For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எப்.டி.ஐயால் சீனாவுக்கு தான் லாபம்- உருளைக் கிழங்கு கூட இறக்குமதியாகும்: சுஷ்மா காட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

Sushma Swaraj
டெல்லி: நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்கபோவதில்லை என்று மக்களவையில் பிரதான எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதே கருத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திமுக, மத்திய அரசாங்கத்தை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாடி கட்சி ஆகியவையும் மக்களவையில் எதிரொலித்திருக்கின்றன.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் பயனடையப் போகும் ஒரே நாடு சீனாதான்.. தக்காளி, உருளைக் கிழங்கைக் கூட பெரு நிறுவனங்கள் இறக்குமதி செய்யத்தான் போகின்றன என்று மக்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் காட்டமாகப் பேசினார்.

மக்களவையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்காக அனுமதி கொடுக்கும் விவகாரத்தின் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்து சுஷ்மா ஸ்வராஜ் பேசியதன் முக்கிய அம்சங்கள்:

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் இந்திய விவசாயிகளுக்கு ஒரு பயனும் ஏற்படாது. வால்மார்ட் இயங்கும் அமெரிக்காவில் கூட 'சிறு வியாபாரிகளுக்கான நாள்' என்று ஒன்றையே அதிபர் ஒபாமா உருவாக்கியிருக்கிறார். அந்த தினத்தில் வால்மார்ட் போன்ற பெரு நிறுவனங்களில் விற்பனைகளுக்கு தடை போடப்படுகிறது.

வால்மார்ட் நிறுவனத்தால் அமெரிக்காவில் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

வால்மார்ட் செயின் போன்ற சங்கிலித் தொடர் அங்காடிகளை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களே கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த நிறுவனங்களை அனுமதித்தால் அவர்கள் நமது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப் போவதில்லை. விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக சீனாவிடமிருந்தே கொள்முதல் செய்வர். தக்காளி, உருளைக் கிழங்குகளைக் கூட அவர்கள் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்வார்கள்- மெக்டொனால்ட் போன்ற நிறுவனங்கள் இப்போதும் உருளைக் கிழங்கை இறக்குமதி செய்து கொண்டுதான் இருக்கின்றன.

நமது நாட்டில் இத்தகைய பெரு நிறுவனங்களை அனுமதித்தால் இந்திய உற்பத்தித்துறையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். இந்த நிறுவனங்களால் அதிகமான லாபமடையப் போவது சீனாதான். அங்கிருந்துதான் அனைத்தையும் இறக்குமதி செய்வார்கள்.

இத்தகைய பெரு நிறுவனங்கள் பொதுவாக உறுதிமொழிகளை கொடுத்தாலும் அவற்றை கடைபிடிப்பதில் நிறைவேற்றுவதில் அக்கறை காட்டப் போவதில்லை..- நாட்டின் ஏழை மக்களுக்கான அரசாங்கம்தான் தேவையே தவிர, பன்னாட்டு நிறுவனங்களுக்காக ஒரு அரசாங்கம் தேவையில்லை.

ஒரு வால்மார்ட் கடையில் 214 ஊழியர்களே சராசரியாக உள்ளனர். ஆனால், அன்னிய முதலீட்டை அனுமதித்தால் 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய அரசு சொல்கிறது. எங்கிருந்து இந்த வேலைவாய்ப்புகள் உருவாகும்?.

அதே போல இந்த நிறுவனங்கள் தான் விவசாயிகளிடம் விலையைக் கூட நிர்ணயிப்பார்கள். விவசாயிகளுக்கு குறைந்த விலையைத் தருவார்கள், ஊழியர்களுக்குக் கூட குறைந்த ஊதியமே கொடுப்பார்கள். ஆனால், நிறைந்த லாபம் மட்டும் பார்ப்பார்கள். இது தானே உலகம் முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் நடக்கிறது.

இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு முன்பு, அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்தார். ஆனால் அந்த உறுதி மொழியை மறந்துவிட்டு, மத்திய அரசு தானாகவே அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்துவிட்டது

பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களுக்கு அரசு அடிபணியக் கூடாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அன்னிய நேரடி முதலீட்டை நிராகரித்திருப்பது சரியான முடிவுதான் என்றார் சுஷ்மா.

சுஷ்மாவின் பேச்சுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் அவ்வப்போது மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. அவர்களை சபாநாயகர் மீராகுமார் அமைதிப்படுத்தினார். பின்னர் சுஷ்மா தனது விவாதத்தைத் தொடர்ந்தார்.

'விதேசி' காங்கிரஸ்

இதேபோல் மத்திய அரசை ஆதரிக்கும் சமாஜ்வாடியின் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசினார். மகாத்மா காந்தி காலத்தில் சுதேசி கொள்கை கடைபிடிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி விதேசி கொள்கையைக் கடைபிடிக்கிறது என்றார்.

திமுகவின் எதிர்ப்பும் ஆதரவும்..

இன்றைய விவாதத்தின் போது பேசிய திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை கடுமையாக எதிர்த்துப் பேசினார். ஆனாலும் அரசாங்கத்தை தொடர்ந்து ஆதரிப்போம் என்றார்.

கபில்சிபல் பதில்:

இந்த விவாதத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் கபில் சிபல், பெரு நகரங்களில் மட்டுமே அன்னிய நேரடி முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ள நகரங்களில் மட்டுமே அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்படும். அன்னிய நேரடி முதலீட்டை அமல்படுத்த மாநில அரசுகள் கட்டாயப்படுத்தப்படாது. ஆனால், இந்த அன்னிய நேரடி முதலீட்டு விவகாரத்தை அரசியலாக்க பாஜக முயற்சிக்கிறது. இதே பாஜகதான் தமது தேர்தல் அறிக்கையில் அன்னிய முதலீட்டைக் கொண்டுவருவோம் என்று உறுதியளித்திருந்தது என்று குறிப்பிட்டு அதை வாசித்தும் காண்பித்தார்.

இந்த விவாதத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

முன்னதாக பிற்பகலில் அவை கூடியதும் ஃபெமா சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் பற்றியும் அன்னிய நேரடி முதலீடு விவாததுடன் இணைத்து விவாதிப்பது தொடர்பாக அமளி ஏற்பட்டது. பெமா திருத்தம் பற்றி தனியே விவாதிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தின. இதனால் கடும் அமளி நீடித்தது.

பின்னர் இரண்டின் மீதும் கூட்டாக விவாதம் நடைபெறும் என்றும் ஒரே நேரத்தில் வாக்கெடுப்பும் நடத்தப்படும் என்றும் சபாநாயகர் மீரா குமார் அறிவித்தைத் தொடர்ந்து விவாதம் தொடங்கியது.

English summary
Opening the big debate on the UPA government’s decision to allow the FDI in the multi-brand retail, Leader of Opposition in Lok Sabha Sushma Swaraj on Tuesday slammed the government for taking the decision unilaterally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X