For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி ஜெ. அரசு மீதான என் விமர்சனங்கள் அதிகரிக்கும்-கோர்ட்டில் ஆஜரான விஜயகாந்த் பேச்சு

By Chakra
Google Oneindia Tamil News

Vijayakanth
நாமக்கல்: தேமுதிக சார்பில் மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நாமக்கல் குளக்கரை திடலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய்காந்த், முதல்வர் ஜெயலலிதாவிற்கு மக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசியதாக நாமக்கல் மாவட்ட அரசு வழக்கறிஞர் தனசேகரன், மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 5ம் தேதி வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வேலு விசாரித்து விஜயகாந்த் டிசம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினார்.

இதையடுத்து இன்று நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வேலு, விசாரணையை பிப்ரவரி மாதம் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜரானதை பற்றி கேள்விப்பட்டு ஏராளமான தேமுதிக தொண்டர்களும் பொது மக்களும் நீதிமன்றத்தில் திரண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய விஜய்காந்த், மக்கள் நலப் பிரச்சனைகளைப் பேசியதற்காக அரசு என் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளது. மக்கள் நலப் பிரச்சனைகளைப் பேசியதற்கு வழக்கா?.

இந்த அரசு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு வரவில்லை. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள இந்த அரசு பழக வேண்டும். என் மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள். அவற்றை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன்.

விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதுதான் நல்ல அரசுக்கு அழகு. இனி அதிமுக அரசு மீதான என் விமர்சனங்கள் அதிகரிக்கும் என்றார்.

எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்:

இதைடுத்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும். என் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். என் மீது உள்ள வழக்குகளை நீதியரசரும், என் வக்கீலும், பார்த்துக் கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கஞ்சித் தொட்டி திறக்கிறார்கள். இதற்கு காரணம் மின்சாரம் இல்லை என்பதுதான். மின்சாரம் இல்லாததால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை பேசினால் எங்கள் மீது அவதூறு வழக்கு போடுகிறார்கள். முந்தைய ஆட்சியில் 4 மணி நேரம் மின்சாரம் இல்லை. தற்போதைய ஆட்சியில் 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது.

படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கிறது. மின்துறை அமைச்சர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மின்சாரம் கொடுப்போம் என்று பேட்டி கொடுத்துள்ளார். உங்களுக்கு பெரிய 'மாஸ்' இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு வருகிற நாடளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று அதிமுகவினர் பேசிக் கொண்டு வருகிறார்கள்.

ஒரு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆளுங்கட்சியை விமர்சனம் செய்தால் அதற்காக எதிர்க்கட்சியினர் மீதும் எதிர்க்கட்சி எம்.எல.ஏ.க்கள் மீதும் வழக்கு போடுவது எந்த விதத்தில் நியாயம்?. நிரந்தர முதல்வர் அம்மாதான் என்று கூறி வருகிறார்கள். நிரந்தர முதல்வர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்குத்தான் உண்டு.

கடந்த திமுக ஆட்சியில் நீங்கள் (ஜெயலலிதா) எப்படி பேசினீர்கள். உங்கள் மீது ஏதாவது வழக்கு போட்டார்களா? மக்கள் பிரச்சனைக்காக நான் ஜெயிலுக்கு போக பயப்பட மாட்டேன். எத்தனை முறை என் மீது அவதூறு வழக்கு போட்டாலும் மக்களுக்காக நான் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன். எனவே தேமுகவினர் யாரும் பயப்பட வேண்டாம் என்றார்.

மேட்டூர் தேமுதிக எம்.எல்.ஏவுக்கு ஜாமீன்:

இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருக்கும் தேமுதிக எம்.எல்.ஏ பார்த்திபன் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது ஆத்தூர் நீதிமன்றம்.

மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ பார்த்திபன், சேலம் மாநகர் தேமுதிக மாவட்டச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேருக்கு ஆத்தூர் 2வது நீதிமன்ற நீதிபதி முகமது அன்சாரி இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

English summary
DMDK founder president Vijayakanth on Monday appeared before a Namakkal magistrate's court in connection with a case filed by Tamil Nadu government for speaking against CM Jayalalithaa
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X