For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகம் எமது கனத்த மவுனத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்- எல்டிடிஈ மாவீரர் நாள் அறிக்கை

By Shankar
Google Oneindia Tamil News

LTTE Logo
கொழும்பு: தனி ஈழத்தை வென்றெடுப்பதே லட்சியம். உலகம் எமது கனத்தை மவுனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என விடுதலைப் புலிகள் அமைப்பு மாவீரர் தின அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கை விவரம்:

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். தமிழீழத்தின் தேசிய நாள். எங்கள் தங்கத் தலைவனின் மடியிலே, எமது விடுதலை இயக்கத்தின் முதல் மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்தநாள். எமது விடுதலை வானில் விண்மீன்களாய், நித்தமும் நீங்காதொளிரும் புனிதர்களாம் மாவீரர்களை, தம்முயிரை அர்ப்பணித்துத் தரணியிலே தமிழினத்தைத் தலைநிமிர வைத்த மானமறவர்களை, இவ்வுலகெங்கும் பரந்துள்ள தமிழரெல்லோரும் தம் நெஞ்சம் நெகிழக் கண்கள் பனிக்க மலர்தூவிச் சுடரேற்றி வழிபடும் திருநாள்.

உயிர் வாழும் ஆசையிலிருந்து பிறக்கும் அச்சமே மனிதர்களைக் கோழைகளாக மாற்றி விடுகிறது. ஆனால் வீரர்களின் நெஞ்சமெங்கும் கனன்று எரியும் விடுதலைத் தீயினால், அச்சமே அவர்களிடமிருந்து அச்சப்பட்டு ஓடிவிடுகிறது. அதனாலேயே நஞ்சைக் கழுத்தில் அணிந்து கொண்டு, உயிரைத் துச்சமென மதித்துப் போராடிய அம்மாவீரர்கள் சாவையும் வென்று, நம் மண்ணினதும்; நம்மினத்தினதும் வரலாறாகி நிலைத்து விட்டார்கள்.

விடுதலைக்காகவே...

விடுதலை என்பது ஒவ்வோர் உயிரினதும் பிறப்புரிமையாகும். இந்தப் பூவுலகிலுள்ள உயிரினங்கள் எல்லாவற்றினதும் வாழ்க்கையின் அடிநாதம் விடுதலை என்ற ஒற்றைச் சொல்லிலேயே பொதிந்திருக்கிறது. தமிழீழ மக்களாகிய நாங்களும் இவ்வுலகம் முன்னெப்போதும் சந்தித்திராத கொடுந்துயரங்களையும் கடும் இழப்புக்களையும் தாங்கி எமதுதாயக விடுதலைக்காகவே பல்லாண்டுகளாகப் போராடி வருகின்றோம்.

நாம் உலகின் தொன்மை வாய்ந்த, ஆதி மொழியொன்றுக்குச் சொந்தமானவர்கள். பழம்பெருமை வாய்ந்த கலைபண்பாட்டு விழுமியங்களுக்கும், இலக்கியங்களுக்கும், அறிவியலுக்கும், நவீன உலகுக்கே முன்னுதாரணமான நாகரிகத்துக்கும் சொந்தமானவர்கள். நாம் அமைதியையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் விரும்பும் ஒரு இனத்தவராகவே வாழ்ந்தோம். தொடர்ந்தும் அங்ஙனமே வாழ விரும்பினோம். ஆனால் ஆட்டுக்குட்டியின் உயிருக்கும் கருணை காட்ட வேண்டிப் போராடிய புத்த பெருமானின் போதனையைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள் எம்மை அமைதியாக வாழ விடவில்லை.

எம்மை மனிதர்களாகவே மதிக்கவில்லை. மனிதகுலம் முழுமையுமே தலைகுனியும் வண்ணம் ஆற்றொணாக் கொடுமைகளை எமக்கு இழைத்தார்கள். எமது அப்பாவி மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். குழந்தைகள், பெண்கள் உட்படத் தமிழர் என அடையாளங் கண்ட அனைவரையும் கொன்றொழித்தார்கள். தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். தமிழரின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டன. குடியேற்றங்கள் என்ற பெயரில் தமிழ் மக்களின் பாரம்பரியமான வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுத் திட்டமிட்ட முறையிற் சிங்களவர் குடியேற்றப்பட்டனர்.

போராட்டமே தீர்வு

ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்வதற்கான எமது அமைதி முயற்சிகள் அனைத்தையும் சிங்களத் தலைமைகள் நிராகரித்தார்கள். ஒப்பந்தங்களைக் கிழித்துக் காற்றிலே பறக்க விட்டார்கள். எமது அறவழிப் போராட்டங்களை வன்முறையால் அடக்கினார்கள். போரை எம்மீது திணித்தார்கள். எம்மக்களின் அழுகுரலைக் கேட்கவும் அவலங்களைத் தீர்க்கவும் யாருமே முன்வராத நிலையில், சிங்கள அரசை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு எந்தத் தெரிவும் எம்முன்னே இருக்கவில்லை.

