For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரோம்னிக்கு ‘நாற்பத்தியேழு’ மூலம் வந்த ஏழரை: ஒபாமா வெற்றி உறுதியாகிறது!

By Shankar
Google Oneindia Tamil News

Romney and Obama
வாஷிங்டன்: தமிழகத்திலிருந்து யாராவது நல்ல ஜோசியரை, அமெரிக்க குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோம்னிக்கு பரிந்துரைக்கலாம் போலிருக்கு. மனிதர் ஏதாவது சொல்லி வைக்க, அது ‘சரியான ஏழரை'யாக அவருக்கு எதிராக திரும்பிய வண்ணம் இருக்கிறது.

கடந்த வாரம் லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட நிலையில், என்ன ஏதென்று அறிந்து கொள்ளும் முன்பாகவே அவசரக் குடுக்கையாக ஒபாமாவை குற்றம் சாட்டி கொடுத்த பேட்டி, அறிக்கைகளுக்கு, அமெரிக்கா முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. அது அடங்குவத்ற்கு உள்ளாகவே இன்னொரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

செல்போன் வீடியோவில் சிக்கினார்

அமெரிக்காவில் டின்னர் பார்ட்டி மூலம் தேர்தல் நிதி வசூலிப்பது வழக்கம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கலந்து கொள்ளும் டின்னர் விருந்துக்கு செல்ல குறிப்பிட்ட தொகை நிர்ணயித்து இருப்பார்கள். சிறு குழுவாக இருப்பதால், அனைவருக்கும் வேட்பாளரிடம் நேரடியாக உரையாடும் வாய்ப்பு கிடைக்கும். கட்சியின் அதி தீவிர பணக்கார விசுவாசிகள் பெரும்பாலும் கலந்து கொள்வார்கள். இப்படி நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் ரகசியமாக படம்பிடிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் வேட்பாளர் மிட் ரோம்னியின் பேச்சு, பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

47 சதவீத மக்களைப் பற்றி கவலையில்லை

ரோம்னி பேசும் போது, அமெரிக்காவில் 47 சதவீத மக்கள் வருமான வரி கட்டாதவர்கள், அரசின் உதவியை எதிர்பார்த்து கையேந்தி இருப்பவர்கள். அவர்கள் எனக்கு வாக்களிக்கப் போவதில்லை. அவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்று பேசியுள்ளார்.

ரோம்னியின் இந்த பேச்சு மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், போர் பகுதியில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஏழை, நடுத்தர வர்க்கத்தினரை கொந்தளிக்க வைத்துள்ளது

ஜிம்மி கார்ட்டரின் பேரன்

ஜனநாயகக் கட்சி அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர், மீண்டும் தேர்தலில் நின்ற போது குடியரசுக் கட்சியின் ரொனால்டு ரீகனால் தோற்கடிக்கப் பட்டார். தற்போது, அதற்கு பழி தீர்க்கும் வகையில் ஜிம்மி கார்ட்டரின் பேரன் ஜேம்ஸ் கார்ட்டர், இன்றைய குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோம்னியின் ரகசியப் பேச்சை அம்பலப்படுத்தி உள்ளார். வீடியோவை ரகசியமாக பதிவு செய்தவரை தொடர்பு கொண்டு மதர்ஜோன்ஸ் இணையத்தளம் மூலமாக முழு பேச்சையும் வெளியிட்டுள்ளார். அது பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

47 சதவீத மக்களைப் பற்றி கவலை இல்லாதவர் எப்படி குடியரசுத் தலைவர் ஆக இருக்க முடியும் என்று பல தரப்பிலிருந்தும் ரோம்னிக்கு எதிராக குரல்கள் வந்து கொண்டிருக்கிறது.

சொந்த கட்சியினர் கைவிரிப்பு

இந்த வீடியோ வெளியான பின்பு, அதற்கு ரோம்னி கொடுத்த விளக்கம், எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போலாகிற்று. நான் அதை ரொமப் எலிகண்டாக சொல்லவில்லையென்றாலும், சொன்ன கருத்தில் மாற்றமில்லை என்று விளக்கம் கொடுத்தார்.

அதன் பிறகு, அவரது சொந்த கட்சியினரே ரோம்னி சொன்னது மிகப்பெரிய தவறு என்று வெளிப்படையாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். குடியரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளரான நியூயார்க் டைம்ஸ் டேவிட் ப்ரூக் கூட ரோம்னியை குறை கூறியுள்ளது குடியரசுக் கட்சியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரியை வெளியிட்ட ரோம்னி

லிபியா, 47 சதவீதம் என அடுத்தடுத்து இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட ரோம்னி, 2011 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அக்டோபர் பதினைந்தாம் தேதிக்குள் வெளியிடுவேன் என்றவர் அவசர அவசரமாக் வெளியிட்டு, கவனத்தை திசை திருப்ப முயன்றுள்ளார்.

வருமான வரி வெளியீடு மூலம், பழைய பிரச்சனையை அவரே கிளப்பி விட்டுள்ளார் என்று 'பிபிஎஸ் செய்தி நேரம்' மார்க் ஷீல்ட்ஸ் உள்ளிட்ட சில அரசியல் பார்வையாளர்கள் கருத்து கூறியுள்ளனர். வழக்கமான பத்து வருட வருமான விவரங்களை தாக்கல் செய்யாமல் 2010ம் ஆண்டுக்கு மட்டுமே வெளியிட்ட போதே 'வரி ஏய்ப்பு செய்துள்ளார், வெளி நாட்டில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார்' போன்ற குற்றச்சாட்டுகள் வெளி வந்தன. இப்போது கடைசி வருடமான 2011 க்கு மட்டும் வெளியிட்டு மீண்டும் அவ்ரது வருமான வரி மீதான விவாத்த்தை அவரே தொடங்கி வைத்துள்ளார்.

மக்கள் செல்வாக்கில் ரோம்னி அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மக்கள் சக்தியே வாஷிங்டனின் நிர்வாகத்தை சீர் செய்ய முடியும் என்று மக்களோடு மக்களாக குரல் கொடுத்து வரும் ஒபாமாவின் செல்வாக்கு ஒவ்வொரு நாளும் மென்மேலும் உயர்ந்து வருகிறது.

ஏழரையின் பிடியில் ரோம்னியும், சுக்கிரனின் பார்வையில் ஒபாமாவும் என்று கூட சொல்லலாம்

கடைசியாக வந்துள்ள கருத்துக் கணிப்பின்படி ஒஹையோவில் 10 சதவீதம் அதிக ஆதரவுடன் உள்ளார் ஒபாமா. ப்ளோரிடா மற்றும் வர்ஜீனியாவிலும் ஒபாமா முந்தி வருகிறார். இவையெல்லாம் தேர்தல் முடிவை தீர்மானிக்கும்ம் மாநிலங்கள். ஒஹையோவில் ஜெயிப்பவர்தான் இதுவரை அமெரிக்க அதிபராகவிருக்கிறார். அடுத்து வரும் அக்டோபர் 3-முதல் நேருக்கு நேர் விவாதங்களில் பங்கேற்கின்றனர் ஒபாமாவும் ரோம்னியும். அமெரிக்க அரசியல் களம் சூடுபறக்கப் போகிறது.

English summary
President Barak Obama's victory is almost confirmed as he got enormous support from key deciding states Florida, Virginia and Ohio
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X