For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளிப் பேருந்துகளுக்கான புதிய விதிமுறைகளுக்கு தடைகோரிய வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக டிசம்பர் 12ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்குலேசன் சங்க பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

"சேலையூரில் சீயோன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி, பள்ளி பேருந்து ஓட்டையில் தவறி விழுந்து உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனியார் பள்ளி வாகனங்களை முறைப்படுத்த சிறப்பு விதிகளை வகுக்கும்படி தமிழக அரசுக்கு நீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து தனியார் பள்ளி வாகனங்ககளை முறைப்படுத்துவதற்கு 21 கட்டுப்பாடுகளை விதித்து கடந்த அக்டோபர் 30-ம் தேதி தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள 8 வகையான கட்டுப்பாடுகளை நிறைவேற்றுவது நடைமுறை சிக்கல் கொண்டது.

தரையில் இருந்து 250 முதல் 300 மில்லிமீட்டர் உயரத்தில் படி அமைக்கப்பட வேண்டும் என்று விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கிராமப்புற சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் பஸ் படிக்கட்டுகள் இடித்து சேதமடையும்.ஓட்டுனருக்கான தனி இரும்புக் கம்பி தடுப்புகளை புதிய விதியின்படி அமைத்தால், ஆபத்து காலங்களில் மாணவர்களை உடனடியாக காப்பாற்ற முடியாமல் போய்விடும்.

மாணவர்கள் தங்கள் பைகளை வைப்பதற்காக சீட்களின் கீழ் அரங்குகள் அமைக்க வேண்டும் என்ற விதியை உடனடியாக அமல்படுத்த முடியாது. மே மாத விடுமுறையில் அதுபோன்ற அரங்குகளை அமைக்க அவகாசம் அளிக்க வேண்டும். அல்லது, புதிதாக வாங்கும் பள்ளிக்கூட பஸ்களுக்கு அந்த விதியை அமல்படுத்தலாம்.

வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை வைப்பதால் அதிக எரிபொருள் செலவும், வீணான செலவும்தான் ஏற்படும். ஏற்கனவே வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை பயன்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டுள்ளது.

சான்று பெற்ற நடத்துனரைத்தான் பள்ளிக்கூட பஸ்களில் நியமிக்க வேண்டும் என்று புதிய விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சான்று பெற்ற நடத்துனர்கள் கிடைப்பதில்லை. எனவே விதியை மாற்றி, நடத்துனருக்குப் பதிலாக உதவியாளர்களை நியமித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

பள்ளிக்கூட பஸ்களிலும், வேன்களிலும் பெரிய அளவில் அவசர வழி அமைக்க வேண்டும் என்று புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. அவ்வளவு பெரிய அவசர வழியை அமைக்க நடைமுறை சாத்தியமில்லை.

3 மாதங்களுக்கு ஒருமுறை, அதாவது ஆண்டுக்கு 4 முறை தகுதிச் சான்றிதழ் (எப்.சி.) பெற வேண்டும் என்ற புதிய விதியை நீக்க வேண்டும். சிறப்பு புலனாய்வுக் குழு, தவறுகளை கண்டுபிடித்து எப்போது வேண்டுமானாலும் அதை ரத்து செய்யலாம் என்ற விதியை நீக்க வேண்டும்.தற்போதுள்ள விதிகள் நடைமுறைக்கு ஒத்துவராது. எனவே இந்த விதிகளை செயல்படுத்த தடை விதித்தும், அவற்றை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், ஆர்.கருப்பையா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை டிசம்பர் 12-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

English summary
Madras High Court ordered issue of notice to Tamil Nadu government on a petition challenging various provisions prescribed in the Tamil Nadu Motor Vehicles (Regulation and Control of School Buses) Special Rules 2012. A Division Bench, comprising Justices Chitra Venkataraman and R Karuppiah, ordered notice to the government, returnable by December 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X