For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் இனப் படுகொலையை தடுக்க ஐ.நா. தவறிவிட்டது: சார்லஸ் பெட்ரி விசாரணை குழு குற்றச்சாட்டு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் இனப் படுகொலையை தடுக்க ஐ.நா. தவறிவிட்டது என்று ஐ.நாவின் முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையிலான விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கடமையிலிருந்து ஐ.நா. அதிகாரிகள் தவறி விட்டது தொடர்பாக ஐ.நா. சார்பில் நடத்தபட்ட உள் விசாரணை அறிக்கையின் சில பகுதிகள் வெளியாகியிருக்கின்றன.

 Sri Lankan civilians during final bloody stages of civil war
இலங்கையில் இருந்த ஐ.நா. குழுவினர் ஈழத் தமிழர்களின் உயிர்களை எவ்வளவு துச்சமாக மதித்தனர் என்பது தொடர்பாக அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் தருவதாக உள்ளன.

"இலங்கையில் பணியிலிருந்த ஐ.நா. அதிகாரிகள் அங்குள்ள தமிழர்களை காக்கும் கடமையிலிருந்து தவறி விட்டனர்; 2008ம் ஆண்டில் போர் உச்சகட்டத்திலிருந்த போது, வடக்கு மாநிலத்திலிருந்து வெளியேற வேண்டாம் என ஈழத் தமிழர்கள் கண்ணீர் மல்க மன்றாடிய போதும், ஐ.நா. அதிகாரிகள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணத்துடன் அங்கிருந்து வெளியேறி விட்டனர்; அவர்கள் அங்கேயே இருந்திருந்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை ஓரளவாவது தடுத்திருக்க முடியும்; இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அங்கு என்ன நடக்கிறது என்பதை உலகிற்கு தெரிவித்து, இனப் படுகொலையை தடுக்க ஐ.நா. தவறிவிட்டது'' என்று ஐ.நாவின் முன்னாள் அதிகாரி சார்லஸ் பெட்ரி தலைமையிலான விசாரணைக் குழு அதன் அறிக்கையில் சாட்டையடி கொடுத்திருக்கிறது.

இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த போதே அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களை தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்டோர் வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வரும் தகவல் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மேரி கால்வின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த ஐ.நா. உயரதிகாரி விஜய் நம்பியார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர்கள் சர்வதேச விதிகளின்படி நடத்தப்படுவார்கள் என்று விஜய் நம்பியார் உறுதியளித்திருந்த நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதே இலங்கை அரசுக்கு ஐ.நா. மற்றும் இந்திய அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டது அம்பலமானது. இந்த நிலையில் ஐ.நாவின் தவறு இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உலகில் அமைதியை நிலைநிறுத்தி, மக்களுக்கு பாதுகாப்பு அளித்தல், மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் பாதுகாத்தல், சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபடுதல் ஆகியவை தான் ஐ.நா. அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம். ஆனால், ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தக் கடமைகளில் ஒன்றைக் கூட ஐ.நா. செய்யவில்லை. மொத்தத்தில் உலகின் மனசாட்சியாக செயல்படவேண்டிய ஐ.நா. இலங்கை மற்றும் அதற்கு ஆதரவாக செயல்பட்ட வல்லரசுகளின் கைப்பாவையாக செயல்பட்டிருக்கிறது என்பது இந்த அறிக்கையின் மூலம் உறுதியாகியிருக்கிறது.

லிபியா, சிரியா போன்ற எண்ணெய் வள நாடுகளில் ஏதேனும் நடந்தால் மட்டும் அங்கு ஆதிக்க நாடுகளின் பிரதிநிதியாக தலையிடும் ஐ.நா அப்பாவி தமிழர்கள் விஷயத்தில் மட்டும் கண்ணை மூடிக் கொண்டு இருந்தது கண்டிக்கத்தக்கது.

ஐ.நா. மீது உலக மக்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால், இலங்கை விவகாரத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் நோக்குடன், இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை நடத்துவதற்கு ஆணையிட வேண்டும். இலங்கை ஆட்சியாளர்களின் கொடூரப் பிடியிலிருந்து ஈழத் தமிழர்களை காக்கும் நோக்குடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் அமைத்துத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

ஐ.நாவின் அறிக்கை கிடைத்த பிறகே நடவடிக்கை-அகமது:

இந் நிலையில் இலங்கை போரின் போது ஐ.நா. அதிகாரிகள் அலட்சியமாக இருந்தது குறித்து ஐ.நாவின் உள்விவகாரத் துறையின் அறிக்கை முழுமையாகக் கிடைக்கவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அகமது கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர் பிரச்சனையில் சரியான நேரத்தில் இந்தியா குரல் கொடுத்துள்ளது. ஐ.நாவின் அறிக்கை முழுமையாகக் கிடைத்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

English summary
The United Nations failed to protect civilians in the final months of Sri Lanka's civil war, a leaked draft of a highly critical internal UN report has revealed. "Events in Sri Lanka mark a grave failure of the UN," it concluded. According to the report, the government and Tamil rebels have been accused of war crimes in the brutal conflict, which ended in May 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X