நாம் ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் விடுதலைப் போராளிகள். எமது விடுதலைப் போராட்டத்துக்கு எமது மக்களிடமிருந்து மட்டுமே எமக்கு உதவி கிட்டியது. சிங்களப் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்புப்படை பாரிய படைபலத்துடனும் அளவற்ற ஆயுதபலத்துடனும் மூர்க்கத்துடன் நகர்ந்து வந்தது. அப்படையைக் குறைந்த அளவிலான படைவலுவோடு நாம் எதிர்கொள்ள வேண்டி வந்தபோது அதற்கேற்ற வகையிலேயே எமது போர்க்கள உத்திகளை வகுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சிங்கள அரச பயங்கரவாதத்துக்கெதிரான போர்

எதிரியிடம் இல்லாத புதியதொரு பலத்துடன் போர்முனைக்குச் செல்லும் படையணியே போர்க்களத்தை வெற்றி கொள்ள முடியும். சாவுக்கு அஞ்சாத வீரமறவர்களின் மனத்துணிவும் அர்ப்பணிப்புமே எமது எதிரியிடம் இல்லாத பெரும்பலமாக எம்மிடம் இருந்தது. ஒடுக்கப்பட்ட எமதினத்தின் பலமானதொரு ஆயுதமாகவே தற்கொடைப் போராளிகள் உருவாக்கம் பெற்றார்கள். அவர்கள் எதிரியிடமிருந்து எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்றும் எமதினத்தின் தற்காப்புக் கேடயங்களாகவே தம்மை உருவாக்கிக் கொண்டார்கள். அவர்களின் போராட்ட வடிவத்தை எதிர்கொள்ளும் திராணியற்ற சிறிலங்கா அரசானது, பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்குலகம் தொடுத்திருந்த போரிற்தானும் ஓடிச்சென்று அணிசேர்ந்து கொண்டு, உலகத்தின் கண்களுக்கு நம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்தது.

நாம் சிறிலங்காவின் அரச பயங்கரவாதத்துக்கு எதிராகவே நீண்ட காலமாகப் போராடுகிறோம். நாம் பயங்கரவாதிகள் அல்லர். நாம் யாருக்கும் அச்சுறுத்தல் விடுப்பவர்களோ யாருக்கும் எதிரானவர்களோ அல்லர். நாம் நமது இனத்தின் விடுதலைக்காக மட்டுமே போராடுகிறோம். தமிழீழம் விடுதலை அடைந்து சுதந்திர நாடாகி உலக அரங்கிற் சிறிலங்காவுடனும் உலகநாடுகள் அனைத்துடனும் கைகோர்த்து நிற்கவே விரும்புகிறது.

சுதந்திரத் தமிழீழம்

எமது மக்களும் சுதந்திரத் தமிழீழ நாட்டின் மக்களாக இந்தத் தீவில் சிங்களவர்களோடும் ஏனைய இனத்தவரோடும் உலக மக்கள் அனைவரோடும் நட்புடன் ஒன்றுகூடி அமைதியாக வாழ்வதையே விரும்புகிறார்கள். இதை இந்தத் தருணத்தில் நாம் உலகத்துக்குத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எம்மினிய மக்களே, முள்ளிவாய்க்காலின் பின்னே மூன்றரை ஆண்டுகள் கழிந்தோடி விட்டன. பாரம்பரியமாகத் தொன்றுதொட்டு நாம் வாழ்ந்த வாழ்விடங்களை, எமது மரபுவழித் தாயக நிலங்களை எம்மக்களிடமிருந்து பறித்து, அவற்றைக் கையகப்படுத்தி, வரலாற்றையே மாற்றும் முயற்சியிற் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. சிங்களக் குடியேற்றங்களும், படைமுகாம்களும், அரசமரத்தைக் காணுமிடமெங்கும் விகாரைகளும், சிங்கள இராணுவத்தினருக்குத் தமிழ்ப் பிரதேசங்களில் குடியிருப்புக்களும் என நமது அன்னை மண் அன்றாடம் பறிபோய்க் கொண்டிருக்கிறது.

