For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை இறுதிப் போர்: பிப்ரவரி 2009ல் மலேசியாவில் நடந்தது என்ன?: கேபி (பகுதி1)

By Mathi
Google Oneindia Tamil News

Prabakaran
கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் நார்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் முன்னெடுத்த முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்திருக்காவிட்டால் பல தளபதிகள் உயிரோடு இருந்திருப்பார்கள் என்று புலிகளின் சர்வதேச தொடர்பாளர் கேபி என்ற குமரன் பத்மநாபா விவரித்திருக்கிறார்.

இலங்கையில் வெளியாகும் டெய்லி மிர்ரர் நாளேட்டுக்காக அதன் செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எடுத்த கேபியின் பேட்டி:

கேள்வி: பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்திருந்த எரிக் சொல்ஹெய்ம், போரின் இறுதியில் ஐநா உதவியுடனான யுத்த நிறுத்தத்துக்கு முயற்சியை மேற்கொண்டதாக கூறியிருந்தார். அந்த முயற்சியை புலிகளின் தலைவர் தடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான உருத்திரகுமாரனும் சொல்ஹெய்மின் கருத்தை மறுத்திருந்தார். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

கேபி: எரிக் சொல்ஹெய்மின் கருத்து 100% உண்மையானது. அவர் மேற்கொண்ட முயற்சிகள் விடுதலைப் புலிகளின் தலைவரால் தடுக்கப்பட்டது. அப்படியான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தால் பேரழிவைத் தவிர்த்திருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல தளபதிகள் இன்று உயிரோடு இருந்திருக்க முடியும்.

கேள்வி: அப்படியெனில் ஏன் அப்படி ஒரு முயற்சியே நடைபெறவில்லை என்று ஏன் உருத்திரகுமாரன் சொல்ல வேண்டும்?

கேபி: உருத்திரகுமாரனைப் பொறுத்தவரையில் 2009- ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்ததை பற்றி பேசுகிறார். பிப்ரவரிக்கு பின்னர் என்ன நடந்தது என்பதைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை.

கேள்வி: 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக நியமிக்கப்பட்டீர்கள்.. நீங்களும் யுத்த நிறுத்தம் தொடர்பான முயற்சிகளில் பங்கெடுத்தவர்.. அப்போது என்ன நடந்தது என்பதை விவரிக்க முடியுமா?

கேபி: நிச்சயமாக... 2008-ம் ஆண்டிலேயே புலிகளின் கதை முடிவுக்கு வருகிறது என்பதை பார்வையாளர்கள் பலரும் ஊகித்திருந்தனர். புலிகளின் பதில் தாக்குலுக்கு அப்பாலும் இலங்கை ராணுவம் மெதுவாக ஆனால் முன்னேறிக் கொண்டிருந்தது. ஏ-9 நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏ-9 பாதையின் கிழக்குப் பகுதிக்கு ராணுவம் முன்னேறுவதற்கு முன்பாக ஒரு கெளரவமான யுத்த நிறுத்தத்துக்கு வாய்ப்பும் இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையும் அதன் வெளிநாட்டு அமைப்புகளும் அதைச் செய்யவிடவில்லை.

2003-ம் ஆண்டின் தொடக்கத்தில் இயக்கம் எனக்கு "ரிடையர்மெண்ட்" கொடுத்து விடுவித்துவிட்டது. நடைமுறையில் நான் விடுதலைப் புலிகளின் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டேன். ஆனால் தொலைவில் இருந்து கள நிலைமைகளை பார்த்து வந்தேன். 2008-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் என்னுடன் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்க தலைமை தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. அப்போது புலிகளின் தலைவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க யுத்த நிறுத்தம் அவசியம் என்பதை நான் வலியுறுத்தினென். 2008-ம் ஆண்டு டிசம்பரில் பிரபாகரன் என்னை சர்வதேச பொறுப்பாளராக நியமிக்க ஒப்புக்கொண்டார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வரவும் ஒப்புக் கொண்டார்.

