For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அன்பழகன் போட்டி': சுப.தங்கவேலன்- ரித்தீஷ் கோஷ்டிகள் நடத்திய ரத்த கலாட்டா!

By Chakra
Google Oneindia Tamil News

Ritheesh
மதுரை: மதுரையில் முன்னாள் திமுக அமைச்சர் சுப.தங்கவேலன் தாக்கப்பட்ட சம்பவத்தில் முன் ஜாமீன் கோரியுள்ள திமுக எம்பி ரித்தீஷின் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி அன்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மதுரை வந்தார். அப்போது அவரை வரவேற்பதிலேயே விமான நிலையத்தில் முன்னாள் திமுக அமைச்சர் சுப.தங்கவேலன் ஆதரவாளர்களுக்கும், எம்பியான ரித்தீஷின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ரித்தீசும் தங்கவேலனும் தங்களது காரில் ஏறுமாறு அன்பழகனை இழுக்க, கடைசியில் தங்கவேலனின் காரில் ஏறி மதுரை டி.வி.எஸ். கெஸ்ட் ஹவுசுக்கு வந்தார் அன்பழகன்.

அங்கேயும் ரித்தீஷ்-தங்கவேலன் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் சிலருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டு கெஸ்ட் ஹவுசிலேயே ரத்தம் கொட்டியது.

இதையடுத்து அன்பழகனை பசும்பொன்னுக்கு யார் அழைத்துச் செல்வது என்பதில் ரித்தீஷ் தரப்புக்கும் தங்கவேலன் தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் தொடங்கியது. இந்த மோதல் முற்றி, தங்கவேலன் ஆதரவாளர்களுக்கு ரத்தம் கொட்டும் அளவுக்குத் தாக்குதல் நடந்தது.

இதில் மாவட்டப் பிரதிநிதி தங்கராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்துக்கு மத்தியில் தங்க​வேலன், தனது காரில் அன்பழகனை பசும்பொன்னுக்கு அழைத்துப் போனார். ரித்தீஷ் ஆதரவாளர்கள், பசும்பொன்னுக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தனர்.

அன்பழகன், முன்னாள் திமுக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., தங்கம் தென்னரசு, தங்கவேலன் ஆகியோர் தேவர் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ரித்தீஷ் ஆதரவாளர்கள் தங்கவேலனையும் அவரது ஆதரவாளர்களையும் உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.

இதனால் மீண்டும் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் தங்கவேலன் அஞ்சலி செலுத்துவதற்காகக் கொண்டு வந்த மாலையை ரித்தீசின் ஆட்கள் பறிக்க, பூக்கள் எல்லாம் கொட்டிப் போய் கடைசியில் வெறும் நார் மட்டுமே மிஞ்சியது.

இதையடுத்து அன்பழகனை அங்கிருந்து பத்திரமாக தனது காரில் அழைத்துக் கொண்டு அருப்புக்கோட்டை சென்றார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அங்கு தனக்குச் சொந்தமான மில்லின் மாடியில் உள்ள அறையில் அன்பழகனுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது.

அங்கேயும் தங்கவேலன் ஆதரவாளர்களும், ரித்தீஷ் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டனர். இதில் மில்லே ரணகளமானது. மோதலில் தங்கவேலனின் ஆதரவாளர்கள் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பதிலுக்கு ரித்தீஷக்குச் சொந்தமான கார் உட்பட 7 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். தான் ஓடி வந்து இரு தரப்பினரையும் சத்தம் போட்டு, மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

பின்னர் இவர்களை நம்பாமல் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனே தனது காரில் அன்பழகனை மதுரை விமான நிலையம் வரை வந்து சென்னைக்கு பத்திரமாக விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

இந்த மோதல் தொடர்பாக தங்கவேலன் ஆதரவாளர்கள், ரித்தீஷ் உள்ளிட்ட 5 பேர் மீது மதுரை போலீஸில் புகார் செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரித்தீஷ் எம்.பி மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கைதாகாமல் தப்பிக்க ரித்தீஷ் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி நாளைக்கு (8ம் தேதி) தள்ளி வைத்துள்ளார்.

English summary
DMK MP Ritheesh who was among three accused booked by police in a case related to a clash between two groups in the presence of party general secretary K Anbazhagan at Madurai. Following which Ritheesh has filed a preventive bail petition in court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X