பொருளாதார வகையில் நன்மை கிட்டக் கூடிய நம்மக்களின் பாரம்பரியமான வாழ்விடங்களை ஆக்கிரமித்து விட்டு, மீள்குடியேற்றம் என்ற பெயரில் அவர்களைக் காட்டுப் பகுதிகளிலும் வனாந்தரங்களிலும் சிங்கள அரசு குடியேற்றி வருகிறது. இது தவிரவும் தமிழீழப் பகுதியெங்கணும் ஆங்காங்கே பரவலாக எமது மக்களின் பல ஏக்கர் கணக்கிலான வாழ்விடங்களை ஆக்கிரமித்துப் படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழீழப் பகுதி முழுமையுமே ஒரு திறந்தவெளிச் சிறையாக மாற்றப்பட்டிருக்கிறது. இலட்சக்கணக்கான சிங்களப்படையினர் அங்கே காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துத் தமிழ் மக்களும் படையினரின் முழுமையான கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளனர். படையினரின் பிரசன்னத்தைக் குறைத்துக் காட்டுவதற்காகவும், புலனாய்வு நோக்கங் கருதியும் தமிழீழப் பகுதிகளிலுள்ள பெரும்பாலான படையினர் தற்போது சீருடை தரிக்காமற் சாதாரண உடையிலேயே நடமாடுகின்றனர். இவை அனைத்துக்கும் மேலாக நிர்வாக அலகுகளை மாற்றித் தமிழ்ப் பிரதேசங்களையே இல்லாதாக்கும் திட்டங்களும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

தமிழர் பொருளாதாரம் அழிப்பு

தமிழீழப் பகுதியைச் சூழ்ந்துள்ள கடல்மடியிற் தொழில் செய்வதையே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த எமது உறவுகளின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவ்விடங்களில் எல்லாம் சிங்களவர்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழீழப் பகுதிகளின் பெரும்பாலான வர்த்தக முயற்சிகள் யாவும் சிங்களவர்களாற் கைப்பற்றப்பட்டுள்ளன.

இனவழிப்பின் ஓர் அங்கமாகச் சிங்கள இராணுவத்தினரும் சிங்களத் தொழிலாளர்களும் தமிழ்ப் பெண்களைத் திட்டமிட்டுத் திருமணம் செய்கின்றனர். பதின்வயதுத் தமிழ்ச் சிறுவர்களைப் போதைப் பாவனை மற்றும் பாலியல் ஒழுக்கக் கேடுகளை நோக்கிச் சிங்களப் படையினர் வழி நடத்துகின்றனர். இளைஞர்களை இலக்கு வைத்து அவர்களைப் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு உட்படுத்தித் தமிழ் இளையோரிடமுள்ள நாட்டுப்பற்றை இல்லாதொழிக்கப் பேரினவாத அரசு திட்டமிட்டுச் செயலாற்றுகிறது.

இவையனைத்தும் சிங்கள அரசால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிற் சர்வதேச சமுகமோ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் பாராமுகமாக, வாய்மூடி மௌனமாக இருக்கின்றது. விடுதலை வேண்டிப் போராடிய எங்களுக்குப் பயங்கரவாத முத்திரை குத்தினார்கள். சிங்கள அரசுக்குத் துணையாகத் தமது நாடுகளில் எமதமைப்புக்குத் தடை விதித்தார்கள். சிங்கள அரசுக்கு ஆயுதங்களையும் பில்லியன் கணக்கிற் கடனுதவிகளையும் வழங்கி எம்மனைவரையும் கையறு நிலைக்குத் தள்ளினார்கள்.

நீதி கிடைக்கவில்லை

இவ்வாறாக எமது விடுதலைப் போராட்டத்தைப் பின்னடைய வைத்த உலக நாடுகள், இந்த மூன்றரை ஆண்டுகளில் அவல நிலையிலுள்ள எமது மக்களின் உரிமைகளை மீட்டுக் கொடுக்கவோ அவர்கள் தத்தமது வாழ்விடங்களில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவோ எந்த முயற்சியையும் செய்யவில்லை. மனித உரிமைகள் பற்றிப் பேசுவோரெல்லாம் சிங்கள அரச பயங்கரவாதத்தின் கோரமுகத்தைத் தோலுரித்துக் காட்டிய பிறகும் பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கு இந்த உலகத்திடமிருந்து இன்னும் நீதி கிடைக்கவில்லை.

