For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.50 கோடி நிலத்தை வீரபாண்டி மிரட்டி பறித்துக் கொண்டார்: தொழில் அதிபர் புகார்

By Siva
Google Oneindia Tamil News

Veerapandi Arumugam
சேலம்: தனது ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பறித்துக் கொண்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லுபாளையத்தைச் சேர்ந்தவர் மு.ரங்கசாமி (55). தொழில் அதிபர். அவர் சேலம் மாவட்ட கலெக்டர் க.மகரபூஷணத்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

2000ம் ஆண்டில் சேலம் உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த கே.பழனியப்பன், வி.கே.ஜெகநாதன், ஜே.பூங்கோதை, தனபாக்கியம் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் நிலத்துக்கு விலை பேசி சுமார் ரூ.35 லட்சம் கொடுத்திருந்தேன்.

கிரய ஒப்பந்தம் செய்த நிலையில் நிலத்தை அளவீடு செய்து கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். இந்த நிலையில் 6.10.2000 அன்று வீரபாண்டி ஆறுமுகம், பூலாவரியில் உள்ள அவரது வீட்டுக்கு என்னை வரவழைத்து திட்டியதுடன், ஒரு வாரத்துக்குள் கிரய ஒப்பந்தத்தை நான் சொல்லும்படி மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்.

அதன்பிறகு அப்போது காவல் உதவி ஆய்வாளராக இருந்த லட்சுமணன் தொலைபேசியில் என்னை மிரட்டினார். 10 நாள்கள் கழித்து காவல் ஆய்வாளர் கருணாநிதி எனது வீட்டுக்கு வந்து என்னை அடித்து ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து பொய் வழக்குப் பதிவு செய்து என்னை சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் வெளியே வந்ததும் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பயந்து சென்னை சென்று குடியேறிவிட்டேன். இதையடுத்து 2006ல் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் அமைச்சரானதும் 21.6.2006 அன்று மாநகரக் காவல் ஆணையர் கோபாலகிருஷ்ணன் என்னை நேரில் சந்திக்கும்படி கூறினார். அதன்படி ஆணையர் அலுவலகம் சென்றபோது அங்கு துணை ஆணையர் சக்திவேல், தொழிலதிபர்கள் செங்கோட கவுண்டர், கே.பி.நடராஜன், ஆறுமுகத்தின் உதவியாளர் சேகர் ஆகியோர் இருந்தனர். அப்போது கோபாலகிருஷ்ணனும், சக்திவேலுவும் என்னை சரமாரியாகத் தாக்கினர். இதற்கு பயந்து அவர்கள் கூறியபடி வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திட்டேன். அதன் பிறகு துணை ஆணையர் சக்திவேல், எனது மகனுடன் சென்று எங்களது வழக்குரைஞர் அலுவலகத்தில் இருந்த கிரய ஒப்பந்தப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டார்.

என்னிடம் பறித்த ரூ.50 கோடி மதிப்புள்ள 7 ஏக்கர் நிலத்தை சேலம் சாப்ட்வேர் டெக்னோ பார்க் என்ற போலி டிரஸ்ட் பெயரில் பதிவு செய்து கொண்டு, பிறகு வீரபாண்டி ஆறுமுகத்தின் வி.எஸ்.ஏ. டிரஸ்டுக்கு மாற்றிக் கொண்டனர். இந்த நிலையில் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜூலை மாதத்தில் அப்போதைய சேலம் எஸ்.பி. அறிவுச்செல்வனிடம் இது குறித்து புகார் கொடுத்தேன்.

அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டி எனது நிலத்தைப் பறித்த வீரபாண்டி ஆறுமுகம், காவல் துறை முன்னாள் ஆணையர் கோபாலகிருஷ்ணன், துணை ஆணையர் சக்திவேல், ஆய்வாளர்கள் கருணாநிதி, லட்சுமணன் மற்றும் செல்வராஜ், செங்கோட கவுண்டர், கே.பி.நடராஜன், ஆறுமுகத்தின் உதவியாளர் சேகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Rangasamy, Namakkal based businessman gave a complaint to Salem collector accusing former DMK minister Veerapandi Arumugam of grabbing his Rs.50 crore worth land.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X