புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை தொடர பிரதமருக்கு முதல்வர் கடிதம்
சென்னை: ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்வதோடு, முன்புபோல் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கும், சிகிச்சைகளுக்கும் கட்டணம் அறிவிக்கப்பட்டிருப்பதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு புதுச்சேரியில் இருந்து வரும் ஏழை நோயாளிகளை மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலையில் இருந்து அங்கு போய் சிகிச்சை பெறுபவர்களையும் கடுமையாக பாதிக்கும்.
இது தொடர்பாக ஒரு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். 2008ம் ஆண்டு ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சி நிறுவனமாக மாற்றுவதற்கான சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, அந்த சட்ட முன்வடிவை அறிமுக நிலையிலே அதிமுக கடுமையாக எதிர்த்தது. இந்த கடுமையான எதிர்ப்பையும் மீறி, தற்போது பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இலவச சிகிச்சை எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று உத்தரவாதத்தை அளித்துவிட்டு மேற்கண்ட சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
இப்போது ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கும், சிகிச்சைகளுக்கும் கட்டணம் என்று அறிவித்திருப்பது, நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழியில் இருந்து பின்வாங்குவது போல இருக்கிறது.
எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சையை நிறுத்திவிட்டு, கட்டணம் வசூலிப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், முன்பு போலவே அதாவது 2008ம் ஆண்டு உறுதி அளித்தது போல இலவச சிகிச்சை தொடர வேண்டும் என்றும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.