தன்னாட்சி உரிமை கோரிப் பல்லாண்டுகளாகப் போராடிவரும் எமது மக்கள் அதற்குக் குறைவான எந்தத் தீர்வையும் ஏற்கத் தயாராக இல்லை. தாம் இன்னலிற் சிக்கியுள்ள இன்றைய நிலையைப் பயன்படுத்தி அரைகுறைத் தீர்வொன்றை யாராவது தமது தலையிற் திணிப்பதையும் அவர்கள் விரும்பவில்லை. தங்களுக்கான தீர்வைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள். தாங்கள் விரும்பும் நீதியான ஒரு தீர்வையே இந்த உலகம் தமக்குத் தரவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

உலகம் எமது மக்களின் நியாயமான விருப்புக்களையும் அவர்களின் கனத்த மௌனத்தின் பின்னுள்ள அர்த்தங்களையும் சரியாகப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். தமிழ் மக்கள் படும் துயரங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்களுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும். தொடர்ந்தும் அவர்களுக்கான நீதி மறுக்கப்படுமேயானால், அவர்கள் தங்கள் மௌனத்தைக் கலைத்துத் தங்களுடைய வழியில் விடுதலையை வென்றெடுக்க முற்படுவார்கள். அதன் பின்னர் அவர்களது நியாயங்களைப் புரிந்து கொண்டு அம்மக்களே தமது வழியில், விடுதலையை வென்றெடுக்க அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டிய தார்மீகக் கடமையும் பொறுப்பும் உலக நாடுகளுக்கு உள்ளது.

இவ்விடத்தில், எமது மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை உலகம் அறியச் செய்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் ஊடகங்களுக்கும் எமது விடுதலைக்காகக் குரல் கொடுத்துவரும் வெளிநாட்டவர் அனைவருக்கும் எமது நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பார்ந்த எமது நண்பர்களே, இளையோரே, சிங்களப் பேரினவாத அரசு நம்மீது ஏவிவிட்டுள்ள சதிச் செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு நாம் வெறுமனே கைகட்டிக் கொண்டிருக்க முடியாது. தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க நாம் நமது ஆற்றலைப் பெருக்க வேண்டும். தமிழரின் தாயகத்தைப் பறித்தெடுத்துத் தமது நாட்டை முன்னேற்றி விடலாம் என்று சிங்களப் பேரினவாதிகள் மனப்பால் குடிக்கின்றனர்.

தமிழரிடையே பிரிவினை வேண்டாம்..

தமிழர்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தித் தமது அடிவருடிகளாக்கி, அவர்களை அடக்கி ஆண்டு விடலாம் என்று கனவு காணும் சிங்கள அரசியற் தலைமைகளுக்குத் தமிழர்கள் தமது இலட்சிய உறுதியை உணர்த்த வேண்டும். அதற்குத் தமிழ் மக்களாகிய நாங்கள் அனைவரும் நம்முன்னே உள்ள அனைத்து வழிகளிலும் தளராது தொடர்ந்தும் போராட வேண்டும். உலகம் எமது குரலுக்குச் செவிசாய்த்து எமது விடுதலைக்கு உதவும் காலம் விரைவில் வரும். அதுநாள் வரை நாம் எமது போராட்டத்தின் நியாயங்களை உலகத்தின் மனசாட்சியை உலுப்பும் வண்ணம் ஓயாது உரத்துக் கூற வேண்டும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்களையும் துயரங்களையும் எண்ணி எம்மால் முடியுமா என்று நாம் கலங்க வேண்டியதில்லை. துணிவும் தன்னம்பிக்கையும் அறிவுத்திறனும் இருந்தால் எப்படியான நிலைமையையும் எமக்குச் சாதகமாக மாற்றி எம்மாற் போராட முடியும். அதனையே அடக்குமுறையிலிருந்து விடுபடப் போராடி விடுதலை பெற்ற நாடுகளின் போராட்ட வரலாறுகள் நம்பிக்கை தரும் முன்னுதாரணங்களாகி நம்முன்னே உணர்த்தி நிற்கின்றன.

எம் உயிரினும் மேலான உறவுகளே, தனது கைக்கூலிகளான தமிழர்கள் சிலரை வைத்துச் சிங்கள அரசாற் திட்டமிட்டு நடாத்தப்படும் சதிவலைகளுக்குள் வீழ்ந்துவிடாமல் விழிப்புடன் இருந்து எமது இலக்கை வென்றெடுக்க எமக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டுகிறோம்.

காலம் இடும் கட்டளையை ஏற்று, மாவீரர்கள் நடந்த வழியிற் தொடர்ந்து போராடுவதன் மூலமே நாம் நமது விடுதலையை வென்றெடுக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

மாவீரர் நாளாகிய இன்று எமது மக்களையும் மாவீரர்களையும் மனங்களில் நிறுத்தி எமது தேசியத்தலைவரின் வழிகாட்டலின்படி எமது விடுதலையை வென்றெடுக்கும் வரை அனைவரும் சேர்ந்து அயர்வின்றி உழைப்போம், தளராது போராடுவோம் என்று உறுதி கூறுவோம்.

English summary
In its historical Heroes day statement, the LTTE declared that separate Eelam is the ultimate goal of Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X