For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை இறுதிப் போரில் சர்வதேச நாடுகளின் சரணடைதல் திட்டத்தை நிராகரித்தார் பிரபாகரன்: எரிக் சொல்ஹெய்ம்

By Mathi
Google Oneindia Tamil News

Solheim and Prabhakaran
லண்டன்: இலங்கை இறுதிப் போரில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் முன்வைத்த சரணடைதல் திட்டத்தை ஏற்காமல் கடைசிவரை போரை பிரபாகரன் நீட்டித்ததே பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணம் என்று நார்வேயின் முன்னாள் அமைச்சரான எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

பி.பி.சியின் தமிழோசை வானொலிக்கு எரிக் சொல்ஹெய்ம் அளித்த பேட்டியில்,

பிரபாகரன், பொட்டு அம்மானை தவிர அனைவருக்கும் பொதுமன்னிப்பு:

கேள்வி: இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக் கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் அனைத்துலக நாடுகள் கூட்டாக எடுத்த முயற்சி, இந்த திட்டம் உருவான பின்னணி, அது ஏன் செயற்படாமல் கைவிடப்பட்டது?

பதில்: இலங்கையின் சமாதானத்துக்காக முயற்சி எடுத்த ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐ.நாவும் இதன் பின்னணியில் இருந்தது. அப்போது, போரின் முடிவு இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்த நிலையில், பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற யோசனையை நாங்கள் முன்வைத்தோம். விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்ட பிறகு தான் அந்தத் திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் முடிவு செய்யப்பட்டிருக்கும்.

அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு- கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பி வைப்பது என்றும், அதில் ஐ.நா அதிகாரிகளோ அல்லது மற்ற அனைத்துலக அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம். அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்ந்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பதாகும்.

அப்படி நடந்திருந்தால், அனைத்துலக சமூகத்தின் முன்னிலையில் அனைத்துலக அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை இலங்கை அரசால் நினைத்த நேரத்தில் கொல்ல முடிந்திருக்காது. எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள். நாங்கள் இந்தப் பேச்சுக்கள் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடக்கம் போரின் இறுதி வரை தொடர்ந்தது.

இதன் ஒரு கட்டமாக, ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதி வடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகத் தொடர்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் ஆஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரைத் தடுத்து விட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கேள்வி: இந்த திட்டத்திற்கு இலங்கை அரசின் ஒப்புதல் இருந்ததா?

பதில்: அந்த நாட்களில் நான் இலங்கைக்குச் செல்லவில்லை. ஆனால் நார்வேயில் ஆஸ்லோவில் இருக்கும் இலங்கை தூதரகம் மூலமாகவும், மற்ற தூதரகங்கள் மூலமாகவும் இலங்கை அரசுத் தரப்புடன் எங்களுக்கு இருந்த தொடர்புகள் மூலமாகவும் இலங்கை அரசுடன் நாங்கள் பல பேச்சுக்களை நடத்தினோம். அவர்களுடன் பேசியதிலிருந்து முழுமையான ராணுவ வெற்றியை பெறுவதே இலங்கை அரசின் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்ற உணர்வையே நாங்கள் பெற்றோம். அதேசமயம், விடுதலைப் புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் இலங்கை அரசு அதற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது என்றே எங்களுக்கு தோன்றியது.

கேள்வி: இந்தத் திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருக்கும் என்று எதை வைத்து நீங்கள் நம்புகிறீர்கள்?

பதில்: அவர்களுக்கு இதில் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமையே இருந்தது. காரணம் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள், ஒட்டுமொத்த அனைத்துலக சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள். இலங்கை அரசில் தயக்கம் இருந்திருந்தாலும் அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்காது.

பிரபாகரனின் வரலாற்று தவறு:

கேள்வி: அப்படியானால், இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதற்கு முழுப் பொறுப்பு விடுதலைப் புலிகளின் தலைமையை சாரும் என்கிறீர்களா?

பதில்: போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப் போகிறது என்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராட வேண்டும் என்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு என்றே நான் நினைக்கிறேன்.

அதேசமயம், இதை காரணமாகக் காட்டி இலங்கை அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் என்று தெரிந்தே, இலங்கை அரசு தாக்குதல்களை நடத்தியது என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சூடுகள் நடத்த முடியாத 'பாதுகாப்பு வளையம்' என்று அரசே ஒரு பகுதியை அறிவிப்பதும் அந்த பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்து தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான வலுவான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

புலிகள் மீது இந்தியாவுக்கு செம கோபம்:

கேள்வி: இந்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா?

பதில்: விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக இந்திய அரசிடம் கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை. ராஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு காரணங்கள் இதற்கு பின்னணியில் இருக்கின்றன. ஆனால் அதேசமயம், இறுதிகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படக்கூடாது என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

கேள்வி: நீங்கள் இறுதியாக முன்வைத்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா இல்லையா?

பதில்: இலங்கை பிரச்சனையில் நான் ஈடுபட்டிருந்த 10 ஆண்டு காலங்களில் இந்தியாவுக்கு தெரிவிக்காமல் நான் எந்த திட்டத்தையும் முன்னெடுத்ததில்லை. இந்த திட்டத்தை இந்தியா ஏற்றிருக்கும் என்பதிலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசும் இருந்திருக்கும் என்பதிலும் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

கேள்வி: இப்படி ஒரு திட்டம் இருந்ததாக நீங்கள் இப்போது கூறும் கருத்துக்கள் உண்மையா என்பதற்கு என்ன ஆதாரம்?

பதில்: 2009ம் ஆண்டில் நடந்த இந்த விஷயங்கள், கொழும்பில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அது தொடர்பான மற்ற தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் விக்கிலீக்ஸில் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருக்கும் தகவல்களை பார்த்தால் இந்தக் கூற்றுக்கான ஆதாரங்கள் அதில் இருக்கின்றன.

இவ்வாறு எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

English summary
Former Norwegian Minister and Sri Lanka’s peace envoy Erik Solheim blamed LTTE leader V. Prabhakaran at a raido Interview to BBC Tamil. Dismissal of proposals for a joint solution, not heeding to international advice and sole dependence on a military solution were blunders committed by Prabhakaran, Solheim recalled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X