For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக இப்படி கோஷம் போட்டால் என்ன?!

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: வரும் மக்களவைத் தேர்தலை கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் தலைமையில் சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் அவரை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவதற்கான முதல் வேலையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆரம்பித்துள்ளார்.

பழசும் புதுசும் இணைந்த டீம்..

பழசும் புதுசும் இணைந்த டீம்..

இந்தத் தேர்தலை சந்திக்க ராகுல் காந்திக்கு உதவ மூத்த தலைவர்கள் மற்றும் புதிய தலைவர்கள் அடங்கிய குழுவை உருவாக்கித் தந்துள்ளார் சோனியா காந்தி. அகமது பட்டேல், ப.சிதம்பரம், ஏ.கே.ஆண்டனி, திக்விஜய் சிங், ஜனார்தன் திரிவேதி, வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித், மதுசூதன் மிஸ்த்ரி என மூத்த தலைவர்கள் இந்தக் குழுவில் இடம் பிடித்துள்ளனர்.

காங்கிரஸ் வரலாற்றிலேயே தேர்தலுக்கு முன் இப்படி ஒரு டீம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இளம் தலைகள்..

இளம் தலைகள்..

இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் மணீஷ் திவாரி, முகுல் வாஸ்னிக், ராகுலுக்கு மிக மிக நெருக்கமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஜிதேந்திர சிங், தீபிந்தர் ஹூடா ஆகியோரும் இந்த டீமில் இடம் பிடித்துள்ளனர்.

தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு ஒரு டீம்...

தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு ஒரு டீம்...

தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கூட்டணிக்கு கட்சிகளை இழுத்து வரவும், இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தம் குறித்துப் பேசவும் அமைக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி தலைமையிலான குழு. இந்தக் குழுவில் வீரப்ப மொய்லி இடம் பிடித்திருப்பது திமுகவுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும். மொய்லி திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவர்களில் ஒருவர்.

மாநில அளவில் சிறிய, பெரிய கட்சிகளை காங்கிரஸ் கூட்டணிக்குள் இழுத்து வர வேண்டியது இவர்களின் பொறுப்பாகும்.

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி டீம்?...

தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி டீம்?...

தேர்தலுக்குப் பின் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் கட்சிகளை இழுத்து வந்து ஒட்டு பிளாஸ்திரி போட்டு, புதிதாக ஒரு கூட்டணியை அமைத்து, ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கும் வேலையை சோனியா காந்தியே நேரடியாக மேற்கொள்வார் என்று தெரிகிறது. அந்த முயற்சிகளில், இப்போதைய குழுக்களில் இடம் பெற்றுள்ள பெருந்தலைகள் சோனியாவுக்கு உதவலாம்.

மீண்டும் ஜெய்ராம் ரமேஷ்...

மீண்டும் ஜெய்ராம் ரமேஷ்...

இப்போது அமைக்கப்பட்டுள்ள முக்கியமான ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றிருக்கும் ஜெய்ராம் ரமேஷைத் தான் பாஜக கொஞ்சம் மிரட்சியோடு பார்க்கிறது. அதற்குக் காரணம், இந்த ஆசாமியின் மூளை.

தமிழ் ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்த இவர் கர்நாடக மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்தவர். மும்பை ஐஐடியில் பி.டெக் கெமிக்கல் என்ஜினியரிங் படித்த இவருக்கு பொருளாதாரத்தில் தான் ஆர்வம் அதிகம்.

அமெரிக்காவில் பொருளாதாரம்..

அமெரிக்காவில் பொருளாதாரம்..

இதனால் அமெரிக்காவின் மசாசூஸெட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் தொழில்நுட்ப கொள்கை, பொருளாதாரம், நிர்வாகம், பொறியியல் என அனைத்தையும் கலந்து ஒரு இன்டர்-டிசிப்ளினரி கோர்ஸை படித்தவர்.

