திருவள்ளூரில் பல்லி விழுந்த சாம்பார் சாப்பிட்ட 20 பேர் வாந்தி மயக்கம் !
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பல்லி விழுந்த சாம்பார் சாப்பிட்ட 20 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் செந்தில் (33) என்பவர் ஓட்டல் நடத்துகிறார். இன்று காலை திருப்பாச்சூரை சேர்ந்த தேன்செல்வி என்பவர் இட்லி வாங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று தனது குழந்தைகள் சந்திரலேகா (5), ஸ்ரீலேகா (3) ஆகியோருக்கு ஊட்டினார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டது. அப்போது தேன்செல்வி சாம்பாரில் பல்லி செத்துகிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே ஓட்டலுக்கு வந்து சாம்பாரை காட்டி யாரும் சாப்பிடாதீர்கள் என்று சத்தம் போட்டார்.
இதனிடையே இதே ஓட்டலில் சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோர் உடனடியாக வாந்தி எடுக்கவே அவர்கள் அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 10 குழந்தைகள் குழந்தைகள் நல பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹோட்டல் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருவள்ளூர் வட்டாட்சியர் புண்ணியகோட்டி மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தால் திருவள்ளூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.