For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி Vs சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு: கருணாநிதியை சமாதானப்படுத்த வந்த ப.சிதம்பரம்!

By Chakra
Google Oneindia Tamil News

Chidambaram with Karunanidhi
சென்னை: 2ஜி விவகாரத்தில் மத்திய அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை சமாதானப்படுத்தி சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாவுக்கு ஆதரவு கோரும் முயற்சிகளில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை களமிறக்கியுள்ளது காங்கிரஸ்.

நேற்று முன்தினம் மாலை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இது குறித்து ப.சிதம்பரத்திடம் கேட்டதற்கு, இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

ஆனால், நாடாளுமன்றத்தின் நவம்பர் 22ம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு மசோதா உள்பட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

இதில் நேரடி அன்னிய முதலீடு கொள்கைக்கு திமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக எதிர்க் கட்சிகள் நாடு தழுவிய அளவில் பந்த் நடத்தியபோது அதை ஆதரித்து காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது திமுக.

இந் நிலையில் மம்தா பானர்ஜி கூட்டணியை விட்டுப் போய்விட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு மசோதாவை நிறைவேற்ற திமுகவின் ஆதரவு காங்கிரசுக்கு மிக மிக அவசியமாகியுள்ளது.

இதனால் திமுகவை சமாதானப்படுத்தி ஆதரவைப் பெறவே கருணாநிதியை சிதம்பரம் சந்தித்தாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் திமுக விழுப்புரத்தில் தனி ஈழம் கோரும் டெசோ மாநாட்டை பெரிய அளவில் நடத்த திட்டமிட்ட போதும் கருணாநிதியை சந்தித்தார் சிதம்பரம். இதையடுத்தே அந்த மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டது. மேலும் அதில் தமிழ் ஈழம் கோரிக்கை முன் நிறுத்தப்படாமல் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு கோரிக்கை மட்டுமே முன் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி-சிதம்பரம் சந்திப்புக்குப் பின்னரே டெசோ மாநாட்டை அடக்கி வாசித்தது திமுக.

இந் நிலையில் இப்போதும் கூட அன்னிய முதலீடு உள்பட முக்கிய மசோதாக்களுக்கு திமுகவின் ஆதரவை பெறுவது தொடர்பாகவே சிதம்பரம் கருணாநிதியுடன் பேசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் சமீபத்தில் கூடங்குளம் விஷயத்தில் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி அதிமுகவுக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் பேச கடுப்பான கருணாநிதி, நாராயணசாமியை அறிக்கை மூலம் வறுத்தார்.

2ஜி விவகாரத்திலும் மத்திய அரசின் நடவடிக்கைகளால் திமுக இன்னும் கடுப்பாகவே உள்ளது. இதனால் தான் மத்திய அமைச்சரவையில் உள்ள இரு கேபினட் பதவிகளை நிரப்பக் கூட திமுக முன்வரவில்லை.

2ஜி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், 2ஜி வழக்கை பாதிக்கும் வகையில் பிற நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சமீபத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிற நீதிமன்றங்களில் நடக்கும் 2ஜி வழக்குகளுக்கு தடை விதித்தது. இது கனிமொழிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. 2ஜி வழக்கிலிருந்து கனிமொழியை விடுவித்து விடலாம் என்ற திமுகவின் திட்டத்துக்கு சிபிஐ தாக்கல் செய்த மனு பெரும் பாதிப்பாக அமைந்துவிட்டது.

இந்த விவகாரத்தில் சிபிஐ தன்னிச்சையாக செயல்பட்டிருக்காது என்றே திமுக கருதுகிறது. மத்திய அரசு சொல்லியே இதை சிபிஐ செய்திருக்கும் என்று திமுக கருதுகிறது. இதன்மூலம் திமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து, தனக்குத் தேவையான ஆதரவை பெறுவது மத்திய அரசின் நோக்கமாக இருக்கலாம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

அதே நேரத்தில் மத்திய அரசுக்கு வேறு வகையில் நெருக்கடி தரவே டெசோ, அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு என்று தனது வேலையைக் காட்டி வருகிறது திமுக.

இந்தக் கோபதாபங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் விருந்தளித்தார். ஆனால், அந்த விருந்தில், திமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இதனால் அன்னிய முதலீடு தவிர, 2ஜி, நாராணசாமி விவகாரத்திலும் கருணாநிதியை சமாதானப்படுத்தவே சிதம்பரம் சந்தித்தார் என்று தெரிகிறது.

கருணாநிதியை சிதம்பரம் சமாதானப்படுத்தியிருந்தால், அடுத்தகட்டமாக மத்திய அரசின் நடவடிக்கைகள், திமுகவுக்கு சாதகமாக இருக்கலாம்...

அதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!

English summary
Union Finance Minister P Chidambaram on Monday met DMK chief M Karunanidhi at the latter's residence amid speculation that relations were souring between Congress and its UPA ally. The leaders spoke over various issues for over 30 minutes although the DMK chief remained non-committal, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X