For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலித்துகளுக்கு எதிராக 'பெரும்பான்மை' ஜாதியினர் கை கோர்க்கும் அபாயம்!

Google Oneindia Tamil News

Dharmapuri violence
கோவை: தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாளர்கள், வன்னியர்கள், தேவர்கள், நாடார் சமுதாயத்தினரை சாதி வெறியர்கள் போல சித்தரித்துப் பேசுவது கண்டனத்துக்குரியது என்று கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் பெரும்பான்மை சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் இந்த பேரவை கூறியுள்ளது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. ஏற்கனவே சாதி அமைப்புகளை ஒருங்கிணைத்து லோக்சபா தேர்தலை சந்திக்கப் போவதாக வன்னிய சமுதாயத்தை பெரிதும் நம்பியுள்ள பாமகவின் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கூறி வரும் நிலையில் இந்த கவுண்டர் பேரவையின் அறிக்கை பல விஷயங்களை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

தர்மபுரி கலவரத்தில் அனைவரும் தலித் மக்களுக்கு ஆதரவாக பேசுவதை இந்த அமைப்பு கண்டித்துள்ளது. இதுகுறித்து பேரவை மாநிலத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தர்மபுரி மாவட்டம் செல்லன்கொட்டாய் கிராமத்தில் நாகராஜ் மகள் இளவரசனை கலப்புத் திருமணம் செய்ததன் விளைவு நாகராஜின் உயிர் அநியாயமாகப் போய்விட்டது.

நாடெங்கிலும் எல்லோரும் ஒருதலைப்பட்சமாக தலித் ஆதரவு நிலையில் பேசி பெரும்பாண்மை மக்களின் குடும்பம் பற்றி கவலைப்படாமல், சாதி வெறியர்கள் போல சித்தரிக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இதுபோன்ற கலவரங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை. வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை.

ஆனால் தருமபுரியில் நடந்த சம்பவத்திற்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதை யாரும் ஆராயவே இல்லை. தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர்களும், வடமாவட்டங்களில் வன்னியர்களும், தென் மாவட்டங்களில் தேவர், நாடார் மற்றும் பிற்பட்ட சமுதாய மக்கள் பெரும்பாண்மையாக இருந்தும் அரசியல் ரீதியாக பிரிந்து நிற்பதால் அவர்களை திராவிட இயக்கங்கள் மிகச் சரியாக நான்கு மாடுகளை ஒரு சிங்கம் திட்டமிட்டு பிரித்து கொன்றது போல எங்களின் நியாயங்கள் தண்டிக்கபடுகிறது.

தலித் ஆதரவு என்ற பெயரில் பெரும்பாண்மைச் சமுதாயத்தை அவமானப் படுத்துவதை நிறுத்துங்கள். சட்டப் பாதுகாப்பு என்ற பெயரில் கொங்கு வேளாளர், வன்னியர், தேவர், நாடார், முதலியார், பிராமணர், பிள்ளைமார்கள், உடையார், செட்டியார், சைவ வேளாளர் உள்ளிட்ட பல சமுதாயங்கள் தொடர்ந்த சொல்லனா துயரங்களை அனுபவித்து வருகிறது.

எனவே அரசியலுக்காகவும் ஓட்டுக்காகவும், எங்களை பயன்படுத்தியவர்கள் எங்களுக்கு அநீதி இழைக்கப் படும்போது மட்டும் ஊமையாகிவிடுகிறார்கள். இனியும் நாங்கள் சாதி-மதக் கலப்புத் திருணங்களை அனுமதிக்க மாட்டோம். அரசியலுக்காக ஏமாறவும் மாட்டோம்.

கொங்கு இனம் மட்டுமல்ல இதனால் பாதிக்கப் படும் சமூகங்கள் எல்லோரும் இணைவோம் என்று கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மணிகண்டன்.

மணிகண்டனின் இந்தப் பேச்சு நிச்சயம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறும் என்றே தெரிகிறது. ஜாதிய அமைப்புகள் கை கோர்க்க முனைவது தமிழகத்திற்கு நல்லதா, கெட்டதா என்பதுதான் தெரியவில்லை. குறிப்பாக தலித் மக்களுக்கு எதிரான கருத்துக்களுடன் இவர்கள் இணையும்போது அது சட்டம் ஒழுங்குக்குப் பெரும் சவாலாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லை.

English summary
A Kongu Vellala Goundars outfit has called for 'caste unity' among 'upper castes'. The association has condemned the society to blame the 'majority' communities for the caste clashes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X