For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு- இரவு ராஜபக்சேவுக்கு விருந்து கொடுத்து உபசரிக்கிறார் பிரதமர்

Google Oneindia Tamil News

Rajapaksa and Manmohan singh
டெல்லி: மத்திய பிரதேசத்தில் புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைகழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ள ராஜபக்சேவுக்கு இன்று இரவு விருந்து கொடுத்து உபசரிக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக கட்சிகள் எல்லாம் கடுமையாக போராடியும், ஒரு உயிர் பறிபோன பின்னரும் கூட அதையெல்லாம் நிராகரித்து விட்டு இப்போது ராஜபக்சேவுக்கு விருந்தளிக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்திருப்பது தமிழக மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலை கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் ராஜபக்சே கலந்து கொண்டு பல்கலை கழகத்திற்கான அடிக்கல் நாட்ட உள்ளார்.

ஆனால் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் பல்லாயிரம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியா வருவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சேலத்தில் கடந்த 17ம் தேதி ஆட்டோ டிரைவர் விஜயராஜ், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பலியானார். மேலும் தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக, மதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள், ராஜபக்சேயின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சில கட்சிகள் போராட்டங்களையும் நடத்தின.

உச்சகட்டமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ராஜபக்சேவை மத்திய பிரதேசத்திற்குள் அனுமதி கூடாது என்று மத்திய பிரதேச மாநில முதல்வருக்கு கடிதம் எழுதினார். ஆனால் கைகோவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இதையடுத்து மத்திய பிரதேசத்திற்கு வரும் ராஜபக்சேவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வைகோ தலைமையிலான மதிமுக தொண்டர்கள் 40 பஸ்களில் சாஞ்சிக்கு புறப்பட்டனர்.

அவர்களை மபி எல்லையிலேயே அந்த மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியபோதிலும் சாலையில் உட்கார்ந்து இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள்.

இப்படி உணர்ச்சிக் கொந்தளிப்புடன் தமிழகத்தில் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அதைப் பொருட்படுத்தாமல் ராஜபக்சே டெல்லிக்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளார். டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அரசு சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

டீ தருகிறார் பிரணாப் முகர்ஜி

இன்று மாலை 5 மணிக்கு ராஜபக்சே, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசுகிறார். அங்கு தேனீர் விருந்திற்கு பிறகு, இரவு 7 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் ராஜபக்சே சந்தித்து பேசுகிறார். அங்கு அவருக்கு மன்மோகன்சிங் இரவு விருந்து அளிக்கிறார்.

ராஜபக்சேவுடனான சந்திப்பின் போது, இலங்கையில் இந்திய நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும் தமிழர் மறுகுடியேற்றப் பணிகள் குறித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை சாஞ்சி வருகிறார்

நாளை காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய பிரதேசம் புறப்பட்டு செல்லும் ராஜபக்சே சாஞ்சியில் புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ராஜபக்சேயின் வருகையொட்டி போபாலில் இருந்து சாஞ்சிக்கு செல்லும் வழியில் 45 கி.மீ தொலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ஆயுத படையினர் 100 மீட்டர்கள் இடைவெளியில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
Sri Lankan president Mahinda Rajapaksa and several other dignitaries are to lay the foundation stone of an international Buddhist university on Friday. TN parties including MDMK had put demand to stop Rajapaksa's 4 days visit to India. But Central and Madhya Pradesh state government has not listen to the demand. Rajapaksa visited Delhi and he will have dinner in the PM house today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X