For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல தமிழக அரசு ரூ.20,000 நிதியுதவி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: கிறிஸ்தவர்கள் ஜெருசலேத்திற்கு புனித பயணம் சென்று வர தமிழக அரசு ரூ. 20,000 சிறப்பு நிதி வழங்கும் என்று அரசின் சிறுபான்மை நலத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

இஸ்லாமிய மக்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு அரசு உதவி செய்வதை போன்று கிறித்துவ மக்கள் மேற்கொள்ளும் ஜெருசலேம் புனித யாத்திரைக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் என்று கிறித்தவ சமுதாயத்தினர் அரசிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிறித்தவ பிரிவினரும் இஸ்ரேலில் உள்ள புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்றுவர, நபர் ஒருவருக்கு ரூ.20,000 வீதம் ஆண்டொன்றிற்கு 500 கிறித்தவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 2 கோடி அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காக மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் தலைமையில் "ஜெருசலேம் புனித பயணக்குழு" வினை அரசு நியமித்துள்ளது. இப்புனித பயணம் ஜெருசலேம் நகரை மையமாகக் கொண்டு பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.

இப்புனித பயணம் பிப்ரவரி 2013 முதல் மே 2013 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் குறைந்த பட்சம் 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை இருக்கும். பயணம் சென்னையில் துவங்கி, சென்னையில் முடிவடையும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.html என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள பயனாளிகள் பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பதாரர்/குடும்பத்தினர்/ பாதுகாவலர் தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்தவ மதத்தவராக இருத்தல் வேண்டும்.

01.01.2013 தேதியில் குறைந்தபட்சம் ஓராண்டு செல்லதக்க பாஸ்போர்ட் உடையவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும்போது வெளிநாடு பயணம் மேற்கொள்ளுவதற்கு எவ்விதமான வில்லங்கங்களும் இருத்தல் கூடாது.

வெளிநாடுகளில் புனித பயணம் மேற்கொள்வதற்கு மருத்துவ மற்றும் உடற்தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும்

இப்பயணம் மேற்கொள்வதற்காக ஏற்படும் செலவினத்தில் அரசு வழங்கும் நிதி உதவி ரூ.20,000 நீங்கலாக மீதமுள்ள தொகையை செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பயனாளிகள் மாவட்ட வாரியாக கிறித்தவ மக்கட்தொகையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இத்தேர்வு கணிணி மூலம், குலுக்கல் முறையில் நடைபெறும். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தகவல் அனுப்பப்படும். இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அவ்வப்போது தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் ஓரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து அதிகபட்சம் 4 நபர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இதில் 2 வயது நிறைவடைந்த 2 குழந்தைகளும் இருக்கலாம். இதற்கு ஒரே விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்பினால் போதுமானது. இப்பயணத்தில் 70 வயது நிறைவடைந்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன் அவருக்கு துணையாக அவர் விரும்பும் ஒரு நபர் மேற்படி நிபந்தனைகளைக்குட்படும் பட்சத்தில் அவருடன் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார். இதற்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது.

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண முகவர் மூலம் மட்டுமே இப்புனித பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்காக அங்கீகாரமும், அனுபவமும் உள்ள பயண முகவர்கள் ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இப்புனித பயணத்திற்கான காலம் மற்றும் பயண நிரல் ஜெருசலேம் புனித பயணக்குழுவால் முடிவு செய்யப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிறித்தவர்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் "ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்" என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, (5வது தளம்), அண்ணாசாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு 05.12.2012 (புதன் கிழமை) மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

அனைத்து கிறித்தவ பெருமக்களும், தமிழக அரசின் இச்சிறப்புத்திட்டத்தில் பங்கு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
TN government has announced that it will give Rs.20,000 to those christians who would visit Jerusalem as part of the pilgrimage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X