For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியா குடும்பத்தின் அதிரவைக்கும் 'வத்ரா கேட்'

By Mathi
Google Oneindia Tamil News

Robert Vadra with Sonai, Rahul, and Priyanka
டெல்லி: நாட்டை எத்தனையோ ஊழல்கள் உலுக்கி வரும் நிலையில் ஏழை விவசாயிகளின் அடிவயிற்றில் அடித்து அடிமாட்டு விலைக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வேட்டையாடிய பெருங்கொடுமையில் சோனியா காந்தி குடும்பம் ஈடுபட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான நிதிசென்ட்ரல் இணையதளத்தில் சந்தியா ஜெயின் எழுதியுள்ள கட்டுரையின் முக்கிய அம்சங்கள்:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா மீதான மோசடி புகாரிலிருந்து சோனியா காந்தி அவ்வளவு எளிதாக தப்பிவிட முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது அரசாங்கத்தின் போது வளர்ச்சியின் பெயரால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம் கொடுக்கபட்ட விவகாரத்தில் சோனியாவின் தலையும் உருண்டது. அப்போதிருந்துதான் ஊழல் புகார்களில் ஏராளமான அமைச்சர்கள் சிக்கி வருவது தொடர்கதையாக இருக்கிறது.

ஹரியானாவின் குர்கானில் அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்குவதை எதிர்த்தவர் ஹிசார் தொகுதி எம்.பி. குல்தீப் பிசோனி. இதற்காக 2006-ம் ஆண்டு காங்கிரஸ் மேலிடம் குல்தீப்புக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த சம்பவத்திலிருந்துதான் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மீதான சோனியாவின் ஈடுபாடு வெளிப்பட்டது. ஆனாலும் கட்சி மேலிடத்தின் கடுப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல் விளைநிலங்களை அடி மாட்டுக்கு விலைக்கு விவசாயிகளிடம் இருந்து பறித்துக் கொடுத்ததை குல்தீப் எதிர்த்தே வந்தார். பெரும் பெரும் நிறுவனஙகள் எல்லாம் ஏராளமான சலுகைகளை அரசாங்கத்திடம் இருந்து பெற்று வரும் நிலையில் சிறப்பு பொருளாதார மண்டல சலுகைகளையும் பெற்றுக் கொண்டு சுமார் ரூ90 ஆயிரம் கோடி அவரி வரி ஏய்ப்பை இந்த நிறுவனங்கள் செய்திருக்கின்றன என்கிறார் குல்தீப்.

இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களை எதிர்த்ததற்காக ஹரியான மாநில காங்கிரஸ் தலைவர் பஜன்லால், குல்தீப் ஆகியோர் கட்சியிலிருந்தே விரட்டியடிக்கப்பட்டனர். பஜன்லால் மறைந்து 10 மாதங்கள் கழித்து 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் குல்தீப் மீண்டும் வெற்றி பெற்று சோனியா குடும்பத்தை பழிதீர்த்தார் என்பது குறிப்பிடட்தக்கது.

2011-ம் ஆண்டு சோனியா, ராகுல், பிரியங்கா இடம்பெற்றிருக்கும் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு குர்கானில் நிலம் கொடுக்கப்படுவதை எதிர்த்து கிராம மக்கள் நீதிமன்றத்தின் கதவுகளையே தட்டினர்.

இப்போது அரசியல்வாதிகள்- அதிகாரிகளின் முறைகேட்டினால் ஏழை விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுவதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக் கேம்கா, ஹரியானாவின் நில ஆர்ஜிதக் கொள்கையை கேள்விக்குள்ளாக்குகிறார். இவர்தான் ஹரியானா மாநில நில ஆர்ஜிதத்துக்கான சிறப்பு ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறவர். நெடுஞ்சாலையை ஒட்டி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சாயத்து விளைநிலங்கள் அடிமாட்டு விலைக்கு ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது என்கிறார்.

