For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரவு வேளையில் இருட்டில் தவிக்கின்ற ஒரே அணை முல்லைப் பெரியாறு தான்: வைகோ

By Chakra
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: மின்சாரம் இல்லாமல், பொறியாளர்களும், பணியாளர்களும் இரவு வேளையில் இருட்டில் அச்சத்தில் தவிக்கின்ற ஒரே அணை, இந்தியாவில் முல்லைப் பெரியாறு அணை மட்டும்தான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மேலும் அணையின் மராமத்துப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள ஒரு மூவர் குழு அமைக்கப்படும் என்றும், அதில் கேரள அரசின் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளரும் இடம் பெறுவார் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது, தென்தமிழ் நாட்டு மக்கள் தலையில் போட்ட கல்லாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு வண்டிப் பெரியார் வல்லக்கடவில் இருந்து செக் போஸ்டு வரை உள்ள சாலையை தமிழக அரசு தன்னுடைய செலவில் செப்பனிட்டுச் செய்து தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இந்தப் பகுதி முழுக்க கேரளத்தினரே வசிக்கின்றனர் என்றும் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கமான அறிக்கையில், தென்தமிழ் நாட்டின் முக்கிய வாழ்வாதரமான முல்லைப் பெரியாறு பிரச்சனையில், நேற்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கேரளத்தின் கேடான போக்கினை மேலும் ஊக்குவிக்கும் வகையிலேயே, தமிழ்நாட்டுக்குப் பாதகமாக அமைந்து உள்ளது.

2 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கும், 90 லட்சம் மக்களின் குடிநீருக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில், கேரள அரசு இதுவரை கடைப்பிடித்து வந்துள்ள அநீதியான நடவடிக்கைகளை மேலும் அதிகமாகச் செய்வதற்கே இத்தீர்ப்பு வழி வகுக்கிறது.

பென்னி குயிக் கட்டிய, தமிழகத்துக்கு உரிமையான முல்லைப் பெரியாறு அணையை எப்படியும் உடைத்து விடுவது என்று கேரள அரசும், அங்குள்ள பிரதான கட்சிகளும் அறிவித்து, அதற்காகவே 50 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கி வைத்து உள்ளதோடு, அணையை உடைக்கும் அக்கிரமச் செயலுக்கு கேரள மக்களின் மனநிலையையும், அதற்கு ஆதரவாக ஏற்படுத்த தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பிரச்சனையில், உச்ச நீதிமன்றம் 2006ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தந்த தீர்ப்பு, தமிழ்நாட்டின் சட்டபூர்வ உரிமையை நிலைநாட்டியது. நீர்மட்டத்தை 142 அடிக்கு தமிழகம் உயர்த்திக் கொள்ளலாம் என்றும், முல்லைப் பெரியாறிலும், பேபி அணையிலும் பராமரிப்பு, மராமத்துப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வேலைகள் அனைத்தையும் தமிழக அரசு செய்வதற்கு, கேரள அரசாங்கமோ, அதிகாரிகளோ எந்த முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்று திட்டவட்டமாக தீர்ப்பில் கூறியது.

ஆனால், அந்தத் தீர்ப்பை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கும் கேரள அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும், இதில் இந்தியாவின் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்றும் 2006 மார்ச் 18ல் கேரள அரசு மிக அநீதியானதும், இந்திய இறையாண்மைக்கு எதிரானதுமான சட்டத்தை நிறைவேற்றியது.

அதனை எதிர்த்து அண்ணா திமுக அரசு தொடர்ந்த வழக்குதான் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆனால் கடந்த 6 ஆண்டு காலத்தில், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தண்ணீர் வரும் வாய்க்கால் பகுதியில் தமிழக அரசு எந்தவிதமான மராமத்துப் பணிகளையும் செய்யவிடாமல் கேரள வனத்துறையினரும், கேரள போலீசாரும் தடுத்துக்கொண்டே வருகின்றனர்.

திறந்த வாய்க்காலில் சேறு, செடிகொடி, ஆகாயத் தாமரை இவற்றை அகற்ற தமிழக அதிகாரிகள் முயன்றபோது, கேரள வனத்துறையினரும், போலீசும் தடுத்து விட்டனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக, முல்லைப் பெரியாறுக்கு மின்சாரத்தை முற்றிலும் கேரளம் தடுத்துவிட்டது. பூமிக்கு அடியில் கேபிள் பதித்து, மின்சாரத்தை அணைப் பகுதிக்குக் கொண்டுவர தமிழக அரசு 97 லட்ச ரூபாயை கேரள அரசிடம் செலுத்தியும்கூட எந்த வேலையும் செய்ய கேரளம் அனுமதிக்கவில்லை.

