For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2009 பிப்ரவரியில் நார்வே முன்னெடுத்த அமைதி முயற்சிக்கு பிறகு என்ன நடந்தது?: கேபி பேட்டி (பகுதி 2)

By Mathi
Google Oneindia Tamil News

Sri Lanka War Zone
கொழும்பு: இலங்கை இறுதிப் போரின் போது நார்வே முன்னெடுத்த முயற்சிகளைப் பற்றி மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளர் கேபி விவரிக்கும் பேட்டியின் 2-வது பகுதி:

புலிகளை காப்பாற்றும் திட்டம் -1

கேள்வி: நார்வே அதிகாரிகளுடனான 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சந்திப்பு சாதகமாக இருக்கவில்லை. 2010-ம் ஆண்டு என்னிடம் நீங்கள் பேசும்போது, பிரபாகரனுக்கு 16 பக்க யுத்த நிறுத்த யோசனை பற்றி அனுப்பியதாகவும் அதனை 3 வார்த்தைகளில் அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறினீர்கள். 2009-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு என்ன நடந்தது?

பதில்: நார்வேயின் யோசனையை பிரபாகரன் நிராகரித்த பின்னரும்கூட என்னுடைய முயற்சிகளை நிறுத்தவில்லை. நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து கொண்டே இருந்தது. இதனால் நார்வே தரப்புடனும் சர்வதேச தலைவர்களுடனும் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

இது வாழ்வா? சாவா? என்ற விவகாரம்... எப்படியாவது யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும்.. இயக்கத்தை அதன் தலைமையை காப்பாற்ற வேண்டும் என்று கருதினேன். ஐ.நா.வின் உயர் அதிகாரிகள், தூதர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என பலதரப்போடும் போராடிப் பார்த்தேன். சிலரை நேரில் கூட சந்தித்தேன்.

மார்ச் மாத பிற்பகுதியில் சர்வதேச அனுசரனையுடன் ஐ.நா. பிரதிநிதிகளிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது என்ற திட்டத்தை உருவாக்கினேன். ஆயுதங்களை "மெளனிக்க" செய்தல் அது தேவைப்பட்டால் 25 முதல் 50 புலிகளின் முக்கிய தளபதிகள் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவும், நடுத்தர போராளிகள் தடுத்து வைக்கப்பட்ட அவர்களுக்கு குறைந்த தண்டனை வழங்குதல், இளநிலைப் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்தல் என்பதுதான் அத்திட்டம்.

விடுதலைப் புலி தலைவர்களின் குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுக்க 3 நாடுகளுடன் பேசியிருந்தேன். இதில் ஆசிய நாடு ஒன்றும் அடக்கம். மற்றவை ஆப்பிரிக்க நாடுகள்.

இந்தத் திட்டம் நார்வே, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. தேவைப்பட்டால் போர்க் கப்பலை அனுப்பவும் அமெரிக்காவும் தயாராக இருந்தது.

இந்தத் திட்டம் பற்றி தெரிவித்து இதற்கான ஒப்புதலை தெரிவிக்கக் கோரி மார்ச் மாத இறுதியில் பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பினேன். அவர் செய்யலாம் என்று சொல்லியிருந்தால் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழு முயற்சிகளில் இறங்கினேன். இதற்காக 16 பக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஃபேக்ஸ் மூலம் அனுப்பியும் வைத்தேன்.

16 பக்கத்துக்கு நான் அனுப்பி இருந்ததை "இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மூன்று வார்த்தைகளில் சொல்லிவிட்டார். அதனால் இந்தத் திட்டத்தையே நான் கைவிட்டேன்.

கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவரை எப்படி தொடர்பு கொண்டீர்கள் நீங்கள்?

கேபி: சாட்டிலைட் தொலைபேசிகளை பயன்படுத்தினோம். பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேலு (குமாரவேல்) என்பவர் மூலமாக தொடர்பு கொண்டோம். அவர்தான் எனது தகவல்களை தலைவருக்கு தெரியப்படுத்தி அவரிடம் இருந்து பதில் பெற்றுத் தருவார்.

அதன் பின்னர் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன், கடற்புலி பொறுப்பாளர் சூசை ஆகியோரும் தலைவருக்கும் எனக்குமான தொடர்பாளர்களாக இருந்தனர்.

கேள்வி: ஐ.நா.வின் தலையீடு என்பது எந்தளவு இருந்தது?

கேபி: நார்வேதான் ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட்டது.என்னைப் பொறுத்தவரை ஐ.நா. அதிகாரிகளான ஹோல்ம்ஸ், விஜய் நம்பியார், தம்ர சாமுவேல் ஆகியோருடன் தொடர்பில் இருந்தேன்.