இந்தப் பின்னணியில்தான் ராபர்ட் வத்ராவுக்கு டி.எல்.எப்.நிறுவனத்துக்கும் இடையே ஹரியானாவில் நிலம் கொடுக்கப்பட்ட விவகாரத்தை பார்க்க வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது அரசில் நில ஆர்ஜித விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்ட அதே யுத்திதான் இரண்டாவது அரசாங்கத்தில் அதாவது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

கிடைத்திருக்கின்ற தகவல்களின்படி பார்க்கையில் ராபர்ட் வத்ரா தனி ஒரு மனிதராக மட்டும் மோசடியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. ஹரியானாவில் மட்டுமல்ல ராஜஸ்தானின் பிகானிரிலும் (காங்கிரஸ் ஆளும் மாநிலம்) 2007 முதல் 2010- வரை ரியல் எர்த் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் பெருமளவு நிலத்தை வாங்கிக் குவித்து வைத்துள்ளார் சோனியா மருமகன்! ராஜஸ்தானின் கஜ்னெர், கோலயாட் ஆகிய இடங்களிலும் இத்தகைய நிலக் குவிப்பு நடந்துள்ளது. இதில் உச்சகட்டம் என்னவெனில் தங்களது நிலத்தை விற்றாக வேண்டும் என்று வற்புறுத்தி பறித்துக் கொண்டனர் என்று விவசாயிகள் கொந்தளித்துப் போனதால் வேறு வழியின்றி மாநில முதல்வர் அசோக் கெலாட்டே அந்தப் பகுதிகளை பார்வையிட்டதுதான்!

டெல்லியையும் விட்டுவைக்கவில்லை வத்ரா. டெல்லி அருகே மானேசரில் ரூ15.38 கோடிக்கு நிலம் வாங்கியிருக்கிறார். பல்வாலில் ரூ42 லட்சத்துக்கு வாங்கியிருக்கிறார். குர்கானில் ஹய்யாத்பூரில் சுமார் ரூ4 கோடிக்கு நிலம் வாங்கியிருக்கிறார். ஹசானாபூரில் ரூ76 லட்சம் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

2009-10, 2011-12 ஆகிய ஆண்டுகளில் சர்ச்சைக்குரிய டி.எல்.எப். நிறுவனத்துடன் மூன்று வகையான வர்த்தகங்களை ராபர்ட் வத்ரா மேற்கொள்கிறார். இது ரூ446 கோடி மதிப்பிலானது. இரண்டு நில விற்பனை மூலம் இந்த பரிவர்த்தனை நடந்திருக்கிறது. இதைத்தான் கடந்த 5-ந் தேதி கெஜ்ரிவால் அம்பலப்படுத்தினார். அதாவது டெல்லியைச் சுற்றிலும் சுமார் ரூ300 கோடி மதிப்பிலான நிலத்தை வாங்கிக் குவித்திருக்கிறார் அரசாங்க வீட்டில் குடியிருந்து கொண்டு அத்தனை சலுகைகளையும் அனுபவித்து வருகின்ற வத்ரா! டி.எல்.எப். ரூ65 கோடி பிணையேதுமில்லாத கடன் கொடுத்ததாம்! சரி எப்படி நிலம் வாங்கப்பட்டதாம்? பதிலே கிடையாது! 2012-ம் ஆண்டில் வத்ரா 6 நிறுவனங்களிலிருந்து விலகிவிட்டாராம்! ஆக இன்னும் எத்தனையோ நிலக் கொள்ளை வெளிச்சத்துக்கு வர வேண்டியிருக்கிறது! டி.எல்.எப்.க்கு ஹரியானா அரசு நிலத்தை ஒதுக்கிக் கொடுத்த விவகாரமும்தான் சர்ச்சையில் இருக்கிறது.

மக்களவையில் பெரும்பான்மை இருந்த காலத்திலேயே ராஜீவ்காந்தியால் போபர்ஸ் புயலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. இப்போது சிறுபான்மை அரசாங்கமாக பிரதமராக இருக்கும் மன்மோகன்சிங், 'வத்ராகேட்' எனப்படும் நிலக் கொள்ளையில் நேர்மையான விசாரணை நடத்தியாக வேண்டிய சூழலில் இருக்கிறார் என்பதே நிதர்சனம்!

மாமியார் பிள்ளையார் சுழி போட மருமகன் செய்து முடிக்க.. அடேங்கப்பா! ஏழைகளின் அழுகுரல் சும்மா விடாது!!

English summary
Congress president Sonia Gandhi cannot feign distance from the jaw-dropping affluence of her son-in-law and his association with a real estate major. Right from its first term, the UPA, under her auspices, made acquisition and grant of huge land banks to corporates the signature tune of its developmental mantra. Since then, land has embroiled the Congress in so many scandals that the Union Cabinet has found itself unable to clear the pending land acquisition bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X