For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி: மத்திய அமைச்சருக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்

By Siva
Google Oneindia Tamil News

Vijayakanth and Ramadoss
சென்னை: இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்போம் என்று மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறியதற்கு பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜு இலங்கை நமது நட்பு நாடு என்றும், அதனால் அவர்கள் ராணுவத்திற்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்றும் சொல்கிறார். தமிழக கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் அன்றாடம் தாக்கப்பட்டு உயிர்ச் சேதத்திற்கும், உடமை சேதத்திற்கும் ஆளாக்கப்படுவது தான் இந்த நட்பின் லட்சணமா? இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் சிங்கள ராணுவத்தினரும், சிங்கள சமூகவிரோதிகளும் குடியமர்த்தப்பட்டு தங்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக திரிவதுதான் இந்த நட்பிற்கு அடையாளமா?

தமிழர்களையும், தமிழ்நாட்டையும் பணயம் வைத்து இலங்கை அரசோடு இந்திய அரசு ஒருதலை நட்புகொள்ள துடிப்பது ஏன் என்பது தான் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியவில்லை. சிங்கள இனவெறி அரசின் இந்த துரோக போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கள ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி தரக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்தவிதமான பயிற்சியும் அளிக்கக் கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் இலங்கைப் படையினருக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறியிருக்கிறார்.

தமிழக மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காத அமைச்சரின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. வெலிங்டனில் பயிற்சி பெற்றுவரும் சிங்கள போர்ப்படை அதிகாரிகள் இருவரையும் உடனடியாக அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும். அதுமட்டுமின்றி, இனி இலங்கைப் படையினருக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கப்படாது என அறிவிப்பதுடன், பயிற்சித் தொடர்பாக இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை::

இலங்கை கடற்படையினரால் அன்றாடம் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு இலக்காகிக் கொண்டிருக்கும் சூழலில், இலங்கை இந்தியாவிற்கு நட்பு நாடு எனவே அந்நாட்டு ராணுவத்துக்கு பயிற்சி அளிப்போம், என்று மத்திய ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜு அறிவித்துள்ளது தமிழக மக்களின் முதுகில் குத்திய செயல். இங்கு பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவத்தினரை வெளியேற்றுவதுடன் தமிழக மீனவர்களின் உரிமையையும் காக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை ராணுவத்தினருக்கு இந்திய அரசு பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழக முதல்வரும், அரசியல் கட்சித் தலைவர்களும் தெரிவித்த கடுமையான எதிர்ப்பை உதாசீனப்படுத்தும் வகையில், இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது தொடரும் என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழினத்தையே அவமதிப்பதாகும்.

இந்திய மத்திய அரசு, தனது நட்பு நாடு என்று இன்று பறைசாற்றும் இலங்கை, உண்மையில் சீனத்தின் நட்பு நாடாக ஆவதையும், தனது எதிரி நாடாக நின்று இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சறுத்தலாக ஆகப்போவதையும் இந்தியா பார்க்கத்தான் போகிறது என்று கூறியுள்ளார்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர், தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை::

இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற செய்தி கேட்டு தமிழகமே கொதித்தெழுந்தது. இதனால் கடந்த ஜூலை மாதம் இலங்கை விமானப்படையினருக்கு சென்னை தாம்பரத்தில் அளிக்கப்பட்டு வந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்களுக்கு ஊட்டியில் பயிற்சி அளிப்பதாக தகவல் வெளியானது. இது குறித்த மத்திய அமைச்சர் பல்லம் ராஜு பேசியது, புண்ணாகிக் கிடக்கும் தமிழர்களுக்கு வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இதனை இந்திய ஜனநாயக கட்சி தன் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஊட்டியில் பயிற்சி பெறும் இலங்கை கடற்படையினரை மத்திய அரசு உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Various political leaders including DMDK chief Vijayakanth, PMK founder Ramadoss condemned central minister Pallam Raju for announcing that Sri Lankan military officers will be trained in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X