For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதால் தமிழீழ விடுதலையை தடுத்திட முடியாது: சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழீழ மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்திய அரசு நீட்டிப்பதால் மட்டும் தமிழீழ விடுதலையை தடுக்க முடியாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கை இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போருக்கு எல்லா வகையிலும் உதவி செய்த மத்திய அரசு, தமிழீழ மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடிவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்துவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் இந்திய குடிமக்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகவும், எனவே புலிகள் இயக்கத்தை சடடத்திற்குப் புறம்பான இயக்கமாக அறிவிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் இந்த வாதம் எந்த சான்றும் அற்ற, திட்டமிட்ட திசை திருப்பல் ஆகும். இலங்கையில் தமிழருக்கு எதிரான போரை நடத்த ராஜபக்சேவுக்கு முழுமையாக உதவி, ஒன்றே முக்கால் லட்சம் தமிழர்களை அழித்தொழிக்க மத்திய காங்கிரஸ் அரசு உதவியது என்பதை உலகே அறியும். ஆனால் அந்த அளவிற்கு உதவியும், ராஜபக்சே அரசு இந்தியாவோடு நிற்காமல், முழுமையாக சீனாவின் நட்பு நாடாக மாறிவிட்டது. அம்மன் தோட்டா துறைமுகத்தில் இருந்து, இலங்கையில் பல திட்டங்களை செயல்படுத்துவது மூலம் அந்நாட்டிற்குள் சீனா வலிமையாக கால்பதித்துவிட்டது.

தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவில் சீனா தனது கடற்படை தளத்தை அமைக்க முயற்சித்து வருவது தமிழ்நாட்டின் மீனவர்களுக்குக் கூட தெரிந்த ரகசியமாகும். இலங்கை பிரச்சனையில் தமிழினத்திற்கு எதிராக இந்திய மத்திய காங்கிரஸ் அரசு கடைபிடித்த அயலுறவுக் கொள்கை, அதன் எதிரி நாடான சீனா இலங்கையில் வலிமையாக கால் பதிக்க உதவிவிட்டது. இப்போது சீனத்தின் அச்சுறுத்தல் வளையத்திற்குள் இந்தியாவின் தென்பகுதி சிக்கியுள்ளது என்பதே ராணுவ ரீதியான உண்மையாகும்.

எனவே விடுதலைப்புலிகளால் இந்தியாவின் குடிமக்களுக்கு அச்சுறுத்தல் என்று உள்துறை அமைச்சகம் கூறுவது சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை மறைக்கும் மோசடியாகும்.

தமிழீழ விடுதலை என்பது அரை நூற்றாண்டுக் காலமாக நடந்துவரும் அரசியல் விடுதலைப் போராட்டம். தங்களுடைய இனத்தை திட்டமிட்டு அழித்துவரும் சிங்கள இனவாத அரசின் பிடியில் இருந்து விடுபட்டு தனிநாடு காண்பது மட்டுமே, ஈழத் தமிழினத்தை அழிவின் பிடியில் இருந்து காத்துக்கொள்வதற்கான ஒரே வழி என்பதில் உறுதியுடன் இருந்து எம் சொந்தங்கள் நடத்திவரும் போராட்டமாகும்.

அதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பிறந்தது. எனவே, அந்த இலக்கை புலிகள் இயக்கம் மட்டுமல்ல, தமிழினம் ஒருபோதும் விட்டுத்தராது. அதனால்தான் தமிழர்களின் பெரும் தாயகமான தமிழ் நாட்டில் தமிழீழ விடுதலைக்கு பெரும் ஆதரவு நிலவுகிறது.

அதன் எதிரொலியே தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு விழுந்த மரண அடி என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். தங்களது இயக்கம் இந்தியாவின் ஒற்றுமைக்கோ, அதன் இறையாண்மைக்கோ அல்லது அதன் பூகோள நலன்களுக்கோ ஒருபோது எதிரானதல்ல என்பதை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன், சுதுமலை பொதுக் கூட்டத்தில் இருந்து தான் ஆற்றிய பல மாவீரர் தின உரைகளில் உறுதிப்படுத்தியுள்ளார்.

போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், அவர்களுக்கு ஒரு நேர்மையாக அரசியல் தீர்வை பெற்றுத் தர யோக்கியதை அற்ற இந்திய அரசு, இலங்கை அரசுடன் இணைந்து தான் நடத்திய தமிழினப் படுகொலையை மறைக்க, ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய ஒரு தியாக இயக்கத்தை சட்டத்திற்கு எதிரான இயக்கம் என்று கூறி தடை செய்வது, தனது குற்ற முகத்தை மூடிக்கொள்ளும் முயற்சியாகும். அதனால் தமிழீழ விடுதலையை தடுத்து நிறுத்திட முடியாது.

இந்தியாவின் பூகோள நலனும், பாதுகாப்பும் உறுதியாக வேண்டுமெனில் இலங்கையில் தமிழர்கென்று ஒரு நாடு பிறந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதையும், தெற்காசியப் பகுதியில் மாபெரும் ராஜதந்திர தோல்வியை சந்தித்துள்ள மத்திய அரசு, தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் காலக்கட்டாயம் ஏற்படும் என்பதையும் நாம் தமிழர் கட்சி அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Naam tamilar party chief Seeman slammed centre for extending ban on LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X