For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரத்தில் 15-ந் தேதி முப்பெரும் விழாவில் பங்கேற்க கருணாநிதி அழைப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: விழுப்புரத்தில் வரும் 15-ந் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் பெருந்திரளாக பங்கேற்குமாறு திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்த ஆண்டு முப்பெரும் விழாவினை விழுப்புரத்திலே நடத்துவதாக மு.க. ஸ்டாலின், முன்பே சொல்லி வைத்துள்ளார். "டெசோ'' மாநாட்டினை அங்கே நடத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, பின்பு சென்னைக்கு மாற்றப்பட்டதால், அவருக்கு முன்னுரிமை தர வேண்டுமென்று சொல்லியிருக்கிறார் என்றதும், பொதுச் செயலாளர் அன்பழகனும் வழிமொழிய இந்த ஆண்டு முப்பெரும் விழாவினை விழுப்புரத்திலே நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுவிட்டது.

15-ந் தேதி காலை 7.30 மணியளவில், சென்னை வள்ளுவர்கோட்டத்திற்கு எதிரே அமைந்துள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு நானும், பொதுச் செயலாளரும், பொருளாளரும் மற்றும் கழக முன்னணியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, விழுப்புரம் முப்பெரும் விழா மாநாட்டில் கலந்து கொள்ளப் புறப்படுகிறோம். விழுப்புரத்தில் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் திறந்தவெளி மாநாடாக நடத்தினால் எங்கே மழை வரக் கூடுமோ என்பதற்காக இந்த ஆண்டு பந்தல் அமைத்து சிறப்பாக நடத்துகிறார்கள் விழுப்புரம் மாவட்டக் கழகக் கண்மணிகள், தம்பி பொன்முடி தலைமையில்.

லியோனியின் பட்டிமன்றம்

காலை 10 மணியளவில் திண்டுக்கல் லியோனி குழுவினரின் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பட்டிமன்றத்தின் தலைப்பு - "நூறாண்டு திராவிட இயக்க வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்தது கலைப்பணியே - அரசியல் பணியே''. பட்டிமன்ற நிகழ்ச்சி முடிந்ததும் 3 மணியளவில் இறையன்பன் குத்தூசு கழகப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் தொடக்க நிகழ்ச்சியாக விழுப் புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் புதிதாக அமைந்துள்ள அண்ணா முழு உருவ வெண்கலச் சிலையினை பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில், பொருளாளர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நான் திறந்து வைக்கிறேன்.

விருதுகள் வழங்கும் விழா

அடுத்து முப்பெரும் விழா மேடையில் மேல் நிலைப்பள்ளித் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் நிதியளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் - கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப் பட்ட கல்லூரி மற்றும் மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் நிதியளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மாத்திர மல்ல, ஆண்டுதோறும் வழங்குவதைப் போலவே இந்த ஆண்டும் சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நற்சான்று, பண முடிப்பு, பதக்கம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

மாலையில் முப்பெரும் விழா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி - அந்த விழாவிற்கு பொதுச் செயலாளர் பேராசிரியர் தலைமை தாங்கிட பெரியார் விருதினை மும்பை பொ. அப்பாதுரைக்கும், அண்ணா விருதினை அ.ரகுமான்கானுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கும் என் பெயரால் உள்ள கலைஞர் விருது ஆர்.டி. சீத்தாபதிக்கும், என்னால் வழங்கப்படவுள்ளது. விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொன்முடி வரவேற்புரை ஆற்றிட, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர். ஜனகராஜ் நன்றியுரையாற்ற உள்ளார்.

தலைமைக் கழகம், அண்ணாவிற்கு விழா எடுத்த போதும், உனது சொந்த ஊரில் உன்னால் முடிந்த அளவிற்கு அண்ணாவிற்கு விழா எடுப்பாய் என்பதை நான் நன்கறிவேன். அதுதான் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசும். இருந்தாலும் விழுப்புரம் எடுக்கும் இந்த விழாவிற்கு நீ உன் குடும்பத்தோடு புறப்படத் தயாராகு. பெரியாரே துணையாக - அண்ணாவே என் உயிரின் இணையாக - இருக்கும்போது; இந்த முப்பெரும் விழா - விழுப்புரம் நகரில் நடைபெறுகிறது. அதில் நான் கலந்து கொண்டு கழகத் தீரர்களுக்கு விருது வழங்கும் வாய்ப்பு பெறுகிறேன் என்பதை நினைத்தால்; இதனை இரட்டிப்பு மகிழ்ச்சி என்பதா? இடையறாத மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கப் போகிறேன் என்பதா? என்று அதில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

English summary
DMK's Mupperum Vizha, the high-profile annual celebration of the birth anniversaries of the DMK, its founder Annadurai and Periyar will held at Vizhupuram on Sep. 15
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X