நக்கீரன் செய்தி வெளியிடக் கூடாது என்ற மதுரை ஆதீனத்தின் வழக்குக்கு தடை
சென்னை: தன்னைப் பற்றி நக்கீரன் இதழ் செய்தி எதையும் வெளியிடக்கூடாது என்று கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தொடர்ந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் அருணகிரிநாதர் தொடர்ந்த வழக்குக்கு தடை விதிக்கக் கோரி நக்கீரன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பொது வாழ்வில் இருக்கும் ஒரு பொதுமனிதர் தன்னைப் பற்றி பத்திரிகையில் செய்தி வெளியிடக் கூடாது என்று தடை கேட்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் எதிரானது. எனவே, மதுரை ஆதினம் தொடர்ந்துள்ள வழக்கு சட்ட விரோதமானது. அந்த வழக்கு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், நக்கீரனுக்கு எதிராக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மதுரை ஆதினம் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை விதித்தார்.