For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொது நுழைவுத் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்-இல்லாவிட்டால் போராட்டம் நடக்கும்: வைகோ

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பொது நுழைவு தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மத்திய அரசை கண்டித்து மதிமுக போராட்டம் நடத்தும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் மத்திய அரசு கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனைக் கவனத்தில் கொள்ளாமல், மருத்துவக் கல்வி, பல் மருத்துவக் கல்வி படிப்புக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் பொது நுழைவுத் தேர்வு நடத்த போவதாக அறிவித்துள்ளது.

சமூகநீதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு உயர்நீதிமன்றமும், தமிழக அரசின் நடவடிக்கை சரிதான் என்று தீர்ப்பும் வழங்கி உள்ளது.

இந்த நிலையில் மருத்துவக் கல்வியில் சேர பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. நகர்ப்புற மற்றும் மேல்தட்டு வகுப்பினர் மட்டுமே மருத்துவ பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தேசிய தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு மூலம் குறிப்பிட்ட சதவீதம் இடங்கள் மருத்துவ கல்லூரிகளில் தனியாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது சமூக நீதியின் அடிப்படையையே தகர்த்துவிடும்.

தமிழகத்தில் கடந்த 2007ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நுழைவுத் தேர்வை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கல்வித் துறையில் மத்திய அரசின் தாந்தோன்றித்தனமான போக்கையே காட்டுகிறது.

மாநில அரசின் அதிகாரத்தில் இருந்த கல்வித் துறையை பறித்துக் கொண்டு, மத்திய அரசு தமது விருப்பம் போல் ஆதிக்கம் செலுத்துகிறது. சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிரான மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

சமூக நீதிக்கு உலை வைக்கும் மத்திய அரசு தன் போக்கை மாற்றிக் கொண்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்யாவிடில், மத்திய அரசை எதிர்த்து மதிமுக போராட்டம் நடத்தும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Demanding cancellation of conducting nationwide entrance test for admission in medical colleges, MDMK Chief Vaiko today threatened to stage a protest if his demand is not met with.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X