For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியார் திராவிடர் கழகத்தில் பிளவு- கொளத்தூர் மணி தலைமையில் தனி அமைப்பு உருவாக்க முடிவு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழர் நலன் காக்கும் போராட்டங்களை முன்னெடுத்து வந்த பெரியார் திராவிடர் கழகம் தற்போது பிளவை சந்தித்துள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி மற்றும் பொதுச்செயலர் விடுதலை ராசேந்திரன் ஆகியோர் தலைமையில் தனியாக ஒரு அமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்றொரு பொதுச்செயலாளரான கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் தனியே ஒரு அமைப்பு உருவாக உள்ளது.

இது தொடர்பாக கொளத்தூர் மணி, விடுதலை ராசேந்திரன் ஆகியோர் பெரியார் தி.க. தொண்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

செயற்குழு முடிவு

பெரியார் திராவிடர் கழகத்துக்குள் தோழர் இராமக்கிருட்டிணன் அணியினருக்கும், நமக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாகவே நிலவிவரும் கருத்துவேறுபாடுகள் பற்றி 07.07.2012 அன்று சென்னையில் நடந்து முடிந்த தலைமைச்செயற்குழுவில் விரிவாகவே விவாதித்தோம். பெரியார் கொள்கைகளை முன்னெடுப்பதில் கழகத்தில் நாம் சந்திக்க வேண்டியிருந்த முட்டுக்கட்டைகள் - எதிர்ப்புகள் குறித்து விளக்கினோம். ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்படாமல் முடங்குவதைவிட, பிரிந்துநின்று செயல்படுவது என்பதையும் கூறினோம். இதைத் தொடர்ந்து செயற்குழுவில் கருத்தைத் தெரிவித்த உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் ( 82 க்கு 56 பேர் ) பிரிந்து செயல்படுவதே நல்லது என்று கூறிய நிலையிலும்கூட, நாம் ஒற்றுமை வாய்ப்புக்கான கதவுகளை மூடிவிட விரும்பாமல் மீண்டும் திறந்த மனத்துடனேயே ஒற்றுமைக்கான முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனாலும் இந்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே தோழர் இராமக்கிருட்டிணனும் அவரது ஆதரவாளர்களும் தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டுவதிலும், ஒன்றுபடுதல் நிகழ்ந்து விடவேகூடாது என்று தடுத்து நிறுத்துமளவுக்கு தனிநபர்களை இழிவுபடுத்தும் அறிக்கைகளைத் தோழர்களிடம் பரப்புவதிலும் ஈடுபட்டனர்.

புதிய பெயரில் தனி அமைப்பு

இணைந்து செயல்பட முடியாமல் பிரிந்துபோகும் நிலையிலும், ஏனைய கட்சிகளில் - அமைப்புகளில் நடப்பதைப் போல் "இவர் அவரை நீக்கினார், அவர் இவரை நீக்கினார்" என்பது போன்ற இழிநிலைகள் பெரியார் இயக்கத்தில் நாம் வழிநடத்திய காலத்தில் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற உண்மையான கவலையோடு அவற்றை எல்லாம் தவிர்த்துவிடவே விரும்பினோம்.

எனவே, பெரும்பான்மை ஆதரவு நமக்கு இருந்தும், கழகத்தின் பெயரை நாம் தொடர்ந்து பயன்படுத்த வாய்ப்பு இருந்தும், நாகரீகமாகப் பிரிந்துவிடலாம் என்று கருதியதால் - பெரியார் திராவிடர் கழகத்தின் பெயரை, எவர் ஒருவரும் பயன்படுத்த வேண்டாம் என்ற கருத்தை தலைமை நிர்வாகக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களான நாம் முன்வைத்துள்ளோம். பெரியார் இயக்கத்தின் மதிப்பு - மாண்பைக் காக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களும் இதனை ஏற்றுச்செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்; செயல்படவேண்டும்.அதேவேளையில், நாமும் அமைப்புக்கு புதிய பெயர் வைத்துக்கொண்டு, கொள்கைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தலாம் என்று கருதினோம். தோழர்களிடம் இதைக் கூறினோம். நமது தோழர்களும் இத்தகைய பண்பான அணுகுமுறைதான் நமக்குச் சரியானது என்று ஆதரவு தெரிவித்தனர்.

ஈரோட்டில் ஆலோசனைக் கூட்டம்

இந்த நிலையில், இதுகுறித்து நாம் இறுதி முடிவெடுக்கவும், மேலும் நமது தோழர்களுடன் கலந்து பேசவும் எதிர்வரும் 12.08.2012 ஞாயிறன்று ஈரோட்டில் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த ஏற்பாட்டை ஏற்கக்கூடிய நமது தோழர்கள் அனைவரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களைக்கூற உரிமையுடன் அழைக்கிறோம்.

பெரியார் வலியுறுத்திய ஜாதி ஒழிப்புக் கொள்கையை, பார்ப்பன - ஜாதி ஆதிக்க சக்திகள் சவால்விட்டு எதிர்க்கின்றன. பெரியார் கொள்கைகளுக்கு எதிரிகள் - திரிபுவாதிகள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியான சூழலில் நாம் பெரியார் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட்டு விட்டு கோஷ்டி பூசல்களில் - தனி மனித விமர்சனங்களில் ஆட்படுவது பெரியார் கொள்கைக்கு இழைக்கும் துரோகம் ஆகிவிடும். அது நிகழக்கூடாது என்பதே நமது கவலை. தன்னை முன்னிலைப்படுத்தாது - சுயவிளம்பரங்களைப் புறந்தள்ளி - கொள்கையை மட்டுமே முன்னிறுத்தி - தன்னல மறுப்புடன் கொள்கைப் பணியாற்ற முன்வந்துள்ள நம்மால் பெரியாரியலுக்கு மேலும் வலுசேர்க்கமுடியும் என்று உறுதியாக நம்புகிறோம். ஈரோடு வாருங்கள்! சந்திப்போம்! திட்டமிடுவோம்! செயல்படுவோம்! என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamil Nationalist Movement Periyar Dravida Kazhagam is faces Split. PDK leader Kolathur Mani and Kovai Ramakrishnan to float sperate movements in different names.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X