For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை, ராமநாதபுரத்தில் பந்த்.. பதட்டம், கடைகள் அடைப்பு, பஸ்கள் உடைப்பு, மக்கள் தவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று அழைப்பு விடுத்திருந்த பந்த் காரணமாக இரு மாவட்டங்களிலும் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடைகளை மூடுமாறு பல இடங்களில் ரகளை செய்துள்ளனர். பஸ்கள் பல தாக்கி சேதப்படுத்தப்பட்டன. மக்கள் பெரும் பீதியுடன் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முழு அடைப்பு போராட்டம் நடத்துவதன் எதிரொலியாக மதுரை மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவர் குருபூஜை

அக்டோபர் 30 ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு ஏராளமானோர் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றனர். அப்போது பரமக்குடி அருகே ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் சிலைமானை அடுத்த புளியங்குளத்தை சேர்ந்த 20 வாலிபர்கள் பசும்பொன் கிராமத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது ரிங்ரோடு பகுதியில் அவர்களது வாகனம் மீது சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் காரில் இருந்த டிரைவர் உள்பட 20 பேரும் படுகாயம் அடைந்து மதுரையில் உள்ள சில தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் பெரிய ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலன் அளிக்காமல் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கடையடைப்பு போராட்டம்

இந்தநிலையில் இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்தும், இதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், நீதி விசாரணை நடத்தக்கோரியும் தேவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வில்லாபுரத்தில் பஸ் மீது கல்வீச்சு

பல இடங்களில் சிலர் பஸ்கள் மீது நேற்று இரவு கல்வீசித் தாக்கி சேதப்படுத்தினர். வக்கீல் புதுதெருவில் வந்த பஸ் மீதும், பெரியார் பஸ் நிலையம், வில்லாபுரம் ஆகிய இடங்களில் தலா ஒரு பஸ் மீதும் கல் வீசப்பட்டது. இதில் கண்ணாடிகள் நொறுங்கின.

இன்று காலை தல்லாகுளம் பாலமந்திர் பள்ளிக்கூடம் அருகே சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது. இதில் பஸ் கண்ணாடி உடைந்தது.

செக்காணூரணியில் 3 பஸ்களும், சிந்துபட்டியில் ஒரு பஸ்சும், திருமங்கலத்தில் 2 பஸ்களும் சேதம் அடைந்தன. இதேபோல் விளாங்குடி, நாகமலைப் புதுக்கோட்டை பகுதிகளில் 2 பஸ்கள் மீதும் கல்வீசி தாக்கப்பட்டது.

இன்று பந்த் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் காலையில் பல டீக்கடைகள், பெட்டிக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த சிலர் கும்பலாக சென்று கடைகளை அடைக்க சொல்லி மிரட்டியபடி சென்றனர். இதனால் பதட்டம் காணப்பட்டது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் இன்று ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக, மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அறிவித்திருந்தார். இதனால் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை.

கிராமங்களுக்கு பஸ் இல்லை

மதுரையிலிருந்து மாவட்டத்தில் உள்ள எந்தக் கிராமத்திற்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை. நகர்ப் பகுதியிலும் கூட காலை 7 மணிக்கு மேல்தான் பஸ்கள் ஓடின. அதிலும் கூட கூட்டம் இல்லை. மக்கள் பயம் காரணமாக வெளியில் வரவே அஞ்சும் அளவுக்கு இருந்தது.

சர்வேயர் காலனி, புதூர், மூன்றுமாவடி, கோரிப்பாளையம், சிம்மக்கல், செல்லூர் உள்பட நகரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே ஒரு சில டீக்கடைகள் மட்டும் திறந்திருந்தன.

உசிலம்பட்டியில் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட், ஜவுளிக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ, கார், வேன்கள் ஓடவில்லை. பஸ்கள் எதுவும் ஓடாததால் உசிலம்பட்டி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர்-சாத்தூர்-ராஜபாளையம்-சிவகாசி

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி ஆகிய பகுதிகளில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சாத்தூரில் கடைகள் திறந்திருந்தன. ஆனால் தனியார் மற்றும் அரசு பஸ்கள் எதுவும் ஓடவில்லை.

கார், ஆட்டோக்களும் ஓடவில்லை. விருதுநகரில் காலை 7 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. ராஜபாளையத்தில் ஆவாரம்பட்டி, திரவுபதி அம்மன் கோவில் தெரு, சம்பந்தபுரம் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சிவகாசியில் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. டீக்கடைகள் கூட திறக்கப்படவில்லை. காய்கறி மார்க்கெட் மூடப்பட்டிருந்தது. பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.

ராமநாதபுரத்திலும் அடைப்பு

இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கமுதியில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்:

தேவர் குருபூஜையன்று நடந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பஸ்கள் ஓடவில்லை. அதிலும் குறிப்பாக கமுதி அருகே உள்ள செய்யாமங்கலத்தில் பஸ்களை சிலர் மறித்ததால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து முடங்கியது. இதனால் கமுதி-அருப்புக்கோட்டை-விருதுநகர் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

மேலும் மண்டப சாலையில் நடந்த மறியலால் ராமேஸ்வரம் பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதே போன்று சாயல்குடி, பெருநாழி, தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களிலும் மறியலால் பஸ் போக்குவரத்து முடங்கியது. இது தவிர முதுகுளத்தூர் வழித்தடத்திலும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

முதலில் தனியார் பஸ்கள் மட்டும் ஓடவில்லை. பின்னர் ஆங்காங்கே நடந்த மறியலால் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்ட அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன.

English summary
Madurai Collector Ansul Mishra has declared holiday to all Schools and Colleges in the district today. Some section of People have called for bandh in the district to protest killing of 9 people during the Thevar Guru Pujai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X