For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

Seeman
சென்னை: யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழக மாணவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழர் தாயகத்தின் விடுதலைக்காக போராடி தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஆர்ப்பாட்டம் இன்றி, அமைதியாகக் கூடி தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்திய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிங்கள இராணுவத்தின் உளவுப் பிரிவினரும், காவல் துறையினரும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவர்கள் தங்கள் விடுதியிலும், அதேபோல் மாணவிகள் தங்களுடைய விடுதியிலும் தனித்தனியாக நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் தினத்தை கடைபிடித்ததையடுத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலை மாணவிகள் மாவீரர் தினத்தை நடத்திடக் கூடாது என்பதற்காகவே, அவர்களுடைய விடுதியின் ஒவ்வொரு அறைக்கும் வெளியே காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் அதையும் மீறி மாலை சரியாக 6.07 மணிக்கு அவர்கள் தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தியதை தடுக்க முடியாததால், ஆத்திரமுற்ற சிங்கள படையினர் மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, அவர்களை இழிவுபடுத்தியும் உள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக் கழகம் மட்டுமின்றி, நகரத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் அமைதியாக மாவீரர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். அப்போது கோயில்களில் உள்ள மணிகள் ஒருசேர ஒலித்துள்ளன. இதனால் கோபமுற்ற சிங்கள படைகள் இப்படிப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

மாணவிகளின் விடுதிக்குள் சிங்கள படையினர் அத்துமீறி நுழைந்ததையும், மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியதையும் கண்டித்து, கடந்த 28ஆம் தேதியன்று யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய அமைதிப் பேரணியின் மீதும் சிங்கள காவல்படையினரும், இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது யாழ்ப்பாணத்திலும், வன்னி மாவட்டங்களிலும் தமிழர்களிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. அதை தொடர்ந்து நேற்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான ப.தர்ஷானந் (வயது24) நேற்று நள்ளிரவு கோப்பாய் காவல்துறையினரால் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்..

தங்களுடைய விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வை நடத்திய நம் மாணவ சொந்தங்களின் மீது சிங்கள இனவெறிப் படைகள் நடத்தியுள்ள இந்த வன்முறையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயக விழுமியங்களை காக்கும் உலகளாவிய அமைப்புகள் இலங்கை இன வெறி அராசங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து கைது செய்யப்பட்ட தமிழ் மாணவர் தர்ஷானந்தை விடுவிக்கவேண்டும். ஜனநாயக உரிமைகளை சகித்துக்கொள்ள வக்கற்ற சிங்கள படையினர் நடத்திய இந்த அராஜக செயலை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் கண்டித்துள்ளது. ஆனால் கொழும்புவிலும், யாழ்ப்பாணத்திலும் உள்ள இந்தியத் தூதரங்கள் அமைதி காக்கின்றன.

எங்கள் மீனவர்களைத் தாக்கினால் இந்தியாவில் படிக்க வந்துள்ள சிங்கள மாணவர்களைத் தாக்குவோம் என்று பேசியதற்காக என்னை தேச பாதுகாப்புச் சட்டதின் கீழ் சிறையில் அடைத்தவர்களும், என்னைக் கண்டித்தவர்களும் இன்றைக்கு நமது மாணவ, மாணவிகளின் மீது நடத்தப்பட்டுள்ள அராஜகத் தாக்குதலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த சிங்கள சுற்றுலா பயணிகளை நாங்கள் திருப்பி அனுப்பியதையே வன்முறை என்று கூச்சலிட்டவர்களும், கண்டித்தவர்களும் இந்த தாக்குதல்கள் பற்றி வாய் திருக்காதது ஏன்? தங்களின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய மாணவர்களிடம் ஆயுதம் இருந்ததா? இல்லையே? பிறகு ஏன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினாய் என்று அமெரிக்கா கேட்கிறது. ஆனால் இந்திய அரசும் இங்குள்ள கட்சிகளும் மெளனம் காக்கின்றனவே, ஏன்? இலங்கையில் வாழ்ந்தாலும், உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எம் தமிழருக்கு இன்னல் விளைவித்தால் அதற்காக நாங்கள் கொதித்தெழுவோம். இப்போதும் கூறுகிறோம், யாழ்ப்பாண மாணவர்கள் மீதான சிங்கள படைகளின் அராஜகம் தொடருமானால் அது இங்கேயும் எதிரொலிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சிங்கள பெளத்த இனவாத அரசின் ஆக்கிரமிப்பில் ஈழத் தமிழினம் சிக்கியிருப்பதாலும், தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டிருப்பதாலும், எம் இனத்தின் விடுதலை போராட்டம் ஜனநாயக வழிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுதான் வருகிறது. ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்கள் இன அழித்தலுக்கு ஆளாக்கப்பட்டதாலேயே எமது விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டுவிட்டது என்று சிங்கள அரசோ அல்லது அதற்கு முட்டுக்கொடுத்து காப்பாற்றிவரும் தெற்காசிய வல்லாதிக்கங்களோ நினைத்துக்கொண்டிருந்தால் அது வெறும் பகல் கனவாக முடியும் என்பதை கூறிக்கொள்கிறோம். தாயக விடுதலைக்காக போராடிவரும் எம்மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி எப்போதும் துணையாக இருந்து போராடும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இனத்தின் விடுதலைப் போராட்டமாகவே நாங்கள் பார்க்கின்றோம். எப்படிப்பட்ட அடக்குமுறையாலும் அதனை ஒடுக்கிவிட முடியாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

English summary
Condemning the brutal assaults on the students of University of Jaffna by the Sri Lanka's police and military apparatus that has been happening with intensity since Tuesday, Naam Thamizhar party leader said in the statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X