For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர்'': 'கருப்பு எம்ஜிஆர்' விஜயகாந்த் மீது ஜெயலலிதா தாக்கு!

By Chakra
Google Oneindia Tamil News

Vijaykanth and Jayalalitha
ஸ்ரீரங்கம்: உள்ளத்திலும், உருவத்திலும் கருப்பானவர் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த்தை முதல்வர் ஜெயலலிதா மறைமுகமாகத் தாக்கினார்.

முதல்வர் ஜெயலலிதா தனது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதற்கான விழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்தது. மேலும் இந்தத் தொகுதியில் பல்வேறு புதிய நலத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ஜெயலலிதா பேசுகையில்,

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், காவிரி ஆற்றினால் சூழப்பட்டும், மிகப் பெரிய ராஜகோபுரத்தினை உடைய திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளதுமான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இந்த இனிய விழாவிலே கலந்து கொண்டு, உங்களிடையே உரையாற்றுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

என் மீதும், எனது அரசு மீதும் நீங்கள் பொழியும் பாசத்தை, நீங்கள் வைத்திருக்கும் அன்பை, அளவு கடந்த நம்பிக்கையை உங்கள் முகங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

இது ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறும் மூன்றாவது அரசு விழா. தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியும் என்னுடைய தொகுதி தான் என்றாலும், இது என்னுடைய சொந்தத் தொகுதி. நான் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து கொண்டிருந்தாலும், என்னுடைய எண்ணம் எல்லாம் மலைக் கோட்டையைச் சுற்றித்தான்.

என்னை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியவர்கள் நீங்கள். நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே என்னுடைய புனிதக் கடமை, நன்றிக் கடன் என கருதுகிறேன். ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நான் ஒரு போதும் தவறியதில்லை என்றவர், இப்போது உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன் என்று கூறி ஒரு கதையைக் கூறினார்.

பெரு வணிகர் ஒருவரும், சிறு வணிகர் ஒருவரும் நீண்டகால நண்பர்களாக இருந்து வந்தனர். திடீரென இருவருக்குள்ளும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். உடனே, அந்த பெரும் வியாபாரி, இந்த சிறிய வியாபாரி தவறு செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும், அவரிடம் பணிபுரிபவர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாகவும் கூறி சிறு வியாபாரி மீது ஒரு வழக்குத் தொடர்ந்தார்.

இந்தக் வழக்கால் கவலையடைந்த அந்த சிறிய வியாபாரி, தனது நண்பன் மூலம் ஒரு பெரிய வழக்கறிஞரை அணுகினான். ஆனால் அந்த வழக்கறிஞரோ, தன்னால் இந்த வழக்கை ஏற்று நடத்த முடியாது என்று கூறிவிட்டார். இருப்பினும், அன்று மாலை அந்த சிறிய வியாபாரி மீண்டும் வழக்கறிஞர் வீட்டிற்குச் சென்று காத்துக் கொண்டிருந்தார். வழக்கறிஞர் வந்தவுடன், தன் வழக்கிற்காக வாதாட வேண்டும் என்று அவரிடம் மீண்டும் மன்றாடினார் அந்த வியாபாரி.

அந்த வியாபாரியின் மீது பரிதாபப்பட்டு, வழக்கை ஏற்று நடத்த சம்மதம் தெரிவித்தார் அந்த வழக்கறிஞர். வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து வருமாறு அந்த வியாபாரியிடம் தெரிவித்தார் வழக்கறிஞர்.

இதையடுத்து, மறுநாள் வழக்கு தொடர்பான ஆவணங்களை வழக்கறிஞரிடம் ஒப்படைத்தார் அந்த வியாபாரி. ஆவணங்களைப் படித்துப் பார்த்த வழக்கறிஞர், இந்த வழக்கினை தன்னால் நடத்த முடியாது என்றும், நீங்கள் வேறொரு வழக்கறிஞரைப் பார்த்து கொள்ளுங்கள் என்றும் மீண்டும் கூறினார்.

ஆனால் அந்த வியாபாரி, உங்களைத்தான் நம்பி வந்துள்ளேன். இந்த வழக்கை நீங்கள்தான் வெற்றிகரமாக முடித்துத் தரவேண்டும் என்று வேண்டினான். வியாபாரியின் இந்த வேண்டுகோளைக் கேட்ட வழக்கறிஞர், தனது பிற பணிகளை ரத்து செய்துவிட்டு வியாபாரியின் வழக்கை எடுத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

வெகு விரைவில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கறிஞரின் வாதத்தால், அந்த சிறிய வியாபாரி வழக்கிலிருந்து விடுபட்டார். ஆனால் பிறகு அந்த வழக்கறிஞரை சந்திக்கவும் இல்லை; நன்றியும் கூறவில்லை.

அந்த சிறு வியாபாரியின் நண்பன் வழக்கறிஞரின் வாதத் திறமையால்தான் இந்த வழக்கு வெற்றி பெற்றது என்றார். அதற்கு அந்த சிறு வியாபாரி என் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு உண்மையிலேயே பலவீனமானது. இதில் வழக்கறிஞரின் பங்கு ஒன்றும் இல்லை. பணத்திற்காகத்தான் இந்த வழக்கறிஞர் இதர பணிகளை விட்டு விட்டு வாதாடினார் என்று அந்த வியாபாரி என்று அவதூறாகப் பேசினார்.

கதையில் வரும் இந்த சிறு வியாபாரி கருப்பாக இருப்பார். அவர் நிறம் மட்டும் கருப்பாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், அவர் உள்ளமும் கருப்பு என்பதை அவர் நிரூபித்துவிட்டார்.

இவரைப் போலவே சிலர் உள்ளனர். நம்மை வேண்டி அவர்களுக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுவிட்டு, பிறகு நம்மையே எதிர்த்தும், பழித்தும் பேசி வருகிறார்கள்.

ஆனால், யார் என்ன பேசினாலும், என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற குறிக்கோளுடன் மக்கள் நலத் திட்டங்களை நான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றார் ஜெயலலிதா.

இது தேமுதிக தலைவர் விஜய்காந்தை குறி வைத்து சொல்லப்பட்ட கதை என்பதை சொல்லவும் வேண்டுமா?!

English summary
CM Jayalalithaa today launched verbal attack on DMDK leader Vijaykanth, indirectly saying he is black in colour and his mind is also black.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X