டுப் பெறத் தயங்க மாட்டார். இப்போது கூட தனது மாநிலத்திற்கு ரூ. 90,000 கோடி நிதியுதவி தேவை என்ற பெரிய பட்டியலை அவரது மகனும், உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ் தயாரித்து டெல்லிக்கு அனுப்பவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

பிரணாப்பை முதலில் சோனியா விரும்பவில்லை...!

பிரணாப் முகர்ஜியை முதலிலேயே சோனியா காந்தி தேர்வு செய்தாரா அல்லது கட்டாயத்தின் பேரில் தேர்வு செய்தாரா என்ற கேள்விக்கு ஐயர் பதிலளிக்கையில், சோனியாவின் முதல் சாய்ஸ் நிச்சயம் பிரணாப் இல்லை. அவர் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாத, புத்திசாலியான ஒருவரே குடியரசுத்தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் பிரணாப் முகர்ஜி அரசியல் ரீதியாக அபிலாஷைகளுடன் இருந்து வந்த ஒருவர். எனவே அவரை முதலில் சோனியா காந்தி பரிசீலிக்கவே இல்லை.

ஆனால் சூழ்நிலைகள் சோனியாவை பிரணாப் பக்கம் இழுத்துக் கொண்டு வந்து விட்டன. பிரணாப்புக்கு எதிராக மமதா பானர்ஜி பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியது, சரத்பவார், கருணாநிதி போன்றோர் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்தது ஆகியவை இதற்கு முக்கியக் காரணம். பிரணாப்புக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியதால் வேறு வழியில்லாமல் அவரைத் தேர்வு செய்யும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார் என்றார்.

மமதா முன்பு 2 வழிகளே...

மமதா பானர்ஜி என்ன செய்வார் என்ற கேள்விக்கு, மமதா பானர்ஜி முன்பு இப்போது இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று தேர்தலில் நடுநிலை வகிப்பதாக கூறி ஒதுங்கிக் கொள்வது. 2வது, சற்று அமைதி காத்து விட்டு கடைசியில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவிப்பது.

பிரணாப் முகர்ஜிக்கு எதிராக வாக்களிப்போம் என மமதா கூறினால், நிச்சயம் அவரது கட்சிக்குள்ளேயே பலரும் ஆதரிக்க மாட்டார்கள். மாறாக, மாற்றி ஓட்டுப் போட்டு விடுவார்கள். இது மமதாவுக்கும் தெரியும். அது அவரது முகத்தில் கரியடித்தது போலாகி விடும். மேலும் திரினமூல் காங்கிரஸ் கட்சியே பிளவுபடும் நிலையும் ஏற்படும். மமதாவின் இரும்புப் பிடியும் தளர்ந்து விடும். அந்த நிலையை அவர் விரும்புவாரா என்பது தெரியவில்லை.

2004ல் கலாம்-சோனியா இடையே என்னதான் நடந்தது...?

இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் யாரிடமும் இல்லை. அவர்களுக்கிடையே என்ன நடந்தது என்பதை கலாமோ அல்லது சோனியாவோதான் விளக்கியாக வேண்டும்.

இருப்பினும் குடியரசுத் தலைவர் மாளிகையில், அப்துல் கலாமை சந்தித்து விட்டுத் திரும்பிய சோனியா காந்தி, ஆழ்ந்த சிந்தனையுடன் திரும்பினார். தனது குடும்ப உறுப்பினர்களை அவர் சந்தித்து நீண்ட ஆலோசனைகளை நடத்தினார். அதன் பின்னரே தன்னால் பிரதமர் பதவியை ஏற்க முடியாது என்று அவர் அறிவித்தார்.

இந்தியாவிலும், இத்தாலியிலும் கடைப்பிடிக்கப்படும் குடியுரிமை விதிமுறைகள் குறித்து ஏதாவது பேசினாரா என்பது தெரியவில்லை. அல்லது இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஒருவருக்கு இத்தாலியில் மேயர் பதவி மறுக்கப்பட்டது குறித்த சம்பவத்தை சோனியாவிடம் அவர் தெரிவித்தாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து கலாம்தான் மெளனம் கலைக்க வேண்டும்.

மோடியால் பிரதமராக முடியுமா...?

பாஜகவுக்கு 200 எம்.பிக்களுக்கு மேல் சொந்தமாகவே கிடைத்தால் தாராளமாக மோடியால் பிரதமராக முடியும். அதைப் பெறும் முயற்சியில்தான் தற்போது மோடியும் தீவிரமாக இருக்கிறார்.

ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போதைய அரசியல் சூழ்நிலையில் சாத்தியமா என்பதுதான் கேள்விக்குறியாகும். இந்திய முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில், குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக இன்னும் புண்பட்ட மனதுடன்தான் இருக்கின்றனர். அந்த புண்ணை ஆற்றும் பணிகளை இன்னும் மோடி செய்யவில்லை. அதைச் செய்தால் மட்டுமே அவரால் தேசிய அரசியல் பங்களிப்பு குறித்து யோசிக்க முடியும்.

அவருக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க வேண்டும் மோடி. வளர்ச்சியை சாதித்துள்ளேன் என்று ரோபோட் போல கூறுவதை விட்டு விட்டு சாதாரண மனிதராக முதலில் அவர் மாற வேண்டும்.

English summary
Shekhar Iyer, a familiar face on television's news analysis programmes and senior associate editor at the Hindustan Times has said that, Sonia Gandhi did not want Pranab Mukherjee as her first choice for the Presidentship. Instead she would have preferred Pratibha again. Not once, did Pratibha pose any constitutional problem for Sonia or Prime Minister Manmohan Singh, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X