2008-ம் ஆண்டு டிசம்பரில் அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தாலும் யுத்த நிறுத்தத்தை நோக்கிய நகர்வுகள் புலிகள் தரப்பில் மிகவும் மெதுவாகவே இருந்தன. புத்தாண்டு பிறந்தபோது ராணுவமானது பரந்தன், கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றை கைப்பற்றியிருந்தது.

அப்போதுதான் விடுதலைப் புலிகளின் தலைமை கவலைகொண்டு அதன் வெளிநாட்டு பிரிவுகளை என் தலைமையின் கீழ் இயங்கவும் உத்தரவிட்டது. எனக்கு ஆதரவு தரவும் சொன்னது. ஆனால் வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்த காஸ்ட்ரோ, தமது பிரதிநிதி நெடியவன் மூலமாக எனது செயல்பாடுகளை சீர்குலைத்தார். போதுமான பண உதவி செய்யப்படவில்லை. இருந்தபோதும் ஒரு யுத்த நிறுத்தத்துக்கான தீவிர முயற்சிகளை நான் மேற்கொண்டிருந்தேன். சர்வதேச சமூகத்தின் முக்கிய நபர்களுடன் இந்த விவகாரத்துக்காக தொடர்பு கொண்டிருந்தேன்.

கேள்வி: எப்படி தொடர்பு கொண்டிருந்தீர்கள்? நேரடியாக தொடர்பு வைத்திருந்தீர்களா?

கேபி: நிறைய கடிதங்கள், ஃபேக்ஸ்கள், மின் அஞ்சல்கள் வழியாக தொடர்பு கொண்டிருந்தேன். யாரையெல்லாம் எப்படி தொடர்பு கொள்ள முடியுமோ அதை மேற்கொண்டேன். சிலரை நேரடியாகவும் தொடர்பு கொண்டேன். சில நேரங்களில் எனது பிரதிநிதிகள் சந்தித்தனர்.

கேள்வி: இதில் நார்வேயின் பங்கு என்ன?

கேபி: யுத்த நிறுத்தம் மற்றும் அமைதி முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட நாடு நார்வே. நார்வே மட்டும் குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள பணியை ஆற்றியிருக்காவிட்டால் போர் நீண்டு இன்னும் மிக மோசமாக இருந்திருக்கும். ஆகக் கூடுமானவரையில் உயிரிழப்புகளைத் தடுக்கவே நார்வே விரும்பியது. மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பினர்.

கேள்வி: அதற்காக நார்வே செய்தது என்ன?

கேபி: நார்வேயின் எரிக் சொல்ஹெய்ம் என்னுடன் தொடர்பில் இருந்தார். யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு சந்திப்பை நடத்த நாங்கள் முடிவு செய்தோம். 2009-ம் ஆண்டு பிப்ரவரி இறுதி வாரத்தில் இப்படியான ஒரு ரகசிய சந்திப்பு நடைபெற்றது.

கேள்வி: அந்த சந்திப்பு எங்கு நடைபெற்றது?

கேபி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஹில்டன் ஹோட்டைல் நடைபெற்றது. 2 நாட்கள் அந்த கூட்டம் நடந்தது.

கேள்வி: யார் யார் கலந்து கொண்டனர்? எரிக் சொல்ஹெய்ம் கலந்து கொண்டாரா?

கேபி: இல்லை... நார்வே அமைச்சராக அவர் இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை. நார்வேயின் முக்கிய அதிகாரி, அவரது பிரதிநிதியாக வந்தார். மேலும் இரு நார்வே அதிகாரிகள் ஆஸ்லோவில் இருந்து வந்திருந்தார். இலங்கைக்கான நார்வே தூதரும் கலந்து கொண்டார்.

கேள்வி: யார் அவர்?

கேபி: கொழும்பில் அப்போது நார்வே தூதராக இருந்த ஹட்ரெம். இப்பொழுது அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார் என நினைக்கிறேன்.

கேள்வி: விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக யார் கலந்து கொண்டது?

கேபி: நான், என்னுடைய செயலாளர் "அப்பு", ஜோய் மகேஸ்வரன், உருத்திரகுமாரன். இவர்களுடன் வெளிநாட்டைச் சேர்ந்த சில விடுதலைப் புலி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். அவர்களது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் இருவரும் நார்வே முன்னெடுத்த முந்தைய அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டவர்கள்.