இதையடுத்து உலக வங்கி, திட்டக் கமிஷன், மத்திய தொழில்துறையில் அதிகாரியாக பணியாற்றிவிட்டு, மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது அவரது துறையிலும் வேலை பார்த்தவர். இவ்வளவு படித்திருந்தாலும் கிராமப்புற வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என திடமாக நம்புபவர்.

ஏன் இவ்வளவு பில்ட் அப்?

ஏன் இவ்வளவு பில்ட் அப்?

அது சரி ஜெய்ராம் ரமேஷ் பற்றி ஏன் இவ்வளவு பில்ட் அப் என்று நீங்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது. கடந்த 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை பாஜக மிக நம்பிக்கையோடு எதிர் கொண்டது.

காரணம், இந்தியா ஒளிர்வதாக அவர்களே நினைத்துக் கொண்டு 'India Shining' என்று ஒரு பிரச்சாரத்தை அவித்துவிட்டிருந்தனர். மக்களிடையே பாஜக ஆட்சியின் விளைவால் 'Feel good' factor நிலவுவதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'Feel great' என்ற நிலைக்கு மக்களை கொண்டு செல்வோம் என்றும் பிரச்சாரத்தை நாலா திசையிலும் அலற விட்டனர்.

பிரமோத் மகாஜன் Vs ஜெய்ராம் ரமேஷ்:

பிரமோத் மகாஜன் Vs ஜெய்ராம் ரமேஷ்:

இந்த 'India Shining', 'Feel good' factor, 'Feel great' எல்லாமே மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் கண்டுபிடிப்புகள். இதை எப்படி இந்தியில் மொழி பெயர்ப்பது என்று கூட தெரியாமல் வட நாட்டு பாஜக தலைவர்கள் தவித்துக் கொண்டிருந்தது வேறு கதை. ஆனால், பல நூறு கோடிகளை வாரி இறைத்து டிவி, பத்திரிக்கைகள் என எல்லா பக்கமும் 'India Shining' பிரச்சாரத்தை மத்திய பாஜக அரசு அவிழ்த்துவிட்டிருந்தது. இதனால் நடுநிலையாளர்கள் கூட உண்மையிலேயே இந்தியா ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறதோ என்று நம்பும் நிலையை இந்த விளம்பரங்கள் உருவாக்கியிருந்தன.

கசங்கிக் கிடந்த காங்கிரஸ்..

கசங்கிக் கிடந்த காங்கிரஸ்..

அப்போது காங்கிரசின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்ததால் சோனியா மீதான மரியாதை அதிகரித்திருந்த காலம். ஆனாலும் வாஜ்பாய் என்ற பெருந்தலைவருக்கு நிகராக காங்கிரசில் யாரும் இல்லாத சூழல்.

இந்த நிலையில் தான் சோனியா Poll Strategy Panel எனப்படும் தேர்தலுக்கான திட்டங்களை வகுக்க ஒரு குழுவை அமைத்தார். அப்போது அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருந்த ஜெய்ராம் ரமேஷை அதற்கு தலைவராக்கினார்.

காங்கிரசின் கை..

காங்கிரசின் கை..

ஜெய்ராம் ரமேஷ் தனது டெக்னாலஜி, பொருளாதார அறிவுடன் கிராமப் புற சிக்கல்களையும் மனதில் வைத்துக் கொண்டு காங்கிரசின் தேர்தல் பிரச்சாரத்துக்கான முஸ்தீபுகளைச் செய்தார். பாஜகவின் 'India Shining' கோஷத்துக்கு போட்டியாக அவர் உருவாக்கிய பதில் கோஷம் தான் ''காங்கிரஸின் கை எப்போதும் சாதாரண மக்களுடன்!'' (''congress kak hat aam aadmi kee sath'')

மிகச் சாதாரணமான கோஷம் தான்...

மிகச் சாதாரணமான கோஷம் தான்...