ஜெனரேட்டர்களையும் மாலை 6 மணிக்கு மேல் அனுமதிப்பது இல்லை. மின்சாரம் இல்லாமல், பொறியாளர்களும், பணியாளர்களும் இரவு வேளையில் இருட்டில் அச்சத்தில் தவிக்கின்ற ஒரே அணை, இந்தியாவில் முல்லைப் பெரியாறு அணை மட்டும்தான்.

உச்ச நீதிமன்றத்தில் அறிவித்த ஐவர் குழு ஆய்வின்போது, பென்னி குக் அணையில் செங்குத்தாகப் போடப்பட்ட ஆழமான துளைகளை அடைப்பதற்குக் கூட அனுமதிக்காமல், கேரளம் அடாவடி செய்ததையும் தமிழக அரசும், விவசாயிகளும் கொதித்து எழுந்த பின்னரே கடைசியாக கேரளம் பின்வாங்கியதையும் அனைவரும் அறிவார்கள்.

கேரள அரசு தொடர்ந்து தமிழகத்தின் பராமரிப்புப் பணிகளை தடுத்த விபரங்கள் அனைத்தையும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கமாக தெரிவித்த பின்னரும்கூட, உச்ச நீதிமன்றம் நேற்றைய அறிவிப்பில் தமிழகத்துக்குக் கேரளம் செய்யும் கேட்டை ஊக்குவித்துவிட்டது.

பென்னி குக் அணையின் மராமத்துப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள ஒரு மூவர் குழு அமைக்கப்படும் என்றும், அதில் கேரள அரசின் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளரும், மத்திய நீர்வள ஆணைத்தின் பிரதிநிதியும் இடம் பெறுவர் என்றும், அக்குழுவின் ஆலோசனையின்படி பராமரிப்பு வேலையை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது, தென்தமிழ் நாட்டு மக்கள் தலையில் போட்ட கல்லாகும்.

நமது அணையை உடைக்கவும், தமிழகத்துக்குத் தண்ணீரே கொடுக்க முடியாத ஒரு புதிய அணையைக் கட்டவும், உச்ச நீதிமன்றத்தின் 2006ம் ஆண்டு தீர்ப்பையே காலால் மிதித்துவிட்டு, அராஜகச் செயல் புரியவும் முற்பட்டுவிட்ட கேரள அரசு, எவ்விதத்திலும் தமிழக அரசின் நியாயமான எந்தப் பணியையும் செய்வதற்கு ஒத்துழைக்கப் போவது இல்லை. மாறாக, இடையூறும் தடங்கலும்தான் செய்யும். இது கல்லில் நாற் உரித்துக் கொள்ளுங்கள் என்று தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்றம் சொல்லும் உபதேசம் ஆகும்.

வண்டிப் பெரியார் வல்லக்கடவில் இருந்து செக் போஸ்டு வரை உள்ள சாலையை தமிழக அரசு தன்னுடைய செலவில் செப்பனிட்டுச் செய்து தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. இந்தப் பகுதி முழுக்க கேரளத்தினரே வசிக்கின்றனர். குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்த கதையாக, இப்பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த முன் வரும் கேரள அரசோடு, தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் உச் சநீதிமன்றம் தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

2009 நவம்பர் 10ல் உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பை தமிழக அரசே செய்து கொள்ளலாம் என்று தந்த தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய அறிவிப்பு உள்ளது. கேரள அரசின் நயவஞ்சக நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை போனது மட்டும் அல்லாமல், கேரளத்தின் சதித் திட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்பையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏற்படுத்தி விடுமோ என்ற பெரும் கவலை மூள்கிறது.

தமிழக மக்கள் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்ச முனையும் கேரள அரசின் அக்கிரமப் போக்கைத் தடுக்க தமிழக அரசு நேற்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கு மறு ஆய்வு மனுவினை தாக்கல் செய்வது உசிதமானது ஆகும்.

எக்காரணத்தை முன்னிட்டும் கேரள அரசோடு இனி தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாது என்ற தற்போதைய சரியான நிலைப்பாட்டை தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகளும், அனைத்து தரப்பினரும் பலமாக ஆதரிக்க வேண்டும். தமிழகம் ஒன்று சேர்ந்து முல்லைப் பெரியாறு உரிமை காக்க அனைத்து வழிகளிலும் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

English summary
Tamil Nadu should never go for talks with Kerala over Mullai Periyar issue, said MDMK leader Vaiko in a statement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X