கேள்வி: அந்தப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

கேபி: யுத்த நிறுத்தம் பற்றியும் பேச்சுவார்த்தை பற்றியும் தெரிவித்தேன். பொதுமக்களின் நிலைமையை கண்ணீர்மல்க எடுத்துக் கூறி அவர்களைக் காப்பாற்ற எப்படியாவது யுத்த நிறுத்தம் அவசியம் என்று நார்வேயிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.

கேள்வி: அதற்கு என்ன பதில் கிடைத்தது?

கேபி: அது மிகவும் எதிர்பாராதது.... நார்வே தூதர் ஹட்ரம் வெளிப்படையாக கடுமையான குரலில் ஆனால் உண்மைகளை விவரித்தார்.

கேள்வி: அவர் சொன்னது என்ன?

கேபி: யுத்த களத்தின் உண்மை நிலவரத்தை எங்களிடம் விவரித்தார். இலங்கை ராணுவத்தின் கைதான் ஓங்கி இருக்கிறது என்பதை விளக்கினார். சாளையில் 55-வது டிவிசன், விசுவமடுவில் 57 வது டிவிசன், தேவிபுரத்தில் 58-வது டிவிசன், முல்லைத்தீவு நகரில் 59-வது டிவிசன் நிலை கொண்டிருக்கிறது. சிறப்பு படை-2 உடையார்கட்டிலும் சிறப்பு படையணி 3 அம்பகாமமிலும் சிறப்பு படை 4 ஒட்டுசுட்டானிலும் நிற்கிறது என்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு சிறிய நிலப்பரப்பில் அட்டை பெட்டி வடிவத்தில் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறினார். புலிகளை அழிக்க சிறிது காலம்தான் ராணுவத்துக்கு தேவை. அதனால் இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்த நிறுத்தம் என்பது தேவையில்லாத ஒன்று. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளைத் தோற்கடித்துவிடுவது உறுதி என்றார் அவர்.

மேலும் பொதுமக்களுக்கு விடுதலைப் புலிகள்தான் பொறுப்பு. பொதுமக்களை மனித கேடயங்களாக கட்டாயப்படுத்தி புலிகள் வைத்திருக்கின்றனர். நீங்கள் சிலவற்றை விட்டுக் கொடுத்துதான் சிலவற்றைப் பெற முடியும் என்றும் கூறினார்.

கேள்வி: அது என்ன ஆயுத ஒப்படைப்பா?

கேபி: ஆம். சரியானதே.. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை சரணடைய ஒப்புக் கொண்டால் நார்வேயும் இதர நாடுகளும் யுத்த நிறுத்தம் குறித்து இலங்கையை கேட்டுக் கொள்ளும் என்றார். விடுதலைப் புலிகளுக்கு இனி வாய்ப்பு என்பதே இல்லை.. நிச்சயமாக இலங்கை ராணுவம் வெற்றி பெறத்தான் போகிறது என்றார். ஆகையால் உயிரிழப்பைக் குறைக்க விரும்பினால் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். அப்படி தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட உண்மையாக ஒப்புக் கொண்டால் அமெரிக்கா, இந்தியா, நார்வே போன்ற நாடுகள் யுத்த நிறுத்தத்துக்கு இலங்கையை வலியுறுத்தும் என்றும் கூறினார். அப்படி விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்ளவில்லையெனில் யுத்தம் சிறிது காலத்தில் முடிந்துவிடும். அத்துடன் விடுதலைப் புலிகளின் கதையும் முடிந்துவிடும் என்றார்.

இதையடுத்து நாங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தொடர்பு கொண்டு பதில் கேட்கிறோம் என்றோம். இதுதான் அந்த சந்திப்பில் நடந்தது என்று கேபி கூறியுள்ளார்.

2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு என்ன நடந்தது? நார்வே எடுத்த முன் முயற்சி என்ன? பிரபாகரன் நிராகரிக்க காரணம் என்ன?

-அடுத்த பகுதியில்...-அடுத்த பகுதியில்...

English summary
"At the time of final war in Sri lanka Norweay has tried to the best efforts to end the war", Ltte top leader KP told in interview.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X