For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை தேவர் ஜெயந்தி.. பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்த மேலும் 2 பேர் பலி-மொத்தம் 5 பேர் சாவு

By Chakra
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அருகே பசும்பொன் தேவர் குருபூஜையில் கலந்து கொண்டு திரும்பியவர்களின் வேன் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மேலும் 2 பேர் பலியாகிவிட்டனர்.

இதன்மூலம் இந்த சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 30ம் தேதி தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் மரியாதை செலுத்தி வழிபட்டனர்.

மதுரை சிலைமான் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த 20 பேர் ஒரு வேனில் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அருப்புக்கோட்டை வழியாக ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

அவர்கள் மதுரை ரிங் ரோட்டில் வந்து கொண்டு இருந்த அவர்கள் ஒரு பாலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மது அருந்தியதாகத் தெரிகிறது.

அப்போது அவர்களைப் போலவே மஞ்சள் பனியனுடன் தேவரை வாழ்த்துக் கோஷம் போட்டபடி 5 பேர் அங்கு வந்தனர்.

திடீரென அவர்கள் அந்த வேன் மீது சரமாரியாக கற்களை வீசினர். தொடர்ந்து வேனுக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் வேன் தீப்பிடித்து எரிந்தது. இதில் வேனில் இருந்த 20 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இவர்கள் அனைவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளி்ல் அனுமதிக்கப்பட்டனர். இதில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளி்ல் சிகிச்சை பெற்று வந்த புளியங்குளத்தை சேர்ந்த கணேசன் மகன் ஜெயபாண்டி (18), சேகர் மகன் சுந்தரபாண்டி (19), ராஜா மகன் வெற்றிவேல் (20) ஆகியோர் சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் இறந்துவிட்டனர்.

இவர்கள் 31ம் தேதியே இறந்துவிட்டதாகவும் ஆனால், தகவலை வெளியில் சொல்லாமல் போலீசார் மறைத்து வந்ததாகவும், தேவர் ஜெயந்தி விழா எல்லாம் முடிந்த பின்னரே இவர்களது மரணச் செய்தியை போலீசார் வெளியிட்டதாகவும் ஒரு புகார் உள்ளது.

இந் நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 17 பேரில் இன்று அதிகாலை தேசிங்குராஜா, ரஞ்சித் குமார் ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவர்களும் சில தினங்களுக்கு முன்பே பலியாகிவிட்டதாகவும், ஒரே நேரத்தில் மரணச் செய்திகளைச் சொன்னால் தென் மாவட்டங்களில் பிரச்சனையாகும் என்பதால் இந்தத் தகவலை இன்று காலை தான் போலீசார் வெளியிட்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையே பெட்ரோல் குண்டு வீசியவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் அனுப்பானடி, சிந்தாமணி பகுதியில் 20 பேர்களை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அனுப்பானடி பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

மற்ற பலிகள்..

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவின்போது அவரது நினைவிடம் இருக்கும் பசும்பொன்னுக்குச் செல்போர் பரமக்குடி அருகே தலித் மக்கள் அதிகமுள்ள பொன்னையாபுரம், பாம்புவிழுந்தான், பச்சேரி போன்ற ஊர்களின் வழியாகப் போக அனுமதிக்கப்படுவதில்லை. இதற்காக பரமக்குடி ஐந்து முக்கு ரோட்டில் போலீஸ் செக்போஸ்ட்டை அமைத்து, யாரும் செல்லாமல் தடுத்து விடுவார்கள்.

ஆனால் இந்த முறை பார்த்திபனூர் மேலப்பெருங்கரையைச் சேர்ந்த 14 பேர் ஒரு வேனில் பசும்பொன் போய் அஞ்சலி செலுத்திவிட்டு, பரமக்குடி வந்தனர். வேனை டிரைவர் சிவகுமார் ஓட்டி வந்தார். பிரச்சினைக்குரிய கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்த வேன், பாம்புவிழுந்தான் கிராமத்துக்கு வந்தது. அப்போது வேனில் இருந்தவர்கள் "இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?' என்றெல்லாம் கோஷம் எழுப்ப, இதைப் பார்த்து டென்ஷனான கிராமமக்கள் அவர்களை வழிமறித்துத் தாக்க, இரு தரப்பிற்கும் இடையில் மோதல் உண்டானது.

வேனில் இருந்தவர்கள் ஓட ஆரம்பிக்க டிரைவர் சிவகுமாரை சுற்றி வளைத்துக் கொண்ட கும்பல், பலமாகத் தாக்கியதில் அவர் பலியானார்.

இந்த சம்பவம் நடந்தபோது பசும்பொன்னில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம்., செல்லூர் ராஜு, சுந்தர் ராஜ், செல்லபாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். படுகொலைத் தகவல் வெளியே கசிந்தால் பிரச்சனையாகி விடும் என்பதால் காவல் துறை அதிகாரிகள், அமைச்சர்களை சீக்கிரமாக அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல திருபுவனம் அல்லிநகரைச் சேர்ந்த மலைக்கண்ணன், கீழராங்கியத்தைச் சேர்ந்த வீரமணி ஆகியோர் பசும்பொன் போய் அஞ்சலி செலுத்தி விட்டு தடைசெய்யப்பட்ட பொன்னையாபுரம் பகுதிக்குள் நுழைந்து கோஷம் போட்டபடியே செல்ல, ஊர் மக்கள் திரண்டு தாக்கியதில் இருவரும் பலியாயினர்.

இந்த இரு சம்பவங்களைத் தொடர்ந்து தான் வேனில் வந்தவர்களை மஞ்சள் பனியனோடு வந்த 5 பேர் நிறுத்த, இவர்கள் தங்களது ஆட்கள் என நினைத்து வேனை நிறுத்த, பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பினர் என்பதும், இதில் காயமடைந்தவர்களில் இன்று காலை வரை 5 பேர் பலியாகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

கலவரம் நடக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தடை செய்யப்பட்ட தலித் கிராமங்கள் வழியாக இவர்கள் ஏன் சென்றனர், இவர்களை போலீசார் ஏன் அனுமதித்தனர் என்பது தெரியவில்லை.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்:

இந் நிலையில் தேவர் ஜெயந்தியை ஒட்டி நடந்த வன்முறை சம்பவத்தையொட்டி தங்களை தரக்குறைவாக சில ஆதிக்க சக்தி கொண்ட ஜாதி தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பேசி வருவதாகக் கூறியும், அதை கண்டித்தும் மதுரை நீதிமன்ற வாசல் முன்பு இன்று உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
Two more people, who suffered burn injuries in a petrol bomb attack on October 30 died at hospitals at Madurai. Thus the total number of victims go up to five. Twenty people were injured, when some persons hurled petrol bombs at the car in which they were travelling at Puliankulam in the district. The occupants belonging to the Thevar community were returning after attending the 105th birth anniversary celebrations of freedom fighter and Thevar community icon Pasumpon Muthuramalinga Thevar when they were attacked
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X