'India Shining' கோஷத்துக்கு முன் இது மிகச் சாதாராண கோஷம் தான். ஆனால், விலைவாசி உயர்வாலும் ஏராளமான பிற பிரச்சனைகளாலும் நொந்து போய் இருந்தவர்களுக்கு 'India Shining' என்ற வார்த்தையே பெரும் கோபத்தைத் தந்தது மட்டும் நிஜம். அவ்வாறு கசுப்பில் இருந்தவர்களுக்கு ஆறுதல் தருவது மாதிரி இருந்தது ஜெய்ராம் ரமேஷ் உருவாக்கிய காங்கிரஸ் கோஷம்.

இதனால் அந்தத் தேர்தலில் ஒட்டுமொத்த கிராமப் பகுதிகளும் காங்கிரசுக்கே வாக்களிக்க, பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சிக்குத் திரும்பியது காங்கிரஸ்.

''இன்டியா சைனிங்கு''...

''இன்டியா சைனிங்கு''...

அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு மாபெரும் தோல்வி ஏற்பட்டது. இதை அப்போது ''villagers revolution'' என்று வர்ணித்தன சர்வதேச ஊடகங்கள்

ஆந்திராவில் ஹைதராபாத்தில் மட்டும் பாலங்கள் கட்டிவிட்டு கிராமப் பகுதிகளை நிர்கதியாக விட்ட சந்திரபாபு நாயுடுவும் பாஜக கூட்டணியில் இருந்தபடியே 'இந்தியா சைனிங்கு' என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்க, அவரது கட்சிக்கு அந்தத் தேர்தலில் விழுந்த ஆப்பு இன்று வரை தொடர்கிறது.

தமிழகத்தில்...

தமிழகத்தில்...

தமிழகத்தில் இந்த 'இந்தியா ஒளிர்கிறது' கோஷமோ அல்லது 'காங்கிரஸின் கை எப்போதும் சாதாரண மக்களுடன்' கோஷமோ பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்த நேரம். கூடவே இப்போது மின்தடை மாதிரி பெரும் குடிநீர் பஞ்சம் மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடியது. இந்த குடிநீர் பஞ்சத்தையே காரணமாக வைத்து சரியான கூட்டணியையும் உருவாக்கி அதிமுகவை 40:0 என்ற விகிதத்தில் தோற்கடித்தார் கருணாநிதி.

ஆனால், வட இந்தியாவில் பாஜகவை தோற்கடித்தது இந்தியா ஒளிர்கிறது கோஷமும் ஜெய்ராமின் பதில் கோஷமும் தான் என்பதை பாஜகவே பின்னர் ஒப்புக் கொண்டது.

இந்த தேர்தலில் என்ன கோஷமோ?

இந்த தேர்தலில் என்ன கோஷமோ?

இந் நிலையில் தான் மீண்டும் புதிய கோஷம் எழுத வந்துள்ளார் ஜெய்ராம். இந்தத் தேர்தலில் என்ன கோஷம் போடப் போகிறாரோ தெரியவில்லை. ஆனால், மத்திய அரசில் நடந்துள்ள ஊழல்களை மனதில் வைத்துப் பார்த்தால், பாஜகவுக்கு நாம் ஒரு 'கோஷ யோசனை' தரலாம்.

''அடுத்த கைக்கே தெரியாமல் இன்னொரு கையால் வாங்கிய காங்கிரஸ்''!.

இது எப்டி இருக்கு?

English summary
In an indication that Rahul Gandhi will be the face of the Congress in the 2014 general elections, the party on Thursday appointed him as the head of its election cooridnation committee. In his new role, the Gandhi scion will oversee forming pre-poll alliances, preparing the manifesto and formulating the party’s communication strategies. Congress heavy weights like Ahmed Patel, Janardan Dwivedi, Jairam Ramesh and Madhusudan Mistry have also found their place in the panel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X