• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜெயலலிதா மாதக்கணக்கில் கொடநாட்டில் ஓய்வு எடுப்பது ஏன்: விஜயகாந்த்

By Chakra
|

Vijayakanth
விருதுநகர்: லஞ்சம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நோ என்ட்ரி அறிவிப்பு பலகை வைத்துள்ள இடத்தில் போலீசார் நிற்காமல் அதை தாண்டி நின்று கொண்டு வாகனங்கள் உள்ளே நுழைந்த உடன் காசு கேட்கும் அவல நிலை தொடர்கிறது என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

விருதுநகரில் தேமுதிக சார்பில் மாணவ, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி விஜயகாந்த் பேசுகையில், நான் விருதுநகர் அருகே உள்ள கெப்பிலிங்கம்பட்டியில் பிறந்தவன். அங்கிருந்து மாட்டு வண்டியில் விருதுநகர் வந்து மாரியம்மன் கோவில் திருவிழாவைனை பார்த்துவிட்டுச் செல்வோம். அப்போது விருதுநகர் விருதுபட்டியாக இருந்தது. விருதுநகரில் உள்ள தியேட்டர்களில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து விட்டு மாட்டு வண்டிக்கு அடியில் படுத்துத் தூங்கியவன் நான்.

இந்த ஊர் புரோட்டோவுக்கும், சிக்கனுக்கும் பெயர் பெற்ற ஊர். இந்த மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஆனால் தற்போது முதல்வர் கொடநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். 2, 3 நாட்கள் ஓய்வு எடுப்பது என்பது தேவைதான். ஆனால் மாதக்கணக்கில் ஓய்வு எடுப்பது ஏன் என்று தெரியவில்லை. அங்கிருந்து தினசரி அறிக்கைகள் வெளிவருகிறது. இவை எல்லாம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை தான். அவை புதிய அறிவிப்புக்கள் போல வெளிவருகிறது.

ஆனால், அந்த அறிவிப்புகளும் கூட வெறும் அறிவிப்புக்களாகவே இருக்கின்றன. செயல்படுத்தப்படுவதில்லை. ஜெயலலிதா பொறுப்பேற்ற உடன் 3 மாதங்களில் மின் வெட்டு சரிசெய்யப்படும் என்று கூறினார். மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஜூலை மாதத்திற்குள் மின் வெட்டு முற்றிலுமாக நீங்கி விடும் என்றார். ஆனால் தற்போது மின்வெட்டு மீண்டும் 5 மணி நேரமாக்கப்பட்டுள்ளது.

சங்கரன் கோவில் இடைத்தேர்தலின் போது உடன்குடி மின் திட்டத்தை தனது நேரடி கண்காணிப்பிலேயே செயல்படுத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அதிகாரிகள் சென்று பார்த்தார்களே தவிர, இதுவரை பணிகள் ஏதும் தொடங்கவில்லை.

லஞ்சம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நோ என்ட்ரி அறிவிப்பு பலகை வைத்துள்ள இடத்தில் போலீசார் நிற்காமல் அதை தாண்டி நின்று கொண்டு வாகனங்கள் உள்ளே நுழைந்த உடன் காசு கேட்கும் அவல நிலை தொடர்கிறது.

போலீசாரே... சம்பள உயர்வு கேளுங்கள், அதற்காக போராடுங்கள், ஆனால் மக்களிடம் ஏன் இப்படி லஞ்சம் கேட்கிறீர்கள். முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் கொடநாடு சென்றுவிட்டால் கொலை, கொள்ளை குற்றங்களை கண்டுபிடிப்பது யார்?

இதே விருதுநகர் தேசபந்து மைதானத்தில் அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் யாரையாவது பிடித்தார்களா?.

மக்கள் நலனுக்காக ஜெயலலிதா திட்டங்களை நிறைவேற்றினால் அவருக்கு சல்யூட் அடிப்பேன். தேமுதிக தொண்டர்களையும் சல்யூட் அடிக்கச் சொல்வேன். மக்கள் நலனுக்காக யார் பாடுபட்டாலும் அவர்கள் காலுக்கு செருப்பாக இருப்பேன்.

இந்த விஜயகாந்த் எதற்கும் பயப்படமாட்டான். என்னை பிடித்து சிறையில் அடைத்தாலும் அதைப் பற்றி கவலைப்படுபவன் அல்ல. வெங்காயத்தையும், பழைய சோற்றையும் தின்று பழகியவன். கொசுக் கடிக்கெல்லாம் பயப்பட மாட்டேன். அங்கேயே படுத்துவிட தயாராக இருக்கிறேன். எனக்கு மக்கள் நலனே முக்கியம்.

காங்கிரசார் காமராஜர் ஆட்சியை கொண்டு வரப் போவதாக பேசுகிறார்கள். காமராஜர் உயிரோடு இருக்கும்போது காமராஜர் ஆட்சியை கொண்டு வராதவர்கள் இப்போது காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று கூறுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

விலைவாசி உயர்ந்து வருகிறது. தாய்மார்களுக்குத்தான் இது பற்றி நன்கு தெரியும். காலையிலேயே ரேஷன் கடைக்குச் சென்று வரிசையில் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால் விலைவாசி உயர்வைப் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்றார் விஜய்காந்த்.

English summary
I'm ready to go to jail for peoples welfare, said DMDK chief Vijayakanth in Virudunagar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X