For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவர்கள் மீது இனியும் தாக்குதல் நடத்தினால் இலங்கை தூதரகம் இருக்காது: வேல்முருகன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இனியும் தாக்குதல் நடத்தினால் தமிழ்நாட்டில் இலங்கைத் தூதரகம் அப்புறப்படுத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பதை நாள்தோறும் மேற்கொள்ளும் ரோந்து நடவடிக்கையைப் போல் செய்து வருகிறது சிங்களக் கடற்படை. இந்த ஒரு வாரத்தில் 3 முறை தமிழக மீனவர்களைத் தாக்கி அரிவாளால் வெட்டி விரட்டியடித்துள்ளனர் சிங்களக் காடையர்கள்.

பறிபோன உரிமை

தமிழக மீனவர்கள் தங்களது பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த கடற்பரப்பில்தான் தற்போதும் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் 1974-ம் ஆண்டு ஜூன் 28-ந்தேதியன்று கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த நாள் முதல் கடந்த 30 ஆண்டுகாலமாக 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுப் படுகொலை செய்திருக்கிறது.

கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை பற்றிய கேள்வி எழுந்தபோது நாடாளுமன்றத்தில் பதிலளித்த அந்நாளைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரன்சிங், தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை கச்சத்தீவு ஒப்பந்தம் மூலம் விட்டுக் கொடுத்துவிடவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் 1976-ம் ஆண்டு இந்திய வெளியுறவு செயலராக இருந்த கேவல்சிங்குக்கும் இலங்கை வெளியுறவுச் செயலாளர் வி.டி.ஜெயசிங்கேவுக்கும் இடையே கடிதப் பரிமாற்றங்களில் இந்த உரிமை பறிகொடுக்கப்பட்டுவிட்டது.

600க்கும் மேற்பட்டோர் படுகொலை

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததால் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் வாழ்வாதாரம் தேடிப் போகும் மீனவர்கள் உயிரோடு மீண்டும் கரைக்குத் திரும்புவோமா என்ற உத்தரவாதமின்றி நடுக்கடலில் தவியாய் தவிக்கின்றனர்.

காக்கை குருவிகளை சுடுவது போல தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்து வருகிறது சிங்கள அரசு. தட்டிக் கேட்க வேண்டிய, கண்டிக்க வேண்டிய மத்திய அரசோ வாய்மூடிவு மவுனியாகவே இத்தனை ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் கூப்பாடு போட்டு கண்டனம் தெரிவித்த போதும்கூட மத்திய அரசு தமிழனின் உயிரை மதிக்கத் தயாராக இல்லை.

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்தால் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பேன் என்று சிங்கள கொலைவெறியன் மகிந்த ராஜபக்ச கொக்கரிக்கும்போது அதைக் கூட கண்டிக்க திராணியற்ற அரசாங்கமாகவே இந்திய மத்திய அரசு இருக்கிறது. மகிந்த ராஜபக்சேவே இப்படி கொலைவெறியோடு பேசும்போது அவனது கட்டளைக்கு கீழ்படியும் சிங்கள காடையர்கள் சும்மா இருப்பார்களா?

இந்தியாவின் பரமவைரியாக கருதப்படுகிற பாகிஸ்தான் நாட்டு மீனவர்கள் இந்திய கடற்பரப்புக்குள் நுழைந்தாலும் இந்திய மீனவர்கள் தவறுதலாக பாகிஸ்தான் கடற்பரப்புக்குள் நுழைந்தாலும்கூட சுட்டுக் கொல்லப்படுவதில்லை. ஏன் சிங்கள மீனவர்கள் எத்தனையோ முறை இந்திய கடற்பரப்பில் நுழைந்தபோதும் சுட்டுக் கொல்லப்பட்டது கிடையாது. அவர்கள் எல்லாம் உரிய நீதிமன்ற விசாரணைகளுக்குப் பிறகு விடுவிக்கப்படுவதுதான் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து சிறை

தற்போதும்கூட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போதைப் பொருட்களை கடத்தியதாக ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை 23 முறை வாய்தா வாங்கி இன்னமும் சிறையில்தான் அடைத்து வைத்திருக்கிறது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக உருப்படியான எந்த ஒருநடவடிக்கையுமே மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக இந்திய அரசு கருதவில்லை என்பதைத்தானே இது வெளிப்படுத்துகிறது!

சீனர்களுக்கு மீன்பிடி அனுமதி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எந்த ஒரு அன்னிய நாடும் இந்தியாவின் அனுமதியின்றி இலங்கைக்குள் நுழைய முடியாத நிலை இருந்தது. அப்போது இந்தியாவின் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம் அரசியல் தலைவர்களிடத்தில் இருந்து வந்தது. ஆனால் ராஜீவ்காந்தி காலத்துக்குப் பிறகு இந்திய வெளிவிவகார அமைச்சகத்தில் தமிழின எதிரிகளாக அமர்ந்திருப்போரே அனைத்து முடிவுகளையும் எடுக்கக் கூடிய நிலையே நீடித்து வருகிறது. இதற்காகவே தமிழக மீனவர்களை சிங்களக் காடையர்கள் சுட்டுப் படுகொலை செய்தாலும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

இப்போது தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழாய்வுப் பணிக்காக சீனாவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது சிங்கள அரசு. இதேபோல் மன்னார் வளைகுடா உட்பட தமிழர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பில் இலங்கைக்கு கடல்வழியிலோ அல்லது நிலவழியிலோ எந்தத் தொடர்புமே இல்லாத சீனர்களுக்கும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அண்மையில்கூட திருகோணமலை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட சீன மீனவர்களை ராஜமரியாதையுடன் நடத்தி விடுதலை செய்திருக்கிறது சிங்கள அரசு.

இலங்கையின் இந்த முடிவால் எதிர்காலத்தில் மன்னார் வளைகுடாவில் முற்று முழுதாகவே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத ஒரு நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது.

தமிழக மீனவர்கள் தங்களுக்கு மீன்பிடி உரிமை உள்ள கட்ற்பரப்பில் மீன்பிடித்தார்கள் என்பதற்காக சுட்டுக் கொல்லும் அநியாயத்தை மத்திய அரசும் கண்டு கொள்ளாத போது தமிழர்கள் எங்குதான்போய் முறையிடுவது? தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு ஒரே தீர்வு கச்சத்தீவை மீட்பதுதான்! இல்லையேல் தமிழக மீனவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆயுதமேந்துவது! இந்த இரண்டில் ஒன்றுமட்டுமே தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலுக்குத் தீர்வாக இருக்க முடியும் என்பதுதான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு.

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்தும் சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்துவது என்பது நீடிக்குமேயானால் தமிழகத்தைவிட்டே இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஈடுபடும் என எச்சரிக்கிறோம்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழ்நாட்டில் இருந்து அடியோடு அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், தமிழக மீனவர் அமைப்புகள், தமிழர் இயக்கங்களை ஒருங்கிணைத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
TVK party leader T. Velmurugan has condemned the Lankan Navy attack on Tamilnadu Fishermen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X