பிரபாகரன் நிராகரித்தது ஏன்?

கேள்வி: உங்களது திட்டத்தை பிரபாகரன் நிராகரிக்கக் காரணம் என்ன? உண்மையான களநிலவரம் அவருக்கு தெரியவில்லையா? என்ன நினைக்கிறீர்கள்?

கேபி: அவர் கேணல் தீபன் தலைமையில் ஒரு பதிலடித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனந்தபுரம் பகுதியில் இதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரபாகரனைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய ராணுவ ரீதியான வெற்றியைப் பெற முடியும் என்று நம்பியிருந்திருக்கிறார். இதன் மூலமாக நிலைமையை தலைகீழாக்க முடியும்... ராணுவத்தை சீர்குலைய வைக்க முடியும் என்று நம்பியிருக்கிறார்.

ராணுவம் முதலில் ஆனந்தபுரத்தில் தாக்குதல் நடத்தியது. புலிகளை அட்டைப் பெட்டி வடிவில் சுற்றி வளைத்தது. இதில் தீபன் உள்ளிட்ட ஏராளமான புலிகளின் தளபதிகள் உயிரிழந்தனர். அதன் பின்னர் நிலைமை வேறானது.

புலிகளை காப்பாற்றும் திட்டம் -2

கேள்வி: பிரபாகரன் நிராகரித்த பிறகு என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

கேபி: அந்த முயற்சிகளைத்தான் பிபிசி ஊடகத்திடம் எரிக்சொல்ஹெய்ம் விவரித்தது.... அதாவது தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிப்பது. அதன் பின்னர் ஐ.நா. அதிகாரிகள், பிரதிநிதிகள் (இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நார்வே) மற்றும் இந்திய பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் வடபகுதிக்கு கப்பலில் செல்வது.

யுத்த முனையில் இருக்கும் புலிகள் மற்றும் பொதுமக்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்வது.. அதன் பின்னர் இலங்கையின் பாதுகாப்பில் அனைவரையும் முகாம்களுக்கு அனுப்புவது என்பதுதான் எரிக்சொல்ஹெய்ம் சொல்லும் திட்டம்.

அதேபோல் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மெளனிக்க செய்துவிட்டு ஐநாவிடம் அவற்றை ஒப்படைப்பது. மார்ச் மாதம் என்ன திட்டமிடப்பட்டதோ அதன்படி விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை வெளிநாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்து அவர்களை கண்காணிப்பது. நடுநிலையான போராளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையும், மற்றோருக்கு பொதுமன்னிப்பும் கொடுத்தல் என்பதும் அத்திட்டம்.

கேள்வி: இதில் பிரபாகரன்., பொட்டு அம்மான் சேர்க்கப்படவில்லையா?

கேபி: அவர்களும்தான் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவோர் பட்டியலில் இருந்தனர். அதை அவர்கள் ஏற்கவில்லை.

கேள்வி: எரிக்சொல்ஹெய்ம் வேறு மாதிரி சொல்கிறாரே..

கேபி: எனக்கும் தெரியும். எரிக்சொல்ஹெய்ம் வேறு மாதிரியாக சொல்கிறார் என்பது.. அந்தத் திட்டத்தின்படி பிரபாகரனும் பொட்டு அம்மானும் வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

கேள்வி: ஒருவேளை ராஜிவ் கொலை விவகாரத்தில் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டாம் என்று இந்தியா கேட்டுக் கொண்டதா?

பதில்: உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை.. எனக்கே சொல்ஹெய்ம் சொல்வது புதிராக இருக்கிறது.

ஆனால் இந்தத் திட்டம் பிரபாகரனிடம் ஒப்படைக்கப்படவில்லை. ஏனெனில் அவர் இது விஷயமாக வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

நார்வே முன்னெடுத்த முயற்சிகளுக்கு பிரபாகரன் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் நான் வன்னிப் பகுதிக்கு நேரடியாக சென்று தலைவரை சந்தித்து பேசியிருப்பேன்.. என்றார் கேபி.

யுத்த நிறுத்த முயற்சிகளை பிரபாகரன் நிராகரித்தன் பின்னணியில் இருந்த தமிழக தலைவர்கள் யார்? பிரபாகரன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் போனது எப்படி? என்பவற்றை அடுத்த செய்திகள்ல் பார்க்கலாம்..

English summary
Top LTTE leader KP told that in interview, he and Norway had 2 plans to secure ltte leaders and Civilians at the final war time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X