For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்ஜாமீன் கோருகிறார் கருணாநிதி மகள் செல்வி

Google Oneindia Tamil News

Selvi
சென்னை: நில மோசடி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி, அவரது மருமகன் டாக்டர் ஜோதிமணி ஆகியோர் மீது ரு. 3.5 கோடி பண மோசடி புகார் கூறியிருந்தார்.

சோழிங்கநல்லூர் அருகே தாழும்பூர் கிராமத்தில் செல்விக்கு சொந்தமான 2.94 ஏக்கர் நிலம் உள்ளது. ஜோதிமணி மூலம் இந்த நிலத்தை ரூ. 5 கோடியே 14 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வாங்க விலை பேசி அதில் ரூ. 3.5 கோடி முன் பணம் கொடுத்தேன். ஆனால் நிலத்தை எனக்கு விற்காமலும் பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து விட்டனர் என்று நெடுமாறன் புகாரில் கூறியிருந்தார்.

இதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செல்வி, ஜோதிமணி ஆகியோர் மீது ஏமாற்றுதல், மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

புகார்தாரர் நெடுமாறனிடம் குற்றப்பிரிவு போலீசார் முதலில் விசாரணை செய்தனர். தொடர்ந்து செல்வி, ஜோதிமணி ஆகியோரை விசாரிக்க போலீஸ் முடிவு செய்தது. இதற்காக இருவரும் நேற்று நேரில் ஆஜராகுமாறு கூறி போலீசார் சம்மன் அனுப்பினர்.

முதலில் ஜோதிமணியை விசாரித்து விட்டு பின்னர் செல்வியை விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர் போலீஸார்.

இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதில், நெடுமாறன் குறிப்பிடும் நிலம் சம்பந்தமாக எனக்கும், அவருக்கு இடையே 2007-ம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. அவர் அந்த நிலத்தை வாங்குவதற்காக ரூ.3.50 கோடியை என்னிடம் கொடுத்திருந்தார். 3 மாதங்களுக்குள் அந்த நில விற்பனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் உள்ள அம்சமாகும்.

அப்படி ஒப்பந்ததை நிறைவேற்றாத பட்சத்தில் வேறு ஒருவரிடம் அந்த சொத்தை விற்பனை செய்ய முடியும். ஆனால் நிதிச்சுமை காரணமாக புகார்தாரரால் 3 மாதங்களுக்குள் அந்த நிலத்தை வாங்க முடியவில்லை. எனவே நிலத்தின் தாய்ப்பத்திரத்தை என்னிடம் திரும்ப கொடுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து ஜி.கே.வேலுவிடம் நில விற்பனைக்காக ஒப்பந்தம் செய்து கொண்டேன். இது புகார்தாரருக்கு நன்றாக தெரியும்.

ஆனாலும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் காரணமாக என் மீது பொய்ப்புகாரை புகார்தாரர் கொடுத்துள்ளார். சொத்து ஆவணங்களை பெற்றிருந்தது பற்றி புகார்தாரர் மறைத்துவிட்டார்.

முன் பணமாக பெற்ற ரூ.3.50 கோடியை, 2009-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மனுதாரர் திரும்ப செலுத்த தொடங்கினார். 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.2.50 கோடி பாக்கி இருந்தது. முன் பணமாக நான் வாங்கிய தொகை ரூ.3.50 கோடிக்கான வட்டி ரூ.75 லட்சத்தை சேர்த்து மொத்தம் ரூ.4.25 கோடியை திருப்பி செலுத்திவிட்டேன்.

ஆனால் சொத்தை வாங்க இயலாத நிலையை மறைத்து, என் மீது புகார்தாரர் பொய்ப்புகார் கொடுத்துள்ளார். நில அபகரிப்பு குற்றச்சாட்டின் கீழ் என்னை கொண்டு வருவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

புகார்தாரர் பல உண்மைகளை மறைத்து உயர்நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெற்றுள்ளார். அவர் கொடுத்த புகாருக்கும், நடந்த சம்பவத்துக்கும் சம்பந்தமே இல்லை. புகார்தாரர் கூறுவதுபோல் நான் எந்த குற்றமும் செய்யவில்லை. என்னைப்பற்றிய தகவலை வெளியிட்டு எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிட்டார்.

ஆட்சி மாறியதை தொடர்ந்து என்னிடம் இருந்து அதிக பணத்தை பெறும் நோக்கத்தில் இப்படி பொய்யான புகாரை கொடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு 21-ந் தேதி வரும்படி எனக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அப்போது நான் கைது செய்யப்படக்கூடும் என்று அஞ்சுகிறேன். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதேபோல செல்வியின் மருமகன் ஜோதிமணியும் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி அக்பர் அலி இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார்.

செல்வி மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார், ஐபிசி 406, 420, 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai Police has sent notice to Karunanidhi's daughter Selvi and her son in law Jothimani to apepar for a probe on land fraud charge. But both Selvi and Jothimani did not appear before police, however they have sought anticipatory bail in the HC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X