For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லேட்டா ஆரம்பிச்சாலும் லேட்டஸ்டாக இருந்த குற்றாலம் சீசன்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Kutralam
குற்றாலம் என்ற பெயரை நினைத்தாலே ஆர்பரிக்கும் அருவிகளும், இதமான சாரல்மழையும்தான் நினைவிற்கு வரும். ஒவ்வொரு ஆண்டும் சீசன் சமயத்தில் போய் தலையை காட்டிவிட்டு வந்தால்தான் அந்த வருடம் முழுவதும் சுகமாய் இருக்கும் என்பது சிலருக்கு நம்பிக்கை. அதற்காகவே ஆண்டுதோறும் பணம் சேமித்து குற்றாலத்திற்கு செல்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு குற்றாலம்தான் சிறந்த பொழுது போக்கு இடம். சீசன் சமயத்தில் இரண்டு நாளாவது போய் தங்கியிருந்து குளித்து விட்டு கறி விருந்து சாப்பிட்டு விட்டு வராவிட்டால் ஆண்டு முழுவதும் நிம்மதியாக இருக்காது என்று புலம்புவார்கள். தென்மாவட்ட மக்கள் சென்னைக்கு இடம் பெயர்ந்தாலும் பொதிகை ரயிலை பிடித்தாவது வந்து அருவியில் தலைகாட்டிவிட்டுப் போவார்கள். அந்த அளவிற்கு குற்றால அருவிகளின் மீதும் குற்றால நாதரின் மீதும் அளவில்லாத காதல்.

இந்த வருடம் சீசன் ஏமாத்திருச்சே என்று புலம்பிக்கொண்டிருந்தவர்களின் கண்களிலும், காதுகளிலும் இன்பத்தேனாய் விழுந்தது அந்த செய்தி. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து அருவியில் தண்ணீர் கொட்டுகிறது என்ற செய்திதான் அது.

உடனே வண்டியை பேசி கிளம்பிவிட்டனர் தென் மாவட்ட மக்கள். என்ன வேலை இருந்தாலும் பரவாயில்லை லீவு போடு மாப்ளை குற்றாலத்துல தண்ணி கொட்டுதுடா, மெயினருவியில ஆர்ச்சை தொட்டு தண்ணி விழுதுடா என்று சொன்னதுதான் தாமதம் குடும்பத்தோடு கிளம்பிவிட்டோம் குற்றாலத்திற்கு.

இரவு நேரம் அந்தளவிற்கு கூட்டம் வரவில்லை. நகருக்குள் காலடி வைத்துமே இதமான சாரல் வரவேற்றது. மெயினருவி செல்லும் வழியில்தான் நாங்கள் தங்கியிருந்த அறை. எப்பொழுதுமே மக்கள் கூட்டம் அலைமோதும், வெள்ளிக்கிழமை இரவு என்பதாலும் சீசன் நிலவரம் பற்றி மக்களிடம் சரியாக சென்றடையாத காரணத்தினாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. அதனால் அறைக்கு சென்று பையை வைத்த உடனே குளிக்க கிளம்பினோம்.

மறுநாள் சனிக்கிழமை எங்கிருந்துதான் அத்தனை கூட்டம் வந்ததோ வேன், கார் என ஒரே இரைச்சல். மக்கள் கூட்டம் அதிகமாக அதிகமாக அங்கிருந்த சிறு வியாபாரிகளின் கண்களில் மகிழ்ச்சி வெள்ளம். இருக்காதே பின்னே சுற்றுலா பயணிகளை நம்பித்தானே அவர்கள் கடை போட்டிருக்கிறார்கள்.

சனிக்கிழமை நாள் முழுவதும் ஒரே சாரல்மயம்தான் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என மக்கள் குளிக்கும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டியது. சுகமான குளியல், சூடான சாப்பாடு என ஜாலியாக பொழுதை கழிக்க நினைப்பவர்களுக்கு குற்றாலம் அருமையான இடம்.

சமையல் செய்யலாம் என மின்சார ஸ்டவ் எடுத்துப்போனதுதான் நாங்கள் செய்த தவறு. கரண்ட் கட் அங்கேயும் தன் வேலையை காட்டிவிட்டது. அப்புறம் என்ன சாலையோரம் வசிப்பவர்களைப் போல விறகு அடுப்பு மூட்டி சாரலோடு சமையல் செய்து சாப்பிட்டோம். அம்மியில் அரைத்த மசாலாவுக்கு நாட்டுக்கோழி குழம்பு சுவை சூப்பரோ சூப்பர் என்று பாராட்டு கிடைத்த பின்னர் நிம்மதி பெருமூச்சு எழுந்தது எனக்கு.

இரவு நேரத்தில் பார்டர் கடை புரோட்டாவும், நாட்டுக்கோழி சிக்கனும் இல்லாமல் சீசன் முடியாதே. சாரலில் நனைந்து கொண்டே பிரானூர் பார்டர் போய் ரஹமத் கடையில் புரோட்டாவும் சிக்கனும் சாப்பிட்டால்தான் குற்றாலம் சீசன் நிறைவடையும் என்பது ஐதீகமாகிப் போனது. ஒரு புரோட்டா 5 ரூபாய்தான் ஆனால் அதற்கு நாட்டுக்கோழி குருமா கொடுப்பதால் ஸ்பெசலாக அங்கே கூட்டம் அள்ளுகிறது.

இரவு நேரத்தில் மெயின் அருவியில் தண்ணீரின் வேகம் அதிகரித்தது. குற்றாலத்துக்கு வந்த கூட்டத்தில் இருந்த இளைஞர் பட்டாளம் ஒன்று யாருக்கோ போன் செய்து டேய் மாப்ள சூப்பர் தண்ணிடா. ஆர்ச்சை தாண்டி விழுதுடா உடனே கிளம்புடா நல்லா குளிக்கலாம் என்று கூறியது. சந்தோசமான சாரல் நினைவுகளுடன் அடுத்த சீசனுக்கு ஒரு வருடம் காத்திருக்கணுமோ என்ற கவலையோடு ஊருக்கு ரயில் பிடித்தோம்.

English summary
Kutralam season starting September first
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X