For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்- கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: அண்ணாமலைப் பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு பல்கலைக் கழக அலுவலர்களையும், மாணவ மாணவியரையும் காப்பாற்றுவதற்கு ஆவன செய்ய முன் வரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை

கேள்வி: கழக ஆட்சியில் வழங்கப்பட்ட அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்கிறார்களே?

கருணாநிதி: திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது, ஆதி திராவிட மக்களுக்குள், அருந்ததியினர் சமூக மக்கள் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால், ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் இருந்து 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 27-11-2008 அன்று கூடிய தமிழக அமைச்சரவையின் முடிவுப்படி ஆணையிடப்பட்டு, 2009ஆம் ஆண்டில் "தமிழ்நாடு அருந்ததியர்கள் (தனியார் கல்வி நிலையங்கள் உள்ளடங்கலான கல்வி நிலையங்களில் இடங்களை மற்றும் அரசின் கீழ் வரும் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டிற்குள்ளாக தனி ஒதுக்கீடு செய்தல்) சட்டம் இயற்றப்பட்டு, 29-4-2009இல் இது தொடர்பான விதிகள் உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் மதுரை உயர் நீதிமன்றத்தில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர். இந்த வழக்கில் தமிழக அரசு போதுமான அறிவுரைகளை அரசு வழக்கறிஞருக்கு வழங்கி, வலிமையான வாதங்களை முன்வைத்து, தாழ்த்தப்பட்டோருள் மிகவும் தாழ்த்தப்பட்டோராகக் கடைநிலையில் இருந்து வரும் அருந்ததியரைக் கைதூக்கிவிட, கழக ஆட்சியில் வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டையும், சமூக நீதியையும் காப்பாற்ற வேண்டியது கடமை என்பதை நினைவுபடுத்துகிறேன்.

இட ஒதுக்கீட்டிற்கான பஞ்சாப் வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்திலே உள்ளது. அந்த வழக்கில் என்ன தீர்ப்பு சொல்லப்படுகிறதோ, அதே தீர்ப்பு அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கும் பொருந்தும் என நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு வழக்கு வரவுள்ளது.

எனவே கழக அரசால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுதானே என்று ஏனோதானோ என்று இருந்து விடாமல்; உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் பஞ்சாப் வழக்கில் தமிழக அரசும் தன்னை ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு, தமிழகத்திலே அருந்ததியர் இட உள் ஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதற்கு ஆவண செய்ய வேண்டுமென்று இந்த நேரத்தில் வலியுறுத்துகிறேன்.

கேள்வி: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக இரண்டு மூன்று நாட்களாகச் செய்தி வந்து கொண்டிருக்கிறதே?

கருணாநிதி: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு தமிழகத்தில் ஒரு சிறப்பான பெயர் உண்டு. மூத்த பல்கலைக் கழகம் என்பது மட்டுமல்லாமல் திராவிட இயக்கத்தின் பல தலைவர்கள் உயர் கல்வி பெற்ற இடமும் அதுதான். எனவே அந்தப் பல்கலைக் கழகத்திற்கு என்று ஒரு மதிப்பு உண்டு.

அந்தப் பல்கலைக் கழகத்தில் நிதிச் சுமை - நிதி நெருக்கடி - என்ற காரணத்தைக் காட்டி அங்கு பணிபுரிவோர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்லது அவர்கள் வாங்கும் சம்பளத்தின் அளவைக் குறைப்பது போன்ற யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையிலேயே - இந்த யோசனைகளை அறிந்த பல்கலைக்கழக அலுவலர்கள் போராடி வந்தபோது பல்கலைக் கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டிருப்பதாகச் செய்தி வந்துள்ளது.

அப்படி கால வரையறையின்றி மூடப்பட்டிருப்பதால், பல்கலைக் கழக அலுவலர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதோடு, பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வியும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே அதிமுக அரசு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் என்பது ஏதோ வேறு மாநிலத்திலே இருப்பதைப் போல எண்ணிக் கொண்டு இந்தப் பிரச்சினையிலே அக்கறையற்ற நிலையில் இருந்து, அந்தப் பல்கலைக் கழகத்தில் போராடிக் கொண்டிருப்போர், அந்தத் துறையின் அமைச்சரைச் சந்தித்து தங்கள் குறைபாடுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதில் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு பல்கலைக் கழக அலுவலர்களையும், மாணவ மாணவியரையும் காப்பாற்றுவதற்கு ஆவன செய்ய முன் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

உடனே திறக்க வேண்டும்- கி.வீரமணி

இதேபோல திராவிட கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில்,

எங்களைப் போன்ற ஒடுக்கப்பட்டோர், எளியோர்கள், கல்விக் கண்ணைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை காலவரையறையற்ற முறையில் மூடி, தேர்வுகளைத் தள்ளி வைத்திருப்பது குறித்தும் மிகுந்த வேதனையடைகிறோம்.

அந்தோ பரிதாபம்! 80 ஆண்டு நிறுவனத்திற்கு இப்படி ஒரு அவலப் போக்கா? சில ஆண்டுகளுக்கு முன்புகூட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இப்படி மூடப்பட்டு பல மாதங்களுக்குப் பின்னரே திரும்பவும் அது திறக்கப்பட்டது. அதன் பிறகு கலை அறிவியல் துறையின் பட்டப் படிப்புக்கான பகுதிகளையே மூடினர்.

இப்போது மீண்டும் வரைமுறையற்ற நியமனங்கள் - நிதி நிலைமை மோசம் என்ற காரணம் காட்டி - திடீரென்று மூடப்பட்டு, விடுதிகளைக் காலி செய்யும்படிச் செய்து, பல்லாயிரக்கணக்கில் பணியாற்றுவோர் தங்களுக்குரிய உத்தரவாதம் தேவை என்பதை வலியுறுத்தி நியாயமான அறப்போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். புகழ்பெற்ற ஒரு பல்கலைக் கழகத்தின் நிலை இப்படியா தாழ்ந்து போக வேண்டும்? இதற்கு உடனடியாக பரிகாரம் தேடி பல்கலைக்கழகம் திறக்கப்பட்டு இயங்க வேண்டும்.

பணியாற்றும் சங்கத்தவர்களின் பல குற்றச்சாற்றுகளில் சாரமில்லை; சத்தில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க உடனடியாக முத்தரப்புப்பேச்சு வார்த்தையை முதல் கட்டமாக நடத்திட தமிழக அரசின் உயர் கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டியது அவசர - அவசியமாகும்.

தமிழக அரசின் உயர்கல்வி அதிகாரிகள், பல்கலைக் கழக நிருவாகத்தினர், பணியாற்றும் பேராசிரியர்கள் - ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இதுபற்றி கலந்துரையாடி, சுமுகமான ஒரு தீர்வை எட்டி, பல்கலைக் கழகம் தொடர்ந்து செயல்பட வைக்க முனைய வேண்டும்.

அதில் தீர்வு ஏற்படவில்லையானால் அடுத்த கட்ட நேரடி நடவடிக்கைகள் எந்த ரூபத்தில் அமைய வேண்டும் என்பதைப்பற்றி அரசு முடிவு செய்யலாம்! மாணவர்களின் பெற்றோர்கள், பணிபுரிவோர் ஆகியோரின் பொதுமை சார்ந்த நலத்திற்கே முன்னுரிமை தந்து பிரச்சினையை அணுக வேண்டும் என்று கூறியுள்ளார்.

English summary
DMK chief Karunanidhi has urged the TN govt to intervene in Annamalai university issue